சேவல் சண்டை
சேவல் சண்டை என்பது தமிழ்நாட்டின் நடத்தப்பட்ட ஒரு விளையாட்டாகும். இது சல்லிக்கட்டு போல தமிழர்களின் வீர விளையாட்டுகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் சேவல் சண்டை நடைபெற்றமைக்கான சான்றாக சேவல் நடுகல் கிடைத்துள்ளது. பட்டினப்பாலை, திருமுருகாற்றுப்படை போன்ற பழந்தமிழ் நூல்களில் சேவல் சண்டை குறிப்பிடப்பட்டுள்ளன. இதே போன்ற விளையாட்டுகள் வட அமெரிக்கா, ஆசியாவின் பல பகுதிகளிலும் நடத்தப்படுகின்றன.
சொற்பிறப்பியல்
[தொகு]சேவல் சண்டை என்பது இரு சேவல்களிடையே நடைபெறும் சண்டையாகும். இயற்கையாக சேவல்கள், பெட்டைகளோடு இணை சேர்வதற்காக தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன. இந்தச் சண்டையில் வெற்றி பெரும் சேவல் பெட்டையுடன் இணை சேர்கிறது.
இந்த சேவல் சண்டையை சேவல்கட்டு, சாவக்கட்டு என்றும் அழைக்கின்றனர். சண்டைக்காக சேவல்களை தயார் செய்ய சேவல்கள் கட்டுத்தரை எனுமிடத்தில் கட்டப்படுகின்றன. இதனால் சண்டை சேவல்களை "கட்டு சேவல்கள்" என அழைக்கும் வழக்கம் உள்ளது. கட்டு சேவல்கள் சண்டையிட்டுக் கொள்வதால் சேவல்கட்டு என்று அழைக்கின்றனர். இதில் சாவக்கட்டு என்பது சேவற்கட்டு என்ற சொல்லிலிருந்து வந்த திரிபாகக் கருதப்படுகிறது.
வரலாறு
[தொகு]சிந்து சமவெளி நாகரிகத்தில் சேவல் முத்திரைகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.[1] கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிறுவப்பட்ட சேவலுக்கான நடுகல் வரையில் சண்டைச் சேவல் குறித்த தகவல்கள் உள்ளன.[2]
சங்ககாலத்தில்
[தொகு]கோழிகளில் ஆண்கோழி சேவல் எனப்படும். ஆண் கோழிகள் தன் பெண் கோழியின் ஆதிக்க உரிமைக்காகப் பிற ஆண் கோழிகளோடு சண்டையிட்டுக் கொள்ளும். இந்தச் சண்டையை யாராலும் விலக்க முடியாது.[3]
புகார் நகரத்து மக்கள் சங்ககாலத்தில் கண்டு களித்த விளையாட்டுகளில் ஒன்று கோழிச்சண்டை [4][5]
கீழச்சேரி மேலச்சேரி
[தொகு]பண்டைய தமிழகத்தில் கீழச்சேரி, மேலச்சேரி என்ற இடங்களில் சேவல் சண்டை நடைபெற்றுள்ளது. தொல்காப்பியம் மற்றும் நன்னூல் போன்றவற்றில் கீழச்சேரி, மேலச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்ற சேவல் சண்டையைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
நடுகற்கள்
[தொகு]தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகேயுள்ள அரசலாபுரம் என்ற ஊரில் சேவல் நடுகல் ஒன்று கிடைத்துள்ளது.[6] இதன் காலம் கிபி. ஐந்தாம் நூற்றாண்டு என வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.[7] அதில் முகையூர் என்ற பகுதியில் மேலச்சேரி என்ற பகுதி சார்பாகப் போரிட்டு மாண்ட சேவலுக்காக வைக்கப்பட்ட குறிப்புகள் கிடைத்துள்ளன. பொதுவாக தமிழர்கள் மரபில் போரில் இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் வைக்கப்படுவது வழக்கம். அதே போல சேவலுக்கும் நடுகல் வைக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் சேவல் சண்டைக்கான முக்கியத்துவத்தினை தெரிவிக்கிறது.
