சாடி கார்னோ
பிரெஞ்சு அரசுத் தலைவர் (1887-1894) பற்றி அறிய மரீ பிரான்சுவா சாடி கார்னோ கட்டுரையைப் பார்க்கவும்.
நிக்கலாஸ் லெனார்ட் சாடி கார்னோ Nicolas Léonard Sadi Carnot | |
---|---|
பிறப்பு | பாரிஸ், பிரான்ஸ் | சூன் 1, 1796
இறப்பு | ஆகத்து 24, 1832 பாரிஸ், பிரான்ஸ் | (அகவை 36)
வாழிடம் | பிரான்சு |
தேசியம் | பிரெஞ்சு |
துறை | இயற்பியலாளர், பொறியியலாளர் |
பணியிடங்கள் | பிரெஞ்சு இராணுவம் |
கல்வி கற்ற இடங்கள் | ஏக்கோல் பொலிடெக் École Royale du Génie Collège de France |
Academic advisors | சைமன் புவசான் ஆண்ட்ரே ஆம்பியர் |
அறியப்படுவது | Carnot cycle Carnot efficiency கார்னோவின் தேற்றம் கார்னோ நீராவி எந்திரம் |
குறிப்புகள் | |
இவர் மரீ பிரான்சுவா சாடி கார்னோவின் உறவினர் ஆவார். |
நிக்கலாஸ் லெனார்ட் சாடி கார்னோ (Nicolas Léonard Sadi Carnot; ஜூன் 1 1796 – ஆகஸ்ட் 24 1832) என்பவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வெப்ப இயக்கவியல் துறையில் முன்னோடியாக பெரும் புகழ் நாட்டிய அறிவியல் அறிஞர். இவருடைய முழுப்பெயர் நிக்கொலா லியோனார் சாடி கார்னோ. இவரின் தந்தையார் லசாரெ கார்னோ ஒரு பிரெஞ்சுப் புரட்சிக்காரர். அவர் தமக்கு ஈரானில் இருக்கும் சிராசில் உள்ள சாடி என்னும் பெர்சியக் கவிஞரின் மேல் இருந்த மதிப்பால் தம் மகனுக்கு சாடி என்னும் பெயரைத் தந்தார். சாடி கார்னோ பிறந்த சிறிது காலத்துக்குள்ளேயே, லாசரெ கார்னோ அவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்க நேர்ந்தது, ஆனால் பின்னர் நெப்போலியன் ஆட்சிக்கு வந்த பின் இவர் நெப்போலியனின் அரசில் போர்த்துறைக்கு அமைச்சராய் வந்து சேர்ந்தார். எனினும், அவ்வேலையில் அவர் நிலைக்காமல், விலகி விட்டார். இதனால் தன் மகனுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வசதியாக இருந்தது.
சாடி கார்னோ 1812-ல் ஈக்கோலே பாலிடெக்னிக் என்னும் உயர் கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்றார். 1814-ல் கல்வியை முடித்துவிட்டு வந்த பின், பிரெஞ்சுப் படையில் சேர்ந்து பெரும்பாலும் அதிலேயே இருந்தார். இவருக்கு போதிய பதவி உயர்வுகள் தாராவிட்டாலும், இவர் பல அறிவியற் சொற்பொழிவுகளுக்குச் சென்றும், புகழ் பெற்ற அறிவியல் அறிஞர்களோடு ஆழ உரையாடியும் தம் அறிவை செழுமைப்படுத்தி வந்தார். அக்காலத்தில், சாடி கார்னோவிற்கு முதன்மையான கேள்வி, எப்படி நீராவி எந்திரத்தை திறன் மிகுந்ததாகச் செய்வது என்பதுதான். அக்காலத்தில், ஆங்கிலேயர்கள் இந்த நீராவி எந்திரத்தில் பெரும் முன்னேற்றம் அடைந்து இருந்தனர். பிரான்சு நாட்டில் அவ்வாறு இல்லாமலும், நீராவி எந்திரங்களை இறக்குமதி செய்து கொண்டும் இருந்தனர். எனவே இவர் ஆய்வுகள் செய்து 1824-ல் தீயின் இயக்கு விசையைப் பற்றிய எண்ணங்கள் (Réflexions sur la puissance motrice du feu et sur les machines propres à développer cette puissance) என்னும் ஒரு சிறு நூலை வெளியிட்டார். அது இன்றளவும் போற்றப்படுகின்றது.
இவருடைய பெரும் புகழ் வாய்ந்த கார்னோவின் நான்கு-நிலை-சுழற்சி என்பது வெப்பத்தால் இயங்கும் எந்திரங்களுக்கு ஒரு கருத்தியல் அடிப்படையாக உள்ளது.