சாக்கைக் கூத்து
சாக்கைக் கூத்து (ⓘ) என்பது புராணக் கதைகளைக் கூறி நடித்து ஆடப்படும் ஒரு கூத்து வகையாகும். இக்கூத்தினை ஆடுபவர் சாக்கையர் எனப்படுவர். பண்டைத் தமிழகத்தில் ஆடப்பட்டு வந்த இக்கூத்து இன்றும் நடைபெற்று வருகிறது.கேரள மாநிலம் வட திருவாங்கூரில் உள்ள ஒவ்வொரு சிறப்புடைக் கோவிலிலும் நடைபெறும் விழா நாட்களில் சாக்கையர் கூத்து சிறப்பிடம் பெறுகிறது. கூத்து நடைபெறும் போது சொல்ல வந்த கதையுடன் பல்வேறு கிளைக்கதையை இடையில் கூறி கேட்போர் தமை மெய்மறக்கச் செய்யும் வகையில் இக்கூத்து நடைபெறும். கதை, நகைச்சுவை, நடிப்பு ஆகியவற்றில் சாக்கையர் திறமை மிக்கவராவர்.
ஆடைகள்
[தொகு]சாக்கைக் கூத்து நடைபெறும் இடத்தை கூத்தம்பலம் என்று கூறுவர். இது கோவில் அல்லது பொது இடத்தில் உள்ள தனிக் கட்டடமாகும். இவ்வம்பலத்தில் சாக்கையன் எனப்படுவோன் முக்காலி மீது அமர்வான். அவன் தலையில் விநோதமான சரிகைத் தலைப்பாகை காட்சி தரும். ஓரத்தில் பல நிறங்கள் அமைந்த- அகலத்தில் குறுகிய நீண்ட ஆடையை இடுப்பைச் சுற்றிலும் அணிந்திருப்பான். அவ்வாடை கணக்கற்ற மடிப்புகளை உடையதாகவும் கண்களைக் கவரும் வகையிலும் இருக்கும்.
நம்பியார்
[தொகு]மேடையில் சாக்கையனுக்குப் பின் 'நம்பியார்' என்பவன் நின்றிருப்பான். அவனுக்குமுன் 'மிளாவு'(முழவு) என்ற இசைக்கருவி வைக்கப்பட்டிருக்கும். அதன் ஓசை இடியோசையை ஒத்திருக்கும். கூத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் சாக்கையன் வட மொழியில் சொல்லும் பணுவல்களுக்கு இடையிடையேயும் கடைசியிலும் நம்பியார் முழவைத் தட்டுவான்.
நங்கையர்
[தொகு]நம்பியார் இனத்தைச் சார்ந்த பெண்மணி நங்கையர் எனப்படுவாள். அவள் தாளத்தைக் கைகளில் பிடித்தபடி சாக்கையனுக்கு எதிரில் அமர்ந்திருப்பாள். அவள் அத்தாளத்தை வேண்டும்போது தட்டுவாள். அவையோர் அனைவரும் தலையசைத்தும் உடலசைத்தும் சாக்கையன் ஆடும் கூத்தினையும், பேசும் பேச்சினையும் கேட்டு மகிழ்ச்சி கொள்ளும் போது, இந்நங்கையர் சிலை போல அமர்ந்திருப்பாள். அவள் சிறிது புன்முறுவல் கொண்டாலும் கூத்து உடனே நிறுத்தப்படும். சில நேரங்களில் நங்கையர் தெய்வங்களைப் போல வேடம் புனைந்து அதே மேடையில் நடித்தலும் உண்டு.
