சார்லஸ் லாம்
சார்ல்சு லாம் Charles Lamb | |
---|---|
பிறப்பு | இன்னர் டெம்பிள், இலண்டன், இங்கிலாந்து | 10 பெப்ரவரி 1775
இறப்பு | 27 திசம்பர் 1834 எட்மண்டன், இலண்டன் | (அகவை 59)
அறியப்படுவது | இலியாவின் கட்டுரைகள் (Essays of Elias) ஷேக்ஸ்பியரின் கதைகள் (Tales from Shakespeare) |
உறவினர்கள் | மேரி லாம்ப் (சகோதரி), ஜான் லாம்ப் (சகோதரன்) |
சார்லஸ் லாம் (Charles Lamb, 10 பிப்ரவரி 1775 – 27 டிசம்பர் 1834) ஒரு ஆங்கிலேயக் கட்டுரையாளர், இவர் எழுதிய இலியாவின் கட்டுரைகள், மற்றும் தன் சகோதரி மேரி லாம்பின் உதவியுடன் எழுதிய குழந்தைகளுக்கான ஷேக்ஸ்பியரின் கதைகள் ஆகிய நுால்களுக்காக ஆங்கில இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவா்.
இளமைப்பருவம்
[தொகு]லாம் லண்டனில் பிறந்தவர். அவரது தாயார் எலிசபெத் ஃபில்ட்; அவரது தந்தை ஜான் லாம். அவரது குடும்பத்தில் கடைசிப் பையனான லாமிற்கு ஒரு சகோதரியும் ஒரு சகோதரனும் இருந்தனர். லாமிற்கு முன்னால் பிறந்த நால்வர் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விடனர். தந்தை ஜான் லாம் லண்டன் இன்னர் டெம்பிளில் வசித்த வழக்கறிஞர் சாமுவேல் சால்டிடம் உதவியாளராக வேலை பார்த்தவர். ஆகவே லாம் இன்னர் டெம்பிளில் பிறந்ததுடன் தன் இளமைப்பருவம் முழுவதையும் அங்கேயே கழித்தார். லாம் தனது "இலியா ஆன் தி ஓல்டு பென்ச்சர்ஸ்" என்ற கட்டுரையில் தன் தந்தையைப் பற்றி லவ்வல் என்ற கதாபாத்திரத்தின் மூலம் உருவகப்படுத்தியுள்ளார். லாமின் சகோதரன் லாமை விடவும் வயதில் மிகவும் மூத்தவனாக இருந்ததால், அவரது சகோதரி மேரி (லாமை விட 11 வயது பெரியவளாக இருந்த போதிலும்) லாமின் விளையாட்டுத் தோழியாக இருந்தாள். லாமின் அத்தை ஹெட்டி, லாமின் மேல் அதிக பாசம் வைத்து அவரை வளர்த்தார். சார்லசும் மேரியும் தங்களின் எழுத்துக்களில் தங்கள் தாயாருக்கும் அத்தை ஹெட்டிக்கும் நடந்த குடும்பச் சண்டையைப் பற்றி அதிகம் குறிப்பிட்டுள்ளனர். இருந்தாலும் சார்லஸ் தன் அத்தையின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். தன் அத்தை தனக்கு மிகவும் அன்பானவராகவும் ஆதரவு காட்டுபவராகவும் இருந்ததாக கூறுகிறார்.
லாமின் தாய் வழிப்பாட்டி திருமதி. ஃபில்டுடன் தனது சிறு வயது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். திருமதி.ஃபில்ட் பல வருடங்களாக ப்ளுமெர் குடும்பத்திற்காக வேலை செய்து வந்தார். பிளேக்ஸ்வேர் என்ற மிகப் பெரிய பண்ணைக்குச் சொந்தக்காரரான திருமதி. ப்ளுமெர் இறந்த பிறகு அக்குடும்பத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமான திருமதி. ஃபில்ட் அந்த மிகப்பெரிய பண்ணை வீட்டைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பெற்றார். அதனால் அங்கு செல்லும் பொழுதெல்லாம் சார்லஸ் தனது சுதந்திரமான ஆட்சியைப் பற்றி தனது Blakesmoor in H—shire என்ற கட்டுரையில் ரசனைபடக் கூறியுள்ளார்.
