சாகசப் புனைவு

சாகசப் புனைவு (Adventure Fiction) என்பது புனைவுப் பாணிகளில் ஒன்று. கதை மாந்தர்கள் சிக்கலான அபாயமான சூழல்களை எதிர்கொள்ளுவதை விவரிக்கும் புனைவுப் படைப்புகள் சாகசப் புனைவுகள் எனப்படும். இந்த அபாயமான சூழல்கள், தெரிந்த உலகுகள்/சமூகங்களிலோ அல்லது புதிய/தொலைந்து உலகுகளிலோ நடக்கலாம். கதை மாந்தருக்கு தொடர்ச்சியாக அபாயங்கள் நிகழும்படியும், அதனை எதிர்கொண்டு அவர்கள் வெல்வது போலவும் எழுதுவது சாகச எழுத்தாளர்களின் இயல்பு. சாகசப் புனைவுகளில் நிகழ்வுகள் அடுத்தடுத்து வேகமாக நிகழ்ந்து, வாசகரின் கவனம் சிதறாமல் கதையை இறுதி கட்டத்தை நோக்கி நகர்த்துகின்றன. பெரும்பாலும் இக்கதைகளில் நிகழ்வுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது; பாத்திரப்படைப்பு, நீதி போதனை போன்ற விஷயங்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. நவீன இலக்கியத்தின் சாகசப் புனைவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள், காப்பியங்கள், நிகழ்பட ஆட்டங்கள், படக்கதைகள், படப்புதினங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என பல வகைகளிலும் தரங்களிலும் சாகசப் புனைவுகள் படைக்கப்படுகின்றன