இலக்கியச் சான்று
[தொகு]சிலப்பதிகாரத்தில் இந்த சாக்கியர் கூத்து பற்றிக் கூறப்பட்டுள்ளது. சேர நாட்டை ஆண்ட சேரன் செங்குட்டுவன் விண்ணுலகம் சென்ற கண்ணகிக்கு கோயில் எழுப்ப வேண்டி இமயத்திலிருந்து கல்லைக் கொணர வட நாடு சென்றான்; தன்னை எதிர்த்த ஆரிய அரசர்களை வென்று கல்லைக் கொணர்ந்தான். அவன் வஞ்சி மாநகர் மீண்ட போது, அன்று அவனது களைப்பைப் போக்க கூத்தச் சாக்கையன் நடனமாட வரவழைக்கப்பட்டான்.
சாக்கையன் ஆடிய கூத்து
[தொகு]சேரன் அவையில் சாக்கையன் சிவபெருமான் ஆடிய கொட்டிச் சேதம் என்னும் கூத்தை ஆடிக் காட்டினான். சிவபெருமான் உமாதேவியை இடப்பாகத்தில் தாங்கியபடி ஆடிய கூத்து 'கொட்டிச் சேதம்' ஆகும். சாக்கையன் இக்கூத்தினை ஆடிய போது அவன் காலில் அணிந்திருந்த சிலம்பு ஓசையிட்டது; கையில் இருந்த பறை ஆர்த்தது; அவனுடைய கண்கள் சிவனுடைய மனக்குறிப்பை உணர்த்தின. அவனுடைய சிவந்த சடை கூத்தின் அசைவால் நாற்திசைகளிலும் அசைந்தாடியது. ஆனால், இடப்பாகம் இருந்த உமையின் 'பாடகம்' என்ற காலணி அசையவில்லை; 'சூடகம்' துளங்கவில்லை; 'மேகலை' ஒலிக்கவில்லை; மென்மார்பு அசையவில்லை; அவளது 'குழை' என்னும் காதணி ஆடவில்லை; நீண்ட கூந்தலும் அவிழவில்லை. திரிபுரம் எரித்தபின்னர் முக்கண்ணன் ஆடிய கொட்டிச் சேதம் என்னும் கூத்தினை மேற்சொல்லப்பட்ட சாக்கையன் ஆடிக் காட்டினான். இதனை
- "திருநிலைச் சேவடி சிலம்புவாய் புலம்பவும்
- பரிதரு செங்கையில் படுபறை ஆர்ப்பவுஞ்
- செங்க ணாயிரத் திருக்குறிப்பு அருளவுஞ்
- செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும்
- பாடகம் பதையாது சூடகந் துளங்காது
- மேகலை ஒலியாது மென்முலை அசையாது
- வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது
- உமையவள் ஒருதிற னாக, ஓங்கிய
- இமையவ னாடிய கொட்டிச் சேதம்".[2]
என்ற வரிகளால் அறியலாம்.
பறையூர் சாக்கையன்
[தொகு]சிலம்பில் இக்கூத்தை ஆடியவன் பறையூரைச் சேர்ந்தவன் என்றும், அவ்வூர் நான்மறையோரைக் கொண்டதென்றும் சிலப்பதிகாரம் செப்புகிறது.
