சசிகுமார் (நடிகர்)
சசிகுமார் | |
---|---|
நடிகர் சசிகுமார் | |
பிறப்பு | விஜய்குமார் 8 திசம்பர் 1944 கும்பகோணம், தமிழ்நாடு |
இறப்பு | ஆகத்து 24, 1974 இராயப்பேட்டை, சென்னை | (அகவை 29)
இறப்பிற்கான காரணம் | தீ விபத்து |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | ராதா விஜயகுமார் ராதா வெற்றிசெல்வன் |
கல்வி | இளம் அறிவியல் (வேதியியல்) |
பணியகம் | இந்திய இராணுவம் |
அறியப்படுவது | நாடக, திரைப்பட நடிகர் |
பெற்றோர் | இராதாகிருஷ்ணன், சாவித்திரி |
வாழ்க்கைத் துணை | சசிகலா (இ. 24-08-1974) |
பிள்ளைகள் | நந்தினி, விஜயசாரதி |
சசிகுமார் (இயற்பெயர்: தட்சிணாமூர்த்தி இராதாகிருஷ்ணன் விஜயகுமார்; 8 திசம்பர் 1944 – 24 ஆகத்து 1974) தமிழ்த் திரைப்பட நடிகரும், இந்திய விமானப் படை அதிகாரியும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]சசிகுமார் 1944 டிசம்பர் 8 இல் தமிழ்நாடு, கும்பகோணத்தில் ராதாகிருஷ்ணன் – சாவித்திரி ஆகியோருக்குப் பிறந்தார். இவரது இயற்பெயர் விஜய்குமார். பட்டப்படிப்பை முடித்துவிட்டு, இராணுவத்தில் சேர்ந்த இவர், எல்லைப் பகுதிகளில் இந்திய விமானப்படையில் கேப்டனாகப் பணியாற்றியவர். இவரது தந்தை ஓர் இந்தி, தமிழ்ப் பண்டிதர். பெரியாரின் தீவிர ஆதரவாளர். இதனால் தன் மகனுக்கு வெற்றி செல்வன் என்றும் பெயரிட்டு அழைத்தார். திரைப்படங்களில் சசிகுமார் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.[1] சசிகுமாரின் தந்தை வழி பாட்டனார் தட்சிணாமூர்த்தி கும்பகோணத்தில் பிரபலமான வழக்கறிஞராக இருந்தவர். பாட்டி கோகிலவாணி ஓர் இசைக்கலைஞர் மற்றும் ஆன்மிக சொற்பொழிவாளர்.[2][3]
இராணுவத்தில் இணைவு
[தொகு]திருச்சி தேசியக் கல்லூரியில் வேதியியல் படித்தார். 3-ம் ஆண்டு படிக்கும்போதே இராணுவத்தில் சேர்ந்து இரண்டாவது லெப்டினென்ட் ஆக பதவி ஏற்றார். பட்டப் படிப்பு முடிந்ததும், லெப்டினன்ட் ஆகப் பதவி உயர்வு பெற்று பாட்டியாலா சென்றார். இந்திய சீனப் போரின்போது பட்டன் தாங்கிப் பிரிவின் தலைமைப் பொறுப்பு ஏற்று, போரில் தாங்கிகளைப் பயன்படுத்தாமல் போர்வீரர்களைக் கொண்டே விரட்டி அடித்ததற்கு குடியரசுத் தலைவரின் வீரப்பதக்கம் பெற்றார். பின்னர் இராணுவப் பணியிலிருந்து விடுபட்டு சென்னை திரும்பி சசிகலா என்பவரை மணந்து கலைத்துறையில் சேர்ந்தார்.[2]
திரைத்துறையில்
[தொகு]சசிகுமார் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். சசிகுமார் ஏ. பி. நாகராஜனின் திருமலை தென்குமரி திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவள், வெள்ளிக்கிழமை விரதம் போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார்.[1]
தீ விபத்தில் இறப்பு