சார்லசின் ஏழு வயதிற்கு முந்தைய குழந்தைப்பருவம் பற்றி அவ்வளவாகத் தகவல்கள் இல்லை. மேரி அவருக்கு வாசிக்கக் கற்றுக் கொடுத்தாள். பிறகு அவர் புத்தகப் பிரியனாக மாறி நிறைய வாசித்தார். இளம்பிராயத்தில் பெரியம்மையால் பாதிக்கப்பட்ட அவர் அந்நோயிலிருந்து மீண்டுவர நீண்ட காலம் ஆனது. பிறகு அவர் டெம்பிளில் வசித்து வந்த ஒரு வழக்கறிஞரின் முன்னாள் மனைவியான திருமதி. ரெனால்ட்சிடம் கல்வி கற்றார். திருமதி. ரெனால்ட்ஸ் மிகவும் இரக்க குணம் வாய்ந்த ஆசிரியராக இருந்திருக்கக்கூடும். ஆகையால்தான் லாம் தன் வாழ்நாள் முழுவதும் அவருடன் நல்லுறவு பூண்டிருந்தார் என்பது 1820களில் லாம்பும் மேரியும் அளித்த விருந்துகள் அனைத்திலும் திருமதி. ரெனால்ட்ஸ் பங்குபெற்றார் எனபதை அறியும்போது தெரிகிறது. 1781ல் சில காலம் சார்லஸ் திருமதி். ரெனால்ட்ஸை விட்டுப் பிரிந்து வில்லியம் பர்டின் பள்ளியில் கல்விகற்றதாக ஈ.வி.லுாகாஸ் என்ற எழுத்தாளா் குறிப்பிடுகிறார்.[1]
- இருந்தாலும், லாம் நீண்ட நாட்கள் வில்லியம் பியர்டின் பள்ளியில் இருக்கவில்லை. 1782, அக்டோபர் மாதம் க்ரைஸ்ட்'ஸ் ஆஸ்பிடல் என்ற உண்டு உறைவிடப்பள்ளியில் சேர்ந்தார். அப்பள்ளி 1552-ல் ஆறாம் எட்வர்ட் மன்னரால் ஆரம்பிக்கப்பட்டதாகும். கிரைஸ்ட்'ஸ் ஆஸ்பிடல் ஒரு பாரம்பரியமிக்க உண்டு உறைவிடப்பள்ளி. உற்சாகமில்லாமல் வன்முறை நிறைந்ததாகக இருந்தது. அப்பள்ளித் தலைமையாசிரியர், திரு. பாயர், தனது லத்தின் மற்றும் கிரேக்க வகுப்புகளால் புகழ் பெற்றிருந்த அதே சமயத்தில் தனது முரட்டுத்தனத்திற்கும் பெயர்பெற்றிருந்தார். லாம்பின் பல கட்டுரைகளிலும் , லே ஹன்ட் -ன் சுயசரிதையிலும், சாமுவல் டெய்லர் கோல்ட்ரிஜ் எழுதிய "பயோகிராஃபியா லிட்டரரியா" என்ற புத்தகத்திலும் கிரைஸ்ட் ஆஸ்பிடல் பள்ளியைப் பற்றிய விரிவான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. லாம்பிற்கு கோல்ட்ரிஜுடனான நட்பு பள்ளியில் ஆரம்பித்து அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. முரட்டுத்தனம் நிறைந்த பள்ளியாக இருந்தாலும் லாம் அப்பள்ளியில் மிகவும் ஒத்துப்போனார். இவ்வளவிற்கும் மற்ற மாணவர்களைப்போல் அல்லாமல் அவரது வீடு அடிக்கடி போய்வரும் தொலைவிலேயே இருந்தது. பல வருடங்களுக்குப்பிறகு, இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் லாம் தனது "முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் க்ரைஸ்ட்'ஸ் ஆஸ்பிடல்" என்ற தனது கட்டுரையில் "L." என்ற மூன்றாம் நபர் மூலமாகத் தன்னைப்பற்றிக் குறித்து எழுதியுள்ளார்.