இந்தளுர் பகுதியில் கிடைத்த சேவல் நடுகல்லில் வீரமரணம் அடைந்த சேவலின் பெயர் "பொற்கொற்றி" என்றும், அச்சேவல் கீழச்சேரி எனும் இடத்தைச் சேர்ந்தது எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
பாளைக்காரர்கள்
[தொகு]தமிழகத்தில் பாளையக்காரர்கள் எனும் பிரிவினர் தங்களுக்குள் சேவல் சண்டை விளையாட்டினை வைத்துக் கொண்டார்கள்.[8] இதற்காக எட்டயபுரம் அரண்மையில் சண்டை சேவல்கள் பராமரிக்கப்பட்டன.
கோழிக் காலில் கத்தி கட்டி விளையாட விட்டும், கத்தி இல்லாமல் விளையாட விட்டும் வேடிக்கைப் பார்ப்பது வழக்கம். தமிழ்நாட்டில் இது பரவலாக அண்மைய காலம் வரையில் விளையாடப்பட்டு வந்தது.[9]
விளையாட்டு நடைபெறும் காலம்
[தொகு]சேவல் சண்டையானது தமிழர்களின் அறுவடை திருநாள் களிப்பாட்டங்களில் ஒன்றாகும். காளைகளைக் கொண்டு ஏறுதழுவுதல், ஆடுகளைக் கொண்டு கிடா சண்டை நடத்தப்படுவதைப் போல சேவல்களைைக் கொண்டு சேவல் சண்டை நடத்தப்படுகின்றன. காணும் பொங்கலன்று தமிழகத்தின் சில பகுதிகளில் சேவல் சண்டை நடத்தும் வழக்கம் இருக்கிறது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசு, கோவிலூர் போன்ற பகுதிகளில் கத்திக்கட்டு சேவல் சண்டை அனுமதியோடு நடத்தப்படுகிறது.
வகைகள்
[தொகு]இந்த சேவல் சண்டை விளையாட்டில் இரு வகைகள் உள்ளன.
- . கத்திக் கால் சண்டை
- . வெத்துக் கால் சண்டை
கத்திக் கால் சண்டை
[தொகு]பெயரில் உள்ளவாறு சேவல்களின் கால்களில், அதற்கென உள்ள சிறுகத்திகள் கட்டப்பட்டு, சண்டைக்கு விடும் வகை கத்திக் கால் சண்டையாகும். இதனை கத்திக்கட்டு என்றும் அழைக்கின்றனர். இதில் சேவலைக் கையில் ஏந்தியபடி எதிர் சேவலை மோதல் காட்டி கீழே தரையில் விட்டபின் சேவல்கள் ஆக்ரோசத்துடன் மோதும். சேவல்களின் கால்களில் உள்ள கத்தி எதிர் சேவலின் மீது பட்டு காயங்களினால் சேவல் சோர்வடைந்து வீழும் அல்லது களத்தைவிட்டு ஓடும் சேவல் தோல்வியடைந்ததாக கருதப்படும். இந்த வகைச் சண்டையில் சில சமயங்களில் கத்தியால் காயம்பட்ட சேவல்கள் இறப்பதும் உண்டு.
