உள்ளடக்கத்துக்குச் செல்

சேத்ரையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேத்ரையா ( Kshetrayya) (சுமார் 1680 பொ.ஊ) ஒரு தெலுங்குக் கவிஞர் ஆவார்.[1] இவர் தென்னிந்தியாவிலுள்ள ஆந்திரப் பிரதேசத்தைச் சேந்தவர். இவர் பல பதங்களையும் கீர்த்தனைகளையும் இயற்றியுள்ளார். தெலுங்கு மொழியில் 4000 க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை இயற்றியிருந்தாலும், அவற்றில் ஒரு சில பாடல்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. கிருட்டிணன் மீது பல பாடல்களை இயற்றினார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள முவ்வா என்ற கிராமத்தில் தெலுங்கு பேசும் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் இவருக்கு வரதையா என்று பெயரிட்டனர். கோயில்களில் பாடல்களைப் பாடி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும் இவரது பழக்கத்தின் காரணமாக, இவர் ‘சேத்ரக்சனா’ அல்லது ‘சேத்ரையா’ (பயணம் செய்பவர்) என்று அழைக்கப்பட்டார். இவர் மோகனாங்கி என்ற ஒரு தேவதாசியை மணந்தார். 72-மேளகர்த்தாக்களின் ஆசிரியரான வெங்கி தமாகி என்பவரிடம் இசையைக் கற்றுக்கொண்டார்.

பதங்கள்[தொகு]

இன்றும் பயன்படுத்தப்படும் பதங்களை இவர் முழுமையாக்கினார். இவரது பதங்கள் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி மற்றும் இசை உரைகளில் பாடப்படுகின்றன. முதலில் அனுபல்லவி, பின்னர் பல்லவி என பாடும் நடைமுறை இவரது பதங்களின் தனித்துவமான அம்சமாகும். பெரும்பாலான பதங்கள் கடவுள் கிருட்டிணரின் வருகைக்கான ஏக்கத்தை கருப்பொருளாகக் கொண்டுள்ளன.

சிருங்காரம்[தொகு]

மதுரபக்தி எனப்படும் சிருங்காரத்தை ஒரு முக்கிய கருப்பொருளாக கொண்டு இவர் எழுதினார். சிருங்காரம் என்பது ஒரு நாயகிக்கும் (பெண்) ஒரு நாயகனுக்கும் (ஆண்) இடையிலான உலகளாவிய பாலியல் உறவை ஒரு உருவகமாகப் பயன்படுத்துவதாகும். இது ஜீவாத்மாவின் ஏக்கத்தைக் குறிக்கிறது. தனது பெரும்பாலான பாடல்களில், சேத்ரையா தனது முத்திரையில் ‘முவ்வா கோபாலா’ என தன்னைப் பற்றிய குறிப்பாகப் பயன்படுத்தியுள்ளார்.

படைப்புகள்[தொகு]

தென்னிந்திய பாரம்பரியத்தின் கவிதை, நடனம், இசை ஆகியவற்றில் செல்வாக்கு செலுத்துவதில் சேத்ரையாவின் படைப்புகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. சேத்ரையா தென்னிந்தியக் கோயில்களில் திருப்பணிக்காகவும் சேவைக்காகவும் சிறுவயதில் நேர்ந்து விடப்பட்ட தேவதாசி பெண்களுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார். அவர்கள் இவரது பல படைப்புகளை பயன்படுத்தினர். தேவதாசி முறை ஒழிக்கப்பட்டு, பாடல்கள் இசை சமூகத்தில் மதிப்புமிக்க கலைப் படைப்புகளாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை நீண்ட காலத்திற்கு இவரது படைப்புகளின் இசை/கவிதை விளக்கங்களை தேவதாசி பாரம்பரியமாக வைத்திருந்தனர். வீணை தனம்மாள்[2];[3] மற்றும் டி. பிருந்தா ஆகியோர் சேத்ரையாவின் பாடல்களை தங்கள் அழகான இசை விளக்கத்துடன் பிரபலப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

சேத்ரையாவின் பதங்கள் இப்போது தென்னிந்தியாவின் நடனம் மற்றும் இசை பாரம்பரியங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளன. அங்கு இவரது பாடல்கள் முற்றிலும் இசைப் படைப்புகளாகவும் அல்லது நடனத்துடன் இணைந்து பாடப்படுகின்றன.

தெலுங்குத் திரைப்படம்[தொகு]

அஞ்சலி பிக்சர்ஸ் தயாரிப்பில் மகாகவி சேத்ரையா என்ற தெலுங்குத் திரைப்படம் 1976 ஆம் ஆண்டு வெளியானது. இதில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் அஞ்சலி தேவி ஆகியோர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் வி. ராமகிருஷ்ணா படத்தின் ஒலிப்பதிவை மேற்கொண்டார். பி. ஆதிநாராயண ராவ் இசையமைத்துள்ளார்.

வாழ்க்கை வரலாற்றுப் புதினம்[தொகு]

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதியிலுள்ள சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியரும் முன்னாள் துணைவேந்தருமான எம். வி. ராம சர்மா எழுதிய பிளிஸ் ஆஃப் லைஃப் என்ற புதினத்தில் சேத்ரையாவின் வாழ்க்கை சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kamath, Harshita Mruthinti. "Kṣētrayya: The making of a Telugu poet" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-04.
  2. "பிருந்தா-முக்தா" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-04-17.
  3. " Veena Dhanammaal"
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேத்ரையா&oldid=4034555" இலிருந்து மீள்விக்கப்பட்டது