க்ரைஸ்ட்'ஸ் ஆஸ்பிடல் உண்டு உறைவிடப்பள்ளிக்கு உதாரணமாகத் திகழ்ந்தது. பல மாணவர்கள் பிற்காலத்தில் அப்பள்ளியில் மிகப்பயங்கரமான வன்முறைக்கு தாங்கள் ஆளானது பற்றி எழுதியிருக்கிறார்கள். 1778 முதல் 1799 வரை வலிமைமிக்க முதல்வராயிருந்த ரெவரெண்ட் ஜேம்ஸ் பாயர், கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மனம்போன போக்கில் நடக்கும் குணத்திற்கு பெயர் பெற்றவராயிருந்தார். ஒரு முறை பாயர், ஹோமர் எழுதிய கனமான புத்தகத்தை லேஹண்ட்டின் முகத்தில் வீசியெறிந்ததனால் லேஹண்ட் தன் ஒரு பல்லை இழந்த கதை எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. தனது மனதுக்கினிய தோற்றத்தினாலும், லாம்பின் தந்தையின் எஜமானரும் லாம்பின் உபயதாரருமான சாமுவெல் சால்ட் அப்பள்ளியின் ஆளுநர்களில் ஒருவராயிருந்த காரணத்தாலும் லாம் இப்படிப்பட்ட கொடுமைகளிலிருந்து தப்பித்ததாகத் தெரிகிறது.
குடும்பத்தில் சோகம்
[தொகு]சார்லசும் அவரது சகோதரி மேரியும் சில காலம் மனநோயால் பாதிக்கப்பட்டனர். 1795 ஆம் ஆண்டு சார்லஸ் ஒரு மனநோய் மருத்துவமனையில் ஆறு வாரங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். ஆனாலும், அவர் ஏற்கனவே ஒரு கவிஞராக பெயர் பெற்றிருந்தார்.
1796 செப்டம்பர் 22ஆம் நாளன்று மிகக் கொடூரமான சம்பவம் நடந்தது. இரவில் தன் தாய்க்காகவும் பகலில் தனக்காகவும் சித்திரத்தையல் வேலைப்பாட்டில் கவனம் முழுவதையும் செலுத்தி வந்த மேரி மிக மோசமாக நரம்பு பாதிப்புக்குள்ளாகி சோர்வடைந்து புத்திசுவாதீனத்தினால் உந்தப்பட்டு தன் தாயாரையே ஒரு மேசைக்கத்தியினால் குத்திக் கொன்றுவிட்டார்.
அந்தக் காலத்தில் பித்துப் பிடித்தவர்களுக்காக எந்த ஒரு சட்டநிலையும் இல்லாத போதும் மேரி தன் சுயநினைவுடன் இக்கொலையைச் செய்யவில்லையென்று கருதிய நீதிபதி இனி மேரியை தன் சுயபாதுகாப்பில் சார்லஸ் வைத்துக் கொள்வதாக உறுதி அளித்த பிறகு மேரியை விடுதலை செய்தார். தன் நண்பர்கள் உதவியுடன் சார்லஸ் தன் சகோதரியை விடுதலை செய்யப் பாடுபடவில்லையென்றால் மேரி தன் வாழ்வின் பெரும் பகுதியைச் சிறையிலேயே கழிக்கும்படி ஆகியிருக்கும். லாம் தனது சொற்ப வருமானத்தில் பெரும்பகுதியை 'ஃபிஷ்ஷர் ஹவுஸ்' என்று அழைக்கப்பட்ட இசுலிங்டனிலிருந்த தனியாருக்குச் சொந்தமான 'மனநோயாளிகளின் இல்லத்தில்' தங்கியிருந்த தன் அன்புக்குரிய சகோதரிக்காகவே செலவழித்தார்.
நீண்ட நாட்களாக பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டதால் மிகுந்த மனச்சோர்விற்கு ஆளாகியிருந்த சார்லசின் தந்தை ஜான் லாம் 1799ல் இறந்தது சார்லசிற்கு நிம்மதியையே தந்தது. காரணம் தன் சகோதரி மேரியை 'பென்டோன்வில்லில்' தன்னுடன் தங்க வைத்துக் கொள்ள ஏதுவாக இருக்குமென்று கருதினார். 1800லிருந்து 1890 வரை டெம்பிளிலிருந்த 'மைட்டர் கோர்ட் கட்டிடத்தில்' இருந்த ஒரு வீட்டில் அவர்கள் வசித்தனர்.
