சீயமங்கலம் குடைவரைக் கோயில்
சீயமங்கலம் குடைவரைக் கோயில் திருவண்ணாமலை மாவட்டத்தின் வந்தவாசி வட்டத்தில் உள்ள தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சீயமங்கலம் கிராமத்தில் உள்ள ஒரு குடைவரைக் கோயில்.
இக்குடைவரைக்கு முன்னுள்ள ஏரியின் நடுவில் தூண்போன்ற அமைப்பில் நிலைக்குத்தாகப் பாறைகள் காணப்படுவதால், இக்குடைவரைக் கோயிலில் உள்ள இறைவனை வடமொழியில் "ஸ்தம்பேஸ்வரர்" எனவும் தமிழில் "தூணாண்டவர்" என்றும் அழைப்பதுண்டு.
இக்குடைவரையில் காணப்படும் கல்வெட்டு இக்கோயில் அக்காலத்தில் "அவனிபாஜன பல்லவேஸ்வரம்" (Avanibhajana Pallaveshwaram Temple) என அழைக்கப்பட்டதைக் காட்டுகின்றன. இக்கோயில் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டபோதிலும், பிற்காலத்திலும் பல்வேறு கால கட்டங்களில் இதில் விரிவாக்க வேலைகள் இடம்பெற்றுள்ளன.[1]
இதில் உள்ள மண்டபத்தில் இரண்டு வரிசைகளில், வரிசைக்கு இரண்டு முழுத்தூண்களும், பக்கச் சுவர்களை அண்டி இரண்டு அரைத்தூண்களும் காணப்படுகின்றன. தூண்களின் கீழ்ப் பாகமும் மேல் பாகமும் சதுர வெட்டுமுகம் கொண்டவை. நடுப்பகுதி எட்டுப் பட்டை வடிவம் கொண்டது.
உட்தூண்களின் சதுரப் பக்கங்களில் தாமரைச் சிற்பங்கள் அமைந்திருக்க, முகப்புத் தூண்களின் சதுரங்களில் சிறப்பு அம்சங்களோடு கூடிய பல்வேறு சிற்பங்கள் காணப்படுகின்றன. மண்டப முகப்பில் இரண்டு அரைத்தூண்களுக்கும் அப்பால் போர் வீரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பின்புறச் சுவரில் ஒரேயொரு கருவறை குடையப்பட்டுள்ளது. கருவறை வாயிலின் இருபுறமும் வாயிற் காவலர் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.[2]
படத்தொகுப்பு
[தொகு]-
நடராஜர்
-
துவாரபாலகர்_1
-
துவாரபாலகர்_2
-
நந்தி
-
சமணக் கல்வெட்டு_2
-
படிக்கட்டுகள் (ஆயிரம் வருடங்கள் பழமையானது)
-
விஜயாத்ரி மலை (தென்மேற்கு)