உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுகோள் பட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையே உள்ள முக்கிய சிறுகோள் பட்டை (வெள்ளை நிறத்தில் உள்ளது).
      சூரியன்
      வியாழன் சிறுகோள் பட்டை
      கோள்களின் பாதைகள்
      சிறுகோள் பட்டை
      இல்டா சிறுகோள்கள்
      பூமிக்கருகில் உள்ள சிறு கோள்கள்

சிறுகோள் பட்டை (Asteroid belt) என்பது செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களின் சுற்றுப்பாதைக்கு இடையே அமைந்துள்ள சூரிய மண்டலத்தின் பகுதியாகும். இப்பகுதியில் பல்லாயிரணக்கணக்கில் சிறுகோள்களும் (asteroids), சிறு கற்களும், துகள்களும் உள்ளன. சிறு கோள்களுக்கு ஆஸ்டெராய்டுகள் (asteroids) என்று பெயரிடப் பட்டுள்ளது. இப்பட்டை தவிர சூரிய மண்டலத்தின் வேறு சில பகுதிகளிலும் சிறுகோள்கள் உள்ளமையால் அவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இது முக்கிய சிறுகோள் பட்டை என்றும் அழைக்கப்படுகிறது. சிறுகோள் பட்டையின் மொத்த நிறை (mass) நிலவின் நிறையில் 4% இருக்கும் எனக் கணக்கிடப் பட்டுள்ளது. (நிலவின் நிறை 7.34767309 × 10^22 kilograms.) இதில் நான்கு மிகப் பெரிய சிறு கோள்கள் உள்ளன என்று கண்டறிய பட்டுள்ளது. அவையாவன: சிரசு (Ceres), வெசுதா (Vesta), பல்லாசு (Pallas) மற்றும் ஐசியா (Hygiea). சிறுகோள் பட்டையின் மொத்த நிறையில் பாதி அளவு இந்த நான்கு சிறு கோள்களிலும் அடங்கியுள்ளது. இந்த நான்கு சிறுகோள்களில் மிகப் பெரியது சிரசு. இதன் விட்டம் (diameter) 950 கிலோ மீட்டர் ஆகும். ஏனைய மூன்று சிறுகோள்களும் இதைவிடச் சிறியவை. அவற்றின் சராசரி விட்டம் 600 கிலோ மீட்டர் எனக் கண்டறியப் பட்டுள்ளது. [1] [2] சிறு பட்டையின் மீதமுள்ள பகுதி சிறு, நுண் கற்களாகவும், தூசுகளாகவும் உள்ளன. மேலும் சிறுகோள் பட்டையின் அடர்த்தி மிகக் குறைவாக இருப்பதால், நாம் பூமியில் இருந்து செலுத்தும் விண்கலங்கள் சிறுகோள் பட்டை வழியாகச் செல்லும் போது, அதன் மீது எந்தக் கல்லோ அல்லது சிறு கோளோ மோதுவதில்லை.

பேரண்டம் (universe) தோன்றிய பிறகு நுண் துகள்கள் உருவாகின. இந்த நுண் துகள்களிருந்து தோன்றிய விண் மீன்களில் நம் சூரியனும் ஒன்று. சூரியன் தோன்றிய பிறகு, அதைச் சுற்றி இருந்த துகள்கள் சிறு கோள்களாகவும், விண் தூசுகளாகவும் மாறி, இன்று சிறுகோள் பட்டையாகத் தென்படுகின்றது என்ற கருத்து முன் வைக்கப் பட்டுள்ளது.[3] வியாழன் என்ற கோளின் புவி ஈர்ப்பு விசை மிக அதிகமாக இருந்ததினால், சிறுகோள் பட்டை (நம் பூமியைப் போல்) ஒரு முழு கோளாக உருவாக முடியாமல் போய் விட்டது. இதனால், சிறுகோள் பட்டையில் இருந்த சிறு கோள்களும், மற்றும் துகள்களும் இப் பட்டையை விட்டுப் போய் விட்டன. இந்த இழப்பினால், சூரியக் குடும்பத்தின் வரலாற்றில், முதல் 100 மில்லியன் ஆண்டுகளில், சிறுகோள் பட்டையின் நிறை 99.9% குறைந்து விட்டது. சனவரி 22, 2014-இல் எதிர் பாராத விதமாக, மிகப் பெரிய சிறு கோளான சிரசுவில் தண்ணீர் (நீராவியாக) இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டது.[4]

சிறுகோள் பட்டை கண்டுபிடித்த வரலாறு

[தொகு]

