சார்ல் போதலேர்
சார்ல் பியர் போதலேர் (UK: /ˈboʊdəlɛər/, US: /ˌboʊd(ə)ˈlɛər/; [1] பிரெஞ்சு மொழி: [ʃaʁl bodlɛʁ] (ⓘ) ; 9 ஏப்ரல் 1821 - 31 ஆகத்து 1867) என்பவர் ஒரு பிரெஞ்சு கவிஞரும், குறிப்பிடத்தக்க கட்டுரையாளரும், கலை விமர்சகரும் ஆவார். இலக்கியத் துறையில் இவர் எட்கர் ஆலன் போவிவை தன் முன்னோடியாக ஏற்றுக்கொண்டு அவரது படைப்புகளை மொழிபெயர்த்தவர்.
இவரது மிகவும் பிரபலமான படைப்பான, நச்சுப் பூக்கள் (லெஸ் ஃப்ளூர்ஸ் டு மால் ) என்ற கவிதை நூல் , 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வேகமாக தொழில்மயமாக்கப்பட்டதால் அழகு சீரழிந்துவந்த பாரிஸின் காட்சிகளை காட்டுகிறது. போதலேரின் உரைப்பாக்கள் பாணியானது வெர்லைன், ஆர்தர் ரிம்பாட் , ஸ்டீபன் மல்லர்மே உள்ளிட்ட பல தலைமுறை கவிஞர்களை பாதித்தது. [2]
மேலைநாட்டுக் கலை இலக்கியப் போக்கை அடியோடு மாற்றியமைத்த ஆற்றல்மிக்க இயக்கங்களான அடிமனவியம், குறியீட்டியம் ஆகியவற்றின் ஊற்றுக் கண்ணே போதலேர்தான் என்பது பல ஆய்வாளர்களின் கருத்து.[3]
வாழ்க்கை குறிப்பு
[தொகு]பியர் சார்ல் போதலேர் 1821 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற சட்டமன்ற உறுப்பினரின் மகனாகப் பாரிசில் பிறந்தார். இவர் சிறுவனாக இருக்கும் போதே தந்தை இறந்தார் தாய் ஓர் இராணுவ அதிகாரியை மறுமணம் செய்துகொண்டார். போதலேர் பள்ளிக் கல்வியை முடித்துக்கொண்டு சட்டக்கல்லூரியில் நுழைந்தார்.
வீட்டுக்கடங்காத பிள்ளையாக இருந்த இவரைக் கப்பலேற்றிக் கல்கத்தாவுக்கு அனுப்பினர் பெற்றோர். ஆனால் நடுவழியில் மொரீஷியஸ் தீவில் இறங்கிக் கொண்டார். வெப்பமண்டலத்தில் இருந்த மொரீஷியஸ் தீவில் சிலகாலம் தங்கியிருந்து வெதுவெதுப்பான அனுபவங்களோடு பாரீஸ் திரும்பினார் போதலேர். சுதந்தரமான பணவசதியோடு இருந்த போதலேர், பாரீசின் நவநாகரிகக் கேந்திரமான 'லத்தீன் குவார்ட்டர்ஸ்' என்ற பகுதியில் கட்டுப்பாடற்ற உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டார். 'சிறப்புக் கெட்டவர்' (decadent) என்ற பெயரை விரும்பி ஏற்றுக் கொண்டார். கருப்பினக் கலப்பினக் காரிகையான, ழான் துய்வால் (Black Venus Jeanne Duval) என்பவர் இவருக்கு காதலியாகக் கிடைத்தார். சீமாட்டி சபர்த்தியர் என்ற நடிகையிடமும் இவருக்குத் தொடர்பிருந்தது.[3]
இவரக்கு இருந்த கஞ்சா, அளவற்ற மதுப்பழக்கம் போன்ற பழக்கங்கள் கடைசி காலத்தில் இவரை முடக்கிப் போட்டு விட்டன. பக்கவாதத்தாலும் இவர் பாதிகபட்டார். தன்பெயரைக்கூட நினைவுகூர முடியாத நிலையிலும், நிலைக் கண்ணாடியில் தன் சொந்த முகத்தையே அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலையிலும், புறக்கணிப்புக்கு ஆளாகி, ஆதரவற்றுத் தமது கடைசி நாட்களைப் பாரிசில் கழித்து 31 ஆகத்து 1867 அன்று இறந்தார்.[3]
இலக்கியப் பணிகள்
