உள்ளடக்கத்துக்குச் செல்

சுலோச்சன முதலியார் பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுலோச்சன முதலியார் பாலம் (Sulochana Mudhaliar bridge) (வண்ணாரப்பேட்டை பாலம் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும்வகையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு பழமையான பாலமாகும். இந்தப் பாலம் 1884 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம் (History of Tinnevelly) என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

வரலாறு

[தொகு]

அக் காலத்தில் பாளையங்கோட்டையிலிருந்து திருநெல்வேலிக்கு சென்றுவர மக்கள் தாமிரபரணி ஆற்றைக் கடக்கவேண்டி இருந்தது. ஆற்றைக் கடக்க படகிலே அல்லது நீந்தியோ செல்லவேண்டி இருந்தது. இதனால் தாமிரபரணியின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்துக்கு, அன்றைய நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆர். ஈடன் 1836 ஆம் ஆண்டு கடிதம் எழுதினார். ஆனால், இக்கடிதத்தை கிழக்கிந்திய கம்பெனி அரசு பொருட்படுத்தவில்லை. ஆர். ஈடனுக்குப் பிறகு, 1840 மார்ச் 5 அன்று நெல்லை மாவட்ட ஆட்சியராக ஈ. பி. தாம்சன் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்ற சில நாட்களில் அங்குள்ள படகுத் துறையில் ஒரு பெரிய கலவரம் வெடித்து, சிலர் கொல்லப்பட்டனர்.[2]

போதுமான போக்குவரத்து வசதி இருந்திருந்தால் இந்த உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம் என நினைத்த தாம்சன், பாலம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார், கூட்டத்தில் பாலம் கட்ட வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தில் தாம்சனின் கீழ் சிரஸ்தாராகப் பணியாற்றிய பரம்பரைப் பணக்காரரான சுலோக்சன முதலியாரும் (சிரஸ்தார் பதவி இன்றைய வட்டாட்சியர் பதவிக்கு இணையானது) கலந்துகொண்டார்.

இரட்டை நகரங்களை இணைக்கும் சுலோச்சன முதலியார் பாலமும் அங்கிருந்து தெரியும் நகரின் காட்சியும்

கூட்டத்தின் முடிவின்படி இலண்டன் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தை ஒத்த வடிவமைப்பில் பாலத்தின் வரைபடமும், கட்ட 50 ஆயிரம் ரூபாய் செலவில் மதிப்பீடும் தயாரிக்கப்பட்டு அரசிடம் தெரிவிக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி அரசு அவ்வளவு பெரிய தொகையைச் செலவு செய்யத் தயங்கியது. அந்தப் பாலத்தால் மக்களுக்குத்தான் பலன் என்பதால், மக்களிடமே பணம் வசூலித்துக் கட்டலாம் என்று ஆட்சியர் தாம்சன் முடிவுசெய்தார். பணம் வசூலிக்கும் பொறுப்பு சுலோச்சன முதலியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மக்களிடம் பாலத்துக்காக பணம் வசூலிக்க விரும்பாத சுலோச்சன முதலியார் தானே முழுப் பணத்தையும் செலவு செய்ய முடிவெடுத்தார். தன் மனைவி வடிவாம்பாளிடம் இருந்த நகைகளையும், தன்னிடமிருந்த சொத்துகளையும் விற்று அரசிடம் பாலத்தைக் கட்டும்படி சொன்னார்.

இதனையடுத்து 760 அடி நீளம், 21.5 அடி அகலம், 60 அடி விட்டத்தில் 11 வளைவுகள், அவற்றைத் தாங்க இரட்டைத் தூண்களுடன் பாலம் நான்கு வருடங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டது. 1843 ஆம் ஆண்டு இந்தப் பாலம் திறக்கப்பட்டது. அந்தப் பாலத்தின் திறப்பு விழாவில், தனிநபராக அதற்கு உதவிய சுலோச்சன முதலியாரை ஆங்கிலேய அரசு கவுரவித்தது. மேலும் அவரைப் பாராட்டும் வகையில் பாலத்தின் முகப்பில் 20 அடி உயரக் கோபுரம் அமைக்கப்பட்டு, சுலோச்சன முதலியாரின் உதவியை விவரித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட ஒரு மீட்டர் அகலம் கொண்ட கல்வெட்டு அதில் பதிக்கப்பட்டது. அந்தக் கல்வெட்டு 1970 வரை இருந்தது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. முகமது ஹுசைன் (12 மே 2018). "பத்து தலைமுறைகளின் பாலம்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 13 மே 2018.
  2. சா. ஷேக் அப்துல் காதர் (25 திசம்பர் 2017). "தெரிந்த பெயர், தெரியாத விவரம்: சுலோச்சன முதயார் பாலம்-175!". கட்டுரை. தினமணி. பார்க்கப்பட்ட நாள் 13 மே 2018.
  3. ஆண்டனிராஜ் (28 நவம்பர் 2016). "இந்த 174 வயது பாலத்துக்கு பின்னால்.... மறக்கப்பட்ட தமிழனின் வரலாறு !". கட்டுரை. ஆனந்த விகடன். பார்க்கப்பட்ட நாள் 13 மே 2018.