மனச்சோர்வு நோயினாலும், குடிப்பழக்கத்தினால் ஏற்பட்ட நோயினாலும் லாம் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவரும் அவருடைய சகோதரியும் சுறுசுறுப்பான வளமான சமூக வாழ்க்கையை அனுபவித்தனர். அந்தக்காலகட்டத்தில் மிகப்பிரபலமான நாடகக் கலைஞர்களும் இலக்கியவாதிகளும் வாராவாரம் கூடும் சமுதாயக் கூடமாக லாமுடைய லண்டன் வீடு திகழ்ந்தது. சார்லஸ் லாம், சாமுவெல் கோல்ரிட்சுடன் பள்ளி சென்ற காரணத்தால், லாம் கோல்ரிட்ஜை தன்னைவிட வயதில் மூத்த மிக நெருங்கிய நண்பராகக் கருதினார். தனது மரணப் படுக்கையிலிருந்தபடி, கோல்ரிட்ஜ் லாமிற்காகவும் அவரது சகோதரிக்காகவும் மோர்னிங் ரிங் என்ற துக்கத்தைக் குறிக்கும் மோதிரத்தை அனுப்பிவைத்தார். நல்லவிதமாக, லாம்பின் முதல் வெளியீடு 1796-ல் கோல்ரிட்ஜின் தொகுப்பில் "இண்டியா ஹவுஸின் திரு.சார்லஸ் லாம்" என்ற நான்கு சானெட்டுகள் (ஈரேழ்வரிப்பா) -ஆக வந்தன. 1797 -ல் இரண்டாவது பதிப்பின்போது, லாம் மேலும் சில பாடல்களையும் சேர்த்து பங்களித்திருந்தார்.
எழுத்துப்பணி
[தொகு]1796-ல் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ் எழுதி, ஜோசஃப் காடில்-ஆல் வெளியிடப்பட்ட போயம்ஸ் ஆன் வேரியஸ் சப்ஜெக்ட்ஸ் (பல்வேறு துறைகளின் மேலான பாடல்கள்) என்ற பாடல்களின் தொகுப்பில் லாம் எழுதிய நான்கு ஈரேழ்வரிப்பா (14 வரிகள் கொண்ட சிறு பாடல் அல்லது செய்யுள்) முதன்முதலில் வெளிவந்தன. பர்ன்ஸ் என்ற கவிஞரின் பாடல்களின் பாதிப்பும் 18ஆம் நுாற்றாண்டில் முழுவதுமாக மறக்கப்பட்ட வில்லியம் பெளல்ஸ் என்ற கவிஞரின் தாக்கமும் லாம் எழுதிய முதல் நான்கு சானெட்களில் பிரதிபலிப்பதைக் காணலாம். லாம்பின் பாடல்கள் மக்களைக் கவரவில்லை. தான் கவிஞராய் இருப்பதைவிட மிகச்சிறந்த கட்டுரையாளர் என்பதை லாம்பும் புரிந்துகொண்டார். 1815-ல் லாம்பின் புகழ்பெற்ற தி எஸ்ஸேஸ் ஆஃப் இலியா ( இலியாவின் கட்டுரைகள்) வருவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே எல்லோராலும் கொண்டாடப்படும் வேர்ட்ஸ்வொர்த் ஜான் ஸ்காட்டிற்கு எழுதிய கடிதத்தில் 'லாம் ஈடு இணையற்ற கட்டுரைகளை எழுதுவதாகப்' பாராட்டியுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள்
[தொகு]- Blank Verse, poetry, 1798
- A Tale of Rosamund Gray, and old blind Margaret, 1798
- John Woodvil, poetic drama, 1802
- Tales from Shakespeare, 1807
- The Adventures of Ulysses, 1808
- Specimens of English Dramatic poets who lived about the time of Shakespeare, 1808
- On the Tragedies of Shakespeare, 1811
- Witches and Other Night Fears, 1821
- The Pawnbroker's Daughter, 1825
- Eliana, 1867
- Essays of Elia, 1823
- The Last Essays of Elia, 1833
குறிப்புகள்
[தொகு]- ↑ Lucas, Life of Lamb page 41