[தொகு]கவிதையின் கருப்பொருள் உயர்ந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்தில் போதலேருக்கு உடன்பாடு கிடையாது. அன்றாட வாழ்க்கையில் தட்டுப்படும் சாதாரணப் பொருள்களும், இழிந்த பொருள்களுமே அழகானவை என்றும், அப்பொருள்களை அழகிய சொல்லோவியத்தால் அலங்கரிப்பதே மேலான கவிதை உத்தி (Grand Style of Poetry) என்று குறிப்பிட்டார். ஏழை, குடிகாரன், தெருப் பிச்சைக்காரன், விபசாரி, அபலை ஆகியோரும் பழி, பாவம் தீவினை, பொல்லாங்கு ஆகியவையும், இவர் கவிதைக்கு விரும்பி ஏற்றுக் கொண்ட கருப்பொருள்களாக இருந்தன.[3]
தாம் செய்யும் எந்தப் பணியையும், செப்பமாகவும், திருத்தமாகவும் செய்யவேண்டும் என்ற கொள்கையுடையவர் போதலேர். நிறைய எழுதுவதை இவர் விரும்பவில்லை. ஒன்று செய்தாலும், ஒப்பற்றதாக இருக்க வேண்டும் என்பது இவர் விருப்பம். நச்சுப்பூக்களை 1850-இல் தொடங்கினார். அதன் குறைகளைக் களைந்து, பத்தாண்டுகள் திருத்தம் செய்து, மேன்மேலும் அழகுபடுத்தினார். 'நச்சுப் பூக்கள்' (Les Fleurs du Mal) 1857 ஆம் ஆண்டு முதன்முதலாக வெளியிடபட்டது. என்றாலும் 1861-இலேயே அதன் இறுதி வடிவம் உருப்பெற்றது. போதலேரின் நச்சுப்பூக்கள் மூன்று பிரிவாக உள்ளன. முதல்பிரிவானது இவர் உளச்சோர்வையும், இரண்டாவது பிரிவு பாரிஸ் நகரக் காட்சிகளையும், மூன்றாவது பிரிவு செயற்கைச் சொர்க்கத்தை நோக்கிய இவர் பயணத்தையும், விவரிக்கின்றன. இளமையில் கட்டுப்பாடின்றி வாழ்ந்த தம் இழித்த வாழ்க்கையைப் பலபாடல்களில் இவர் திரும்பிப் பார்த்து உளச்சோர்வு கொள்கிறார்.[3]
நச்சுப் பூக்களில் தெய்வ நிந்தனை காணப்படுகிறது என்று கூறிச் சமயவாதிகள் கண்டனக் குால் எழுப்பினர். படிப்பவர் உள்ளத்தில் கீழ்த்தரமான உணர்ச்சிகளை இவர் கவிதைகள் தூண்டுவதாகக் குற்றம் சாட்டி பிரெஞ்சு அரசாங்கம் 300 பிராங்க் இவருக்கு அபராதம் விதித்தது.[3]
திலாக்ரிக்ஸ் என்ற ஓவியர் பற்றியும், தாமியர், மானெட், ஃப்ளாபர்ட், வேக்னர் என்ற எழுத்தாளர்கள் பற்றியும் இவர் எழுதியுள்ள கட்டுரைகள், திறனாய்வுக்கலை வளர்ச்சிபெறாத காலத்தில் எழுதப்பட்டவை. அக்கட்டுரைகளைப பெரும இலக்கிய சாதனையாகப் பிற்கால அறிஞர்களால் பாராட்டுப் பெற்றது.[3]
அமெரிக்க எழுத்தாளர் ஆலன்போவின் கதைகளைப் போதலேர் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். மூலத்தின் சிறப்புக் குன்றாமலும், மூலத்தைவிடச் சிறந்த கலையம்சத்துடனும் அது செய்யப்பட்டிருப்பதாக எல்லாரும் குறிப்பிடுகின்றனர்.[3]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Baudelaire". Merriam-Webster.
- ↑ "By modernity I mean the transitory, the fugitive, the contingent which make up one half of art, the other being the eternal and the immutable." Charles Baudelaire, "The Painter of Modern Life" in The Painter of Modern Life and Other Essays, edited and translated by Jonathan Mayne. London: Phaidon Press, 13.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 கவிஞர் முருகு சுந்தரம் (1993). "புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்". நூல். அன்னம் (பி)லிட். pp. 17–26. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020.