வெப்போர் சண்டை அல்லது வெத்துக்கால் சண்டை
[தொகு]வெற்றுக்கால் சேவல் சண்டை அல்லது வெப்போர் என்னும் சேவல் சண்டையில் சேவலின் காலில் கத்தியைக் கட்டாமல் வெற்றுக் கால்களுடன் போட்டி நடக்கும். வெப்போர் சேவல் சண்டைக்கு அசில் வகை சேவல்களை அதிகம் பயன்படுத்துவர். அதற்கு காரணம் அவற்றின் உடல்வாகும், போர்க் குணமும் ஆகும். மேலும் அதன் கால் பகுதியில் கட்டை விரலுக்கு மேலே, அம்பின் முனைபோல் வளரும் ‘முள்’ அமைப்பும் முக்கிய காரணம். இதில் பெரிய சேவல், சின்ன சேவல் என பிரித்து போட்டிக்கு விடப்படும். நடைபெறும் போட்டியில் ஒவ்வொரு சேவலுக்கும் ஒரு மணி நேரம் வழங்கப்படும். மூக்கை கீழே வைத்தாலோ, ஓட்டம்பிடித்தாலோ அந்த சேவல் தோல்வியை தழுவியதாக கருதப்படும்.[10]
வெப்போர் சேவல்கள் கழுத்து மற்றும் தலையினை மட்டுமே பெரும்பாலும் தாக்கும். மற்ற இடங்களில் அடித்தால் எதிரியை வெல்லவோ கொல்லவோ முடியாது.[11]
விளையாட்டு முறை
[தொகு]போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு போட்டியாளர்களும் தங்களது சேவல்களை களத்தில் நேருக்கு நேர் பார்க்கும்படி நிறுத்திவிட்டு, பிறகு கையில் எடுத்துக்கொள்வர். இதற்கு நடவு விடுதல் என்று பெயர்.[12] இதன் மூலம் சேவலுக்கு எதிரி அடையாளம் காட்டப்படுகிறது. பின்னர் இரு சேவல்களையும் அருகே நெருங்கவிட்டு உசுப்பேற்றி அவை ஆவேசம் அடையந்தது ஒன்றையொன்றை தாக்க ஓடி வரும்போது போட்டியாளர்கள் தங்களது சேவல்களை சண்டையிடாமல் கையில் பிடித்துக்கொள்வர். இதற்கு முகைய விடுதல் என்று பெயர்.[12] அதன்பின்பு இரு சேவல்களையும் மோத விடுவர். இதற்கு பறவை இடுதல் என்று பெயர்.[12]
சண்டையின்போது சேவல்கள் மோதிய பிறகு களத்தில் இருந்து ஓடவோ, அல்லது மூக்கை மண்ணில் படாமலோ களைத்துப் போயிருந்தால், சேவல் விடுபவர்கள், தொடர்ந்து அவை சண்டையிடாமல் செய்து, அவற்றிற்கு தண்ணீர் தந்தும், ஈரத்துணியால் காயங்களைத் துடைத்தும், மருந்திட்டும், முதுகில் தட்டிக் கொடுத்தும் களைப்பை போக்கி மீண்டும் களத்தில் விடுவர். 15 நிமிடம் சண்டை, 15 நிமிடம் இடைவேளை என இந்த சண்டை சுமார் ஒன்றேமுக்கால் மணிநேரம் நடக்கும்.[12]
எதிரி பறக்கும் உயரம், தாக்கும் வேகம், எதிரியின் முள் குறி வைக்கும் உடல் பாகம் ஆகியவற்றை உடனுக்குடன் துல்லியமாக கணிக்கும் சேவல்கள், அதன் பின்னர் எதிரியை எப்படி அடிக்க வேண்டும் என்று உடனே கணித்து, பறந்து சென்று எதிரியின் கழுத்து மற்றும் தலையை குறிவைத்து அடித்து எதிரியை வீழ்த்துகின்றன.[12]
தடை
[தொகு]இந்தியா சுதந்திரம் அடையாமல் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருக்கும் போது கிபி 1879 ஆம் ஆண்டு சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டது.[13] இந்த தடை சில காலம் நீடித்தது.
பிற்காலத்தில் இது சூதாட்டம் போன்ற நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனால் இந்த விளையாட்டில் இரு பிரிவினர்களுக்கிடையே மோதல், கலவரம் என நடந்ததைத் தொடர்ந்து இவ்விளையாட்டிற்கு தமிழ்நாடு காவல்துறை தடை விதித்துள்ளது.
