சத்திரபதி சிவாஜி மகராஜ் வாஸ்து சங்கிரகாலயம்
சத்திரபதி சிவாஜி மகராஜ் வாஸ்து சங்கிரகாலயம் என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பாயில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். வேல்சு இளவரசர் இந்தியாவுக்கு வருகை தந்ததை நினைவுகூருமுகமாக இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது இதனால் இதனை வேல்சு இளவரசர் அருங்காட்சியகம் என முன்னர் அழைத்தனர். 1907 ஆம் ஆண்டில் அப்போதைய பம்பாய் அரசு இதற்கான கட்டிடத்தைக் கட்டுவதற்காக நிலமொன்றை அருங்காட்சியகக் குழுவுக்கு வழங்கியது. இன்று மகாத்மா காந்தி சாலை என அழைக்கப்படும் சாலையில் அமைந்திருந்த இவ்விடத்தில் கட்டிடமொன்றின் வடிவமைப்புக்காகப் போட்டியொன்று நடத்தப்பட்டது. இதன் முடிவில், ஜார்ஜ் விட்டெட் என்னும் கட்டிடக்கலைஞர், இக் கட்டிடத்தை வடிவமைப்பதாற்காக அமர்த்தப்பட்டார்.
இந்திய-சரசனியக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த இக் கட்டிடம், பல்வேறு பண்பாட்டு அம்சங்களின் ஒரு கலவையாகவும் உள்ளது. வரலாற்றுக்கு முந்தியகாலக் காட்சிப் பொருட்களுக்கான காட்சிக்கூடத்தின் பெரும்பகுதியில், 1922 ஆம் ஆண்டில் சர் ஜான் மார்சல் மேற்கொண்ட அகழ்வாய்வுகளின்போது பெறப்பட்ட பொருட்கள் உள்ளன. இந்திய சிற்றோவியக் காட்சிக்கூடத்தில், சுமார் 100 சிற்றோவியங்கள் உள்ளன. இதன் மூலம் இந்தியாவிலுள்ள மிகச் சிறந்த சிற்றோவியச் சேகரிப்புக்களில் ஒன்றாக இந்து விளங்குகிறது. இந்தக் காட்சிக்கூடத்தில் இந்தியாவில் சிற்றோவியக் கலையின் வளர்ச்சி தொடர்பான விளக்கங்களும் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்புக்கள்
[தொகு]- பம்பாய்மியூசியம்.ஆர்க் இணையத்தளத்தில் பரணிடப்பட்டது 2009-06-26 at the வந்தவழி இயந்திரம்