புகழ் பெற்ற வானியல் அறிஞரான கெப்ளர் (Johannes Kepler), செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் மிக அதிகமான இடைவெளி இருப்பதால், அங்கு ஒரு கோள் இருக்கவேண்டும் என்று 1596-இல் கூறினார். 1781-இல் யுரேனசு(uranus) கண்டு பிடிக்கப்பட்ட பின்பு, டைட்டசு-போடு விதியின்படி (Titius–Bode law), செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் ஒரு கோள் இருக்கவேண்டும் என்று பலர் கருதத் தொடங்கினர். சனவரி 1, 1801-இல் சிசிலியைச் சேர்ந்த பியாச்சி (Giuseppe Piazzi) செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் ஒரு சிறிய பருப்பொருள் (object) சூரியனைச் சுற்றிப் போய்க் கொண்டு இருக்கின்றது என்று கண்டு பிடித்தார். அதற்கு சிரசு என்ற உரோமாபுரிக் கடவுளின் பெயரையும் சூட்டினார். அதற்குப் பிறகு, பதினைந்து மாதங்கள் கழித்து, ஆல்பெர்சு(Heinrich Olbers) என்பவர் பல்லாசு என்ற சிறு கோளைக் கண்டு பிடித்தார். இவ்வாறாக, 1921 வரை 1000 சிறு கோள்களும்[5], 1981 வரை 10,000 சிறு கோள்களும்[6], இறுதியாக 2000 வரை 100,000 சிறு கோள்களும் கண்டறியப் பட்டன[7].

சிறுகோள் பட்டையின் தன்மைகள்

[தொகு]

சிறுகோள் பட்டை பெரும்பாலும் ஒன்றுமில்லாமல் வெறுமையாகவே உள்ளது. இருப்பினும், இன்றைய அளவில், பல நூறாயிரக் கணக்கான சிறுகோள்கள் உள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது. குறைந்தது 100 கிலோ மீட்டர் விட்டம் கொண்ட சிறுகோள்கள் 200 இருக்கலாம்.[8] ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்ட சிறுகோள்கள் 700,000 முதல் 1.7 மில்லியன் வரை இருக்கலாம்.[9] சிறுகோள் பட்டையின் மொத்த நிறை (mass) 2.8x10^21 கிலோ கிராம் முதல் 3.2x10^21 கிலோ கிராம் வரை இருக்கலாம்.

சிறுகோள் பட்டையின் பகுதிகள்

[தொகு]

சிறுகோள் பட்டையில் மூன்று வகையான சிறுகோள்கள் உள்ளன: C (கரிம-Carbonaceous)-வகை, S (சிலிகேட்-silicate)-வகை, மற்றும் M (மாழை-metallic)-வகை.

C-வகை சிறுகோளில் கரிமம் (carbon) மிகுந்து காணப்படும். நம் கண்ணுக்குத் தெரியும் சிறுகோள் பட்டையில் 75% இந்த வகையைச் சேர்ந்ததாகும். பட்டையின் விளிம்புப் பகுதிகளில் இது நிறைந்து இருக்கும். பார்வைக்கு மற்ற சிறுகோள்களை விட நன்கு சிவப்பாகத் தெரியும்.[10]

S-வகை சிறுகோள்கள், பட்டையின் உட்பகுதிகளில் காணப் படும். இதில் பேரளவில் சிலிகேட் என்ற வேதியல் கூட்டுப் பொருளும், சிறிய அளவில் மாழையும் (metal) அமைந்துள்ளன; மற்றும், சொல்லுமளவுக்கு கரிமப் பொருட்கள் இருப்பதாகத் தெரியவில்லை.[10][11]

M-வகை சிறுகோள்களில் மாழைப் பொருட்கள் மிகுந்து காணப் படுகின்றன.[12]

சிறுகோள் பட்டையில், வெப்ப நிலை -73 °C முதல் -108 °C உள்ளது. 10 கிலோ மீட்டர் விட்டம் கொண்ட சிறுகோள்கள் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை மோதிக் கொள்ளும் எனக் கணக்கிடப் பட்டுள்ளது.

எரி கற்கள் (Meteorites)

[தொகு]

சிறுகோள்கள் மோதிக் கொள்ளும் போது உண்டாகும் ஒரு சில கற்கள் எரிந்து கொண்டு எரி கற்களாக (எரி நட்சத்திரம்) பூமியில் விழுகின்றன.[13] இன்று பூமியில் காணப்படும் 50,000-இற்கும் மேலான எரி கற்களில் 99.8% சிறுகோள் பட்டையிலிருந்து வந்தவை எனக் கருதப்படுகின்றது.[14]

ஆய்வுப் பயணங்கள் (Exploration)

[தொகு]

