உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்கரிப்பாளையம் குத்துக்கல்: பெருங்கற்கால நினைவுச்சின்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கரிப்பாளையம் குத்துக்கல்: பெருங்கற்கால நினைவுச்சின்னம் என்பது திருப்பூர் மாவட்டம், குண்டடம் வட்டம், சிங்கரிப்பாளையம் கிராமத்தில் கண்டறியப்பட்ட பல நூற்றாண்டுகள் தொன்மையான குத்துக்கல்லைக் குறிக்கும். இந்தக் குத்துக்கல்லை தொல்லியல் ஆய்வாளர் குழு ஒன்று 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கண்டறிந்துள்ளது.[1]

குத்துக்கல்: விளக்கம்

[தொகு]

குத்துக்கல் என்பது வரலாற்றுக்கு முந்திய காலத்தில் நிலைக்குத்தாக நடப்பட்டு உயரமாக நிமிர்ந்து நிற்கும் கல் ஆகும். [2] இதனை செங்குத்துக்கல் எனலாம். [3] வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இறந்தோருக்கு அமைக்கப்பட்ட நினைவுச்சின்னம் இதுவாகும். தமிழ் நாட்டில் இறந்தோரின் நினைவாக நடப்பட்ட குத்துக் கற்கள் வழிபடப்பட்டுள்ளன.

தமிழ் நாட்டில் ஈரோடு, கரூர், கோவை, சிவகங்கை, தர்மபுரி, திருப்பூர், திருவண்ணாமலை, தேனி ஆகிய மாவட்டங்களில் குத்துக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளன. வேம்பூர், திருப்பூர் மாவட்டம், நரசிங்கம்பட்டி மதுரை மாவட்டம், குமரிக்கல்பாளையம், கொடுமணல், ஈரோடு மாவட்டம், முக்குடி, வேலம்பாளையம், ஈரோடு மாவட்டம், ஆகிய ஊர்களில் காணப்படும் குத்துக்கற்கள் சிறப்பானவை ஆகும். [4][5]

சிங்கரிப்பாளையம் குத்துக்கல்

[தொகு]

திருப்பூர் மாவட்டம், குண்டடம் வட்டம், சிங்கரிப்பாளையம் கிராமத்தில் பல நூற்றாண்டுகள் தொன்மையான குத்துக்கல்லை தொல்லியல் ஆய்வாளர் குழு ஒன்று கண்டறிந்துள்ளது. உப்பர் ஆற்றங்கரை அருகே அமைந்துள்ள இக்குத்துக்கல்லானது ஆற்றங்கரையில் வாழ்ந்திருந்த ஒரு பழங்காலக் குடியேற்றம் குறித்து அறிந்துகொள்ள உதவுகிறது. 300 செ.மீ (9 அடி 10 அங்குலம்) உயரமுள்ள இந்தக் குத்துக்கல் (Menhir) கல்வட்டங்களால் (Cairns) சூழப்பட்டுள்ளது. கல்வட்டங்கள் என்பன புதைமேட்டில் கரடுமுரடான கற்களால் வட்ட வடிவில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னம் ஆகும்.[1] குத்துக்கல் (Menhir) மற்றும் நடுகற்கள் (Herostones) எடுப்பது குறித்து சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை கே.பொன்னுசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.[1]

பிற்காலத்தில் வாழும் மக்கள் இந்தக் குத்துக்கல்லின் வரலாற்றுச் சிறப்பு மற்றும் தொன்மை குறித்து சிறிதும் அறியாதவாறாய் இதனைச் சுற்றி வேலி அமைத்து, வழிபாட்டு வருகிறார்கள்.[1]

மேற்கோள்கள்

[தொகு]