- "பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தன் சாக்கையன்"[3]
செங்குட்டுவன் வஞ்சி மாநகர் வந்தவுடன் சொல்லியனுப்ப, அன்றே சாக்கையன் வந்தாடினான். ஆதலால் பறையூர் என்பது வஞ்சி மூதூருக்கு அண்மையில் இருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் [4] சாக்கைக்கூத்து பற்றி ஆய்வு செய்த வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார், " இப்பறையூர் இக்காலப் 'பரூர்', இவ்வூரில் நடிப்புத் தொழிலையுடைய பிராமண சமூகம் ஒன்று நிலை பெற்று வாழ்கின்றது," என்று கூறியுள்ளார்.[5]
கேரளத்தில் சாக்கையர்
[தொகு]சாக்கையர் என்னும் பெயருடன் கூத்தாடும் பிராமண வகுப்பினர் நம் தமிழகத்தில் இல்லை. ஆனால், சேர நாடான கேரளத்தில் இன்றும் இருந்து வருகிறார்கள். கேரளத்தில் கோவிற்பணி செய்பவர்கள் 'அம்பலவாசிகள்' எனப்படுவர். நம்பியாசான், புஷ்பகன்(பூப்பள்ளி), சாக்கியர், பிராமணி அல்லது தெய்வம்படி, அடிகள், நம்பியார், பிஷாரடி, வாரியர், நாட்டுப்பட்டன், தீயாடுன்னி, குருக்கள், பொதுவாள் என்னும் பிரிவினர் 'அம்பலவாசிகள்' என்னும் பொதுப் பெயரால் குறிக்கப்படுகின்றனர். அம்பலம் என்றால் கோவில். கோவிலில் வாழ்பவர் ஆதலால் அம்பல வாசிகள் எனப்பட்டனர். பிரதிலோமர், அநுலோமர் எனப்படும் இவ்விருவகையாலும் வந்தவர் மரபினரே அம்பல வாசிகள் என்றும் இவர்களுள் பல இனத்தவர் உள்ளனர் என்றும் கொச்சி நாட்டு மக்கள் தொகை அறிக்கை கூறுகின்றது.[6]
சாக்கையரும் சாக்கைய நம்பியாரும் ஓரினத்தவர்.[7] எனினும் சாக்கையர் மறையோருக்குரிய பூணூல் அணிவர்; சாக்கைய நம்பியார் பூணூல் அணியார். சாக்கைய நம்பியார் பெண்களே நங்கையார் எனப்படுவர்.
சோழ நாட்டில் சாக்கையர்
[தொகு]சாக்கையர் சேர நாட்டில் மட்டுமல்லாது சோழ நாட்டிலும் இருந்துள்ளனர். சோழப் பேரரசன் முதலாம் இராசேந்திரன் காலத்தில், காமரசவல்லி என்னுமிடத்துச் சிவன் கோவில் விழாவில் நடித்த சாக்கையன் ஒருவனது கூத்தைப் பாராட்டி, அரசன் அவனுக்குச் 'சாக்கை மாராயன்' என்ற பட்டம் தந்த செய்தியை அவ்வூர்க் கல்வெட்டு கூறுகிறது.[8]
நாம் சிலப்பதிகாரத்திலும் கல்வெட்டுகளிலும் கண்டறிந்த சாக்கையரும் அவர்தம் கூத்து வகைகளும் இன்றளவும் கேரள நாட்டில் இருத்தல் என்பது வியக்கத்தக்க ஒன்றாகும்.
உசாத்துணை
[தொகு]மா.இராசமாணிக்கனார். 'தமிழ் இனம்' செல்வி பதிப்பகம், காரைக்குடி. 1958
மேற்கோள்
[தொகு]- ↑ A part of Bhasa's play Abhiṣeka Nataka based on the epic இராமாயணம்.
- ↑ சிலப்பதிகாரம், நடுகல் காதை, வரி 67-75
- ↑ சிலப்பதிகாரம் நடுகல் காதை வரி 76-77
- ↑ A Social History of India, S. N. Sadasivan, ப்பகெ 325[1]
- ↑ டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார், 'சேரன் வஞ்சி', பக்கம் 62.
- ↑ Cochin Census Report 1901: Castes and Tribes of S.I.Vol.1,p.30
- ↑ பூணூல் அணிந்திருந்த நம்பூதிரிப் பெண்ணின் பிள்ளைகள் சாக்கையர் என்றும், அப்பொழுது பூணூல் அணியப்படாதிருந்த பிள்ளைகள் சாக்கைய நம்பியார் என்றும் பெயர் பெற்றனர். இவருள் சாக்கையர் மக்கள் தாய முறையைப் பின்பற்றுவர். சாக்கைய நம்பியார் மருமக்கள் தாயமுறையை பின்பற்றுவர்.-"Malabar Gazetter;Castes and Tribes of SA.I.Vol.II, P.10.
- ↑ A.R.E.1924-25,P.82