இலக்கியங்களில்
[தொகு]- "உறைக்கிணற்றுப் புறச் சேரி
மேழகத் தகரோடு சிவல் விளையாட" - பட்டினப்பாலை
- "உய்த்தனர் விடா ஆர் பிரித்து இடைகளையார்
குப்பைக் கோழித் தனிப்போர் போல" - குறுந்தொகை 305:6
- சேவல் கட்டு - ம. தவசி - இது சேவல் சண்டையை பின்னனியாகக் கொண்ட புதினம்.[14]
- கற்பனைச் சேவல் - எஸ்.ராமகிருஷ்ணன் - இது சேவலை சண்டைக்கு வளர்க்கும் நபரைப் பற்றியச் சிறுகதை.[14]
திரைப்படம்
[தொகு]- தமிழில் 2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் எனும் திரைப்படம் தமிழக தென்மாவட்டங்களில் நடைபெறும் வெற்றுக்கால் சேவல் சண்டையை மையக் கதையாக வைத்து எடுக்கப்பட்டது.[14]
- மலையாளத்தில் 2001 ஆண்டு வெளிவந்த ஜெயராஜின் கண்ணகி திரைப்படமானது சேக்ஸ்பியரின் ஆண்டனி அண்டு கிளியோபட்ரா நாடகத்தைத் தழுவி எடுக்கபட்டது. ஆனால் இந்த படத்தின் முக்கியக் கூறாக சேவல் சண்டை உள்ளது.[15]
புகைப்பட தொகுப்பு
[தொகு]-
விளையாடவிட்டு வேடிக்கை பார்க்கும் கோழி (சேவல்) சண்டை
-
சண்டைக்காக வளர்க்கப்படும் சேவல்
-
சண்டையின் போது சேவலின் காலில் கட்டப்படும் கத்திகள்
-
சண்டையின் போது சேவலின் காலில் கட்டப்படும் கத்தி
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ மார்ஷல் முத்திரை எண் 338
- ↑ இரா.சிவசித்து (29 செப்டம்பர் 2018). "சிந்துச் சமவெளிச் சண்டைச் சேவல்கள்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑
குப்பைக் கோழித் தனிப் போர் போல,
விளிவாங்கு விளியின் அல்லது,
களைவோர் இலை (குறுந்தொகை 305) - ↑ கோழி என்னும் சொல்லே சேவலைக் குறிக்கும்
- ↑
பறழ்ப் பன்றி, பல் கோழி,
உறைக் கிணற்றுப் புறச் சேரி,
மேழகத் தகரொடு சிவல் விளையாட (பட்டினப்பாலை 75) - ↑ https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=19417&cat=1
- ↑ சேவல் கொடி 03: சோழனுடன் போரிட்ட சேவல் - இரா.சிவசித்து - இந்து தமிழ் திசை நாளிதழ் - 13 அக்டோபர் 2018
- ↑ https://tamil.thehindu.com/general/environment/article25410418.ece
- ↑ Cockfight
- ↑ "தஞ்சாவூர் அருகே விளாரில் சேவல் சண்டை போட்டி: 1,500 சேவல்கள் பங்கேற்பு". செய்தி. தி இந்து. 12 பெப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 12 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ https://tamil-desiyam.com/seval-sandai-in-tamil/
- ↑ 12.0 12.1 12.2 12.3 12.4 எஸ்.கோபு (17 சனவரி 2018). "ஆக்ரோஷ கொக்கரக்கோ: உடலே ஆயுதம்.. உடனே வியூகம்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 17 சனவரி 2018.
- ↑ https://tamil.thehindu.com/general/environment/article25524533.ece
- ↑ 14.0 14.1 14.2 கட்டுரை: சேவல் கொடி 01: கதைகளில் சீறும் சேவல்கள்- கட்டுரையாசிரியர் : இரா. சிவசித்து - இந்து தமிழ் திசை 30 செப்டம்பர் 2018
- ↑ சேவல்கட்டை அனுமதிக்க ஏன் அரசு தயங்குகிறது?, கட்டுரை, செ. இளவேனில், இந்து தமிழ் (நாளிதழ்), 2021 சனவரி 14