சுரு பள்ளத்தாக்கு
சுரு பள்ளத்தாக்கு (Suru valley) என்பது இந்தியாவின் சம்மு காசுமீர் மாவட்டத்திலுள்ள லடாக் பகுதியில் அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்கு ஆகும், சிந்து நதியின் முக்கிய கிளை ஆறான சுரு ஆறு இப்பள்ளத்தாக்கின் வழியாக பாய்ந்து செல்கிறது.
மக்கள்
[தொகு]தார்டு மற்றும் திபெத்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் 25,000 பேர் சுரு பள்ளத்தாக்கில் வசிக்கின்றனர். இப்பள்ளத்தாக்கின் தாழ் பகுதிகளான சாங்கு, பானிக்கார், பார்காசிக்கின் தென்பகுதி போன்ற இடங்களிலும் கார்கில்லிலும் வசிக்கும் மக்களில் பெரும்பாலோர் சியா பிரிவு இசுலாம் இனத்தைச் சேர்ந்தவர்களாவர்[1]. பார்காசிக்கிற்கு அப்பால் கடல் மட்டத்திலிருந்து 3657 மீட்டர் உயரத்தில் இரேங்தம் என்ற தனிமையான குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. மிகச் சிறிய யல்தோ, யுலிதோக் குடியிருப்பினர் தவிர இப்பகுதியில் அதிகமான மக்கள் எவரும் வசிக்கவில்லை. இங்குள்ள மக்கள் சமூக மற்றும் கலாச்சாரத்தில் திபெத்திய பௌத்தத்தின் கெலுக்பா பிரிவினருக்குச் சொந்தமான 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரேங்தம் மடாலயத்தை ஆதரிக்கின்றனர். இரேங்தம் மடாலயத்திற்கு தெற்கே 25 கிலோமீட்டர் தொலைவில் கடல் மட்டத்திற்கு 4400 மீட்டர் உயரத்தில் பென்சி லா கணவாய் சான்சுகாரை இணைக்கிறது[2].
நிலமும் விவசாயமும்
[தொகு]3,000 மீட்டர் (9,843 அடி) உயரத்திற்கும் குறைவான பள்ளத்தாக்கின் கீழ் பகுதி லடாக்கின் முக்கிய விவசாய உற்பத்தி செய்யும் பகுதிகளில் ஒன்றாகும், இப்பகுதியில் ஆண்டுக்கு இரண்டு போகம் பயிர்கள் அறுவடை செய்யப்படுகின்றன, மிகவும் கடுமையான குளிர்கால பனிப்பொழிவுகளிலிருந்து இவ்விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்கிறது[3]. வில்லோ, பாப்லர் மரங்கள் நன்கு பசுமையாக தழைத்து இப்பகுதியை கவர்ச்சிகரமாக ஆக்குகின்றன. ஆனால் இரேங்தம்மைச் சுற்றியுள்ள நிலப்பரப்புகள் வறண்டும் விளைச்சலற்ற நிலப்பரப்பாகவும் உள்ளன[4]. 7000 மீட்டர் உயரத்தில் உள்ள நன்-குன் பாறைத் தொகுதி வெண்மையான கூர்முனை சிகரங்கள் பள்ளத்தாக்கின் பல இடங்களிலிருந்தும் தெரிகின்றன.
சுற்றுலா
[தொகு]கணிசமான ஆற்றல் இருந்தபோதிலும், பள்ளத்தாக்கில் சுற்றுலா நடவடிக்கைகள் மிகவும் குறைவாகவே உள்ளன, பெரும்பாலான பார்வையாளர்கள் பதும் மற்றும் சான்சுகருக்கு சுற்றுலா செல்கின்றனர். இங்கு பார்வையாளர்களுக்கென சில வசதிகள் உள்ளன[5], ஆனால் சம்மு-காசுமீர் சுற்றுலாவில் அடிப்படை சுற்றுலா பங்களாக்கள் பல கிராமங்களில் உள்ளன. இரேங்தம்மில் ஒரு கோடைகால கூடாரம் முகாம் உள்ளது. நன் குன் வரை மலையேறும் பயணங்களுக்கு டாங்கோல் கிராமம் ஒரு தொடக்க புள்ளியாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- Janet Rizvi. (1996). Ladakh: Crossroads of High Asia. Second Edition. Oxford University Press, Delhi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-564546-4.
- Schettler, Margaret & Rolf (1981). Kashmir, Ladakh & Zanskar. Lonely Planet Publications. South Yarra, Victoria, Australia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-908086-21-0.