சூலை 16, 1972-ஆம் நாள் முதன் முதலாக பயானீர் 10 (Pioneer 10) என்ற விண்கலம் சிறுகோள் பட்டைக்குள் நுழைந்தது. இதுவரை பன்னிரண்டு விண்கலங்கள் பட்டைக்குள் எந்தத் தடையோ அல்லது மோதலோ இன்றி வெற்றிகரமாக நுழைந்துள்ளன. அதன் பிறகு, பல விண்கலங்கள் செலுத்தப் பட்டு, சிறு கோள்களின் படங்களும் துல்லியமாகப் பிடிக்கப் பட்டுள்ளன. கலீலியோ (Galileo), நியர் (NEAR), காசினி (Cassini), ஸ்டார்டஸ்ட் (Stardust), நியூ ஒரைசன்ஸ் (New Horizons), ரோஸெட்டா (Rosetta), மற்றும் டான் (Dawn) ஆகியன அவற்றில் சில விண்கலங்களாகும்.[15]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Georgij A. Krasinsky; Pitjeva, E. V.; Vasilyev, M. V.; Yagudina, E. I. (July 2002). "Hidden Mass in the Asteroid Belt". Icarus 158 (1): 98–105. doi:10.1006/icar.2002.6837. Bibcode: 2002Icar..158...98K. 
  2. Yeomans, Donald K. (July 13, 2006). "JPL Small-Body Database Browser". NASA JPL. Archived from the original on 29 September 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-09-27.
  3. "How Did The Asteroid Belt Form? Was There A Planet There?". CosmosUp. 2016-01-17. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.
  4. Küppers, Michael; O’Rourke, Laurence; Bockelée-Morvan, Dominique; Zakharov, Vladimir; Lee, Seungwon; von Allmen, Paul; Carry, Benoît; Teyssier, David et al. (2014). "Localized sources of water vapour on the dwarf planet (1) Ceres". Nature 505 (7484): 525–527. doi:10.1038/nature12918. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. பப்மெட்:24451541. Bibcode: 2014Natur.505..525K. 
  5. Moore, Patrick; Rees, Robin (2011). Patrick Moore's Data Book of Astronomy (2nd ed.). Cambridge University Press. p. 156. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-89935-2.
  6. Manley, Scott.accessdate=2011-04-15 Asteroid Discovery from 1980 to 2010.
  7. "MPC Archive Statistics". IAU Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 2011-04-04.
  8. Yeomans, Donald K. (April 26, 2007). "JPL Small-Body Database Search Engine". NASA JPL. பார்க்கப்பட்ட நாள் 2007-04-26. – search for asteroids in the main belt regions with a diameter >100.
  9. Tedesco, E. F.; Desert, F.-X. (2002). "The Infrared Space Observatory Deep Asteroid Search". The Astronomical Journal 123 (4): 2070–2082. doi:10.1086/339482. Bibcode: 2002AJ....123.2070T. https://archive.org/details/sim_astronomical-journal_2002-04_123_4/page/2070. 
  10. 10.0 10.1 Wiegert, P.; Balam, D.; Moss, A.; Veillet, C.; Connors, M.; Shelton, I. (2007). "Evidence for a Color Dependence in the Size Distribution of Main-Belt Asteroids". The Astronomical Journal 133 (4): 1609–1614. doi:10.1086/512128. Bibcode: 2007AJ....133.1609W. http://astro.uwo.ca/~wiegert/papers/2007AJ.133.1609.pdf. பார்த்த நாள்: 2008-09-06. 
  11. Clark, B. E. (1996). "New News and the Competing Views of Asteroid Belt Geology". Lunar and Planetary Science 27: 225–226. Bibcode: 1996LPI....27..225C. 
  12. Margot, J. L.; Brown, M. E. (2003). "A Low-Density M-type Asteroid in the Main Belt". Science 300 (5627): 1939–1942. doi:10.1126/science.1085844. பப்மெட்:12817147. Bibcode: 2003Sci...300.1939M. 
  13. Kingsley, Danny (May 1, 2003). "Mysterious meteorite dust mismatch solved". ABC Science. பார்க்கப்பட்ட நாள் 2007-04-04.
  14. "Meteors and Meteorites" (PDF). NASA. Archived from the original (PDF) on 2012-04-10. பார்க்கப்பட்ட நாள் 2012-01-12.
  15. Barucci, M. A.; Fulchignoni, M.; Rossi, A. (2007). "Rosetta Asteroid Targets: 2867 Steins and 21 Lutetia". Space Science Reviews 128 (1–4): 67–78. doi:10.1007/s11214-006-9029-6. Bibcode: 2007SSRv..128...67B. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுகோள்_பட்டை&oldid=3860357" இலிருந்து மீள்விக்கப்பட்டது