[தொகு]சசிகுமார் காங்கிரசுப் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்த போது, அவரது மனைவி சசிகலா சமையலறையில் சமையல் எரிவாயுவைப் பற்ற வைக்கும் போது அது தீப்பற்றிக் கொண்டதில் தீயில் அகப்பட்டுக் கொண்டார்.[4] மனைவியைத் தீயில் இருந்து காப்பாற்ற சசிகுமார் முயன்ற போது அவர் மீதும் தீ பரவியது. இருவரும் இராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இருவரும் 1974 ஆகத்து 24 இல் உயிரிழந்தனர்.[1] இவர்களுக்கு அப்போது இரு குழந்தைகள், பெண் குழந்தை நந்தினிக்கு வயது ஆறு, ஆண் குழந்தை விஜயசாரதிக்கு வயது நான்கு.[1][1] இவர்களின் இறுதிச் சடங்கில் காமராசர், உட்பட அரசியல், திரைப்படப் பிரபலங்கள் பலரும் கலந்து அஞ்சலி செலுத்தினார். இறுதிச் சடங்குகள் இராணுவ மரியாதையுடன் கண்ணம்மாபேட்டையில் நடைபெற்றது.[1][5]
சசிகுமாரின் இரு பிள்ளைகளும் தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சங்கத்தின் ஆதரவில், அவர்களின் பாட்டியின் பொறுப்பில் வளர்க்கப்பட்டனர். மகன் விஜயசாரதி தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். மர்மதேசம் போன்ற பல தமிழ் தொலைக்காட்சி நாடகங்களிலும், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1][2][6]
சசிகுமார் நடித்த திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் |
---|---|---|
1970 | திருமலை தென்குமரி | மோகன் |
1971 | புன்னகை | |
1971 | வீட்டுக்கு ஒரு பிள்ளை | கலைமணி |
1972 | அகத்தியர் | ஜெயேந்திரன் |
1972 | அவள் | |
1972 | காசேதான் கடவுளடா | |
1972 | ராணி யார் குழந்தை | ஜேம்சு |
1972 | தாய்க்கு ஒரு பிள்ளை | |
1973 | அரங்கேற்றம் | |
1973 | பாரத விலாஸ் | அமீர் |
1973 | தெய்வாம்சம் | |
1973 | ராஜபார்ட் ரங்கதுரை | ராமு |
1973 | சூரியகாந்தி | சுந்தர் |
1974 | பந்தாட்டம் | |
1974 | பணத்துக்காக | இன்ஸ்பெக்டர் சுந்தர் |
1974 | பருவகாலம் | ஜம்பு |
1974 | ரோஷக்காரி | |
1974 | சமர்ப்பணம் | |
1974 | சிசுபாலன் | |
1974 | திருடி | |
1974 | உங்கள் விருப்பம் | |
1974 | வெள்ளிக்கிழமை விரதம் | சுரேஷ் |
1974 | மலைநாட்டு மங்கை | |
1975 | மனிதனும் தெய்வமாகலாம் | கண்ணன் |
1976 | என்னைப்போல் ஒருவன் | உஷாவின் அண்ணன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Sasikumar, அன்று கண்ட முகம், அக்டோபர் 13, 2013
- ↑ 2.0 2.1 2.2 திரைப்படச்சோலை 22: சசிகுமார் வம்சம், இந்து தமிழ், 12 ஏப்ரல் 2021
- ↑ நடிகர் சிவகுமாரின் 50 ஆண்டு டைரி குறிப்பு, விகடன், 27 அக்டோபர் 2016
- ↑ Potpourri of titbits about cinema - Sasikumar
- ↑ தேசிய நடிகர் சிவகுமார், பேசும் படம், செப்டம்பர் 1974
- ↑ இலங்கை தமிழ்ச் சேனலில் கால்பதித்த 'நீங்கள் கேட்ட பாடல்' விஜயசாரதி!, விகடன், 4 ஏப்ரல் 2019