கொலோசையர் (நூல்)
கொலோசையர் அல்லது கொலோசையருக்கு எழுதிய திருமுகம் (Letter [Epistle] to the Colossians) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் பன்னிரண்டாவதாகவும், தூய பவுலின் திருமுகங்கள் வரிசையில் ஏழாவதாகவும் அமைந்துள்ளது. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole pros Kolossaeis (Επιστολή προς Κολοσσαείς) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula ad Colossenses எனவும் உள்ளது [1]. இம்மடல் தூய பவுலின் [2] பெயரால் கி.பி. 70-80 ஆண்டுகளில் அவரது சீடர் ஒருவரால் எழுதப்பட்டிருக்கலாம் என்பது அறிஞர் கருத்து. இதை மறுப்போரும் உள்ளனர் [3].
தூய பவுல் எழுதிய திருமுகங்களின் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
பெயர் |
கிரேக்கம் |
இலத்தீன் |
சுருக்கக் குறியீடு | ||
தமிழில் | ஆங்கிலத்தில் | ||||
உரோமையர் | Προς Ρωμαίους | Epistula ad Romanos | உரோ | Rom | |
1 கொரிந்தியர் | Προς Κορινθίους Α | Epistula I ad Corinthios | 1 கொரி | 1 Cor | |
2 கொரிந்தியர் | Προς Κορινθίους Β | Epistula II ad Corinthios | 2 கொரி | 2 Cor | |
கலாத்தியர் | Προς Γαλάτας | Epistula ad Galatas | கலா | Gal | |
எபேசியர் | Προς Εφεσίους | Epistula ad Ephesios | எபே | Eph | |
பிலிப்பியர் | Προς Φιλιππησίους | Epistula ad Philippenses | பிலி | Phil | |
கொலோசையர் | Προς Κολασσαείς | Epistula ad Colossenses | கொலோ | Col | |
1 தெசலோனிக்கர் | Προς Θεσσαλονικείς Α | Epistula I ad Thessalonicenses | 1 தெச | 1 Thess | |
2 தெசலோனிக்கர் | Προς Θεσσαλονικείς Β | Epistula II ad Thessalonicenses | 2 தெச | 2 Thess | |
1 திமொத்தேயு | Προς Τιμόθεον Α | Epistula I ad Timotheum | 1 திமொ | 1 Tim | |
2 திமொத்தேயு | Προς Τιμόθεον Β | Epistula II ad Timotheum | 2 திமொ | 2 Tim | |
தீத்து | Προς Τίτον | Epistula ad Titum | தீத் | Tit | |
பிலமோன் | Προς Φιλήμονα | Epistula ad Philemonem | பில | Philem |
கொலோசையர்: கிறிஸ்து பற்றிய மடல்
[தொகு]விவிலியத்தில் கிறிஸ்தியல் விளக்கம் மிகுதியாய்க் கொண்ட நூல் கொலோசையர் திருமுகம் ஆகும். கிறிஸ்து இல்லாமல் கிறிஸ்தவர்களாக வாழ இயலாது என இத்திருமுகம் வலியுறுத்திக் கூறுகிறது.
திருமுகம் எழுதிய ஆசிரியர்
[தொகு]கொலோசையர் திருமுகத்திலேயே தூய பவுல்தான் இதன் ஆசிரியர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காண்க:
- "கிறிஸ்துவோடு இணைந்து நம்பிக்கை கொண்டவர்களாய் வாழும் சகோதரர் சகோதரிகளாகிய கொலோசை நகர இறை மக்களுக்குக் கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாயிருக்கும் பவுலும் சகோதரர் திமொத்தேயுவும் எழுதுவது..." (கொலோ 1:1)
- "...பவுலாகிய நான் இந்நற்செய்தியை அறிவிக்கும் திருத்தொண்டன் ஆனேன்" (கொலோ 23).
- "...பவுலாகிய நான் இவ்வாழ்த்தை என் கைப்பட எழுதுகிறேன்..." (கொலோ 4:18).
இத்திருமுகத்தின் ஆசிரியர் தூய பவுல்தான் என்னும் கருத்து தொடக்க காலத் திருச்சபை அறிஞர்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தூய இரனேயு, அலக்சாந்திரியா கிளெமெந்து, தெர்த்தூல்லியன், ஒரிஜன், எவுசேபியுசு போன்றோரை இவண் குறிப்பிடலாம். 19ஆம் நூற்றாண்டுவரை இதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அண்மைக் காலத்தில் இத்திருமுகத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள், மொழிநடை, இறையியல் கருத்துக்கள் அடிப்படையில் இம்மடலைப் பவுலே நேரடியாக எழுதியிருக்க மாட்டார் என்னும் கருத்து வலுப்பெற்று வருகிறது [1]. அவரது கண்ணோட்டத்தில், மாறிவிட்ட கால கட்டத்திற்கும் சிக்கல்களுக்கும் ஏற்ப, அவரது பெயரில் பவுலின் சீடர் ஒருவர் இதனை எழுதியிருக்க வேண்டும் எனப் பல அறிஞர்கள் கருதுகின்றனர்.
பவுலின் பிற திருமுகங்களில் காணப்படாத 48 சொற்கள் கொலோசையரில் காணப்படுகின்றன. அவற்றுள் 33 சொற்கள் புதிய ஏற்பாட்டில் எங்குமே காணப்படவில்லை. திருவழிபாட்டில் பயன்படும் கவிதைகள் கொலோசையரில் மிகுதியாக உள்ளன. கிறிஸ்து, நிறைவுக்காலம், திருச்சபை போன்ற இறையியல் கருத்துகள் இம்மடலில் மிக விரிவாக உள்ளன. இத்தகைய வேறுபாடுகள் இத்திருமுகத்திற்கும் பவுலின் பிற திருமுகங்களுக்கும் இடையே காணப்படுவதால் தூய பவுல் இம்மடலை நேரடியாக எழுதியிருக்கமாட்டார் என்னும் கருத்து எழுந்துள்ளது.
மடல் எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்
[தொகு]சின்ன ஆசியாவிலிருந்த கொலோசை நகரத்தில் பவுல் நேரடியாக நற்செய்திப் பணி ஆற்றவில்லை; ஆனால் எபேசு நகரில் அவர் தங்கியிருந்தபோது எப்பப்பிரா மூலமாகக் கொலோசையில் நற்செய்தி அறிவித்தார் (கொலோ 1:7-8).
கொலோசை நகரில் ஞான உணர்வுக் கொள்கையின் தொடக்க வடிவமும் யூதச் சிந்தனைகளும் இணைந்த சில கொள்கைகள் பரவிக் கிடந்தன. அக்கொள்கைகளுள் சில:
- சடங்கு விதிகளுக்கு முக்கியத்துவம் தருதல் (கொலோ 2:16-17; 3:11);
- உடல் ஒறுத்தல் (கொலோ 2:21, 23);
- வானதூதர் வழிபாடு (கொலோ 2:18; 2:23);
- மனித ஞானத்திலும் மரபிலும் மிகுந்த நம்பிக்கை வைத்தல் (கொலோ 2:4,8).
மேற்கூறியவை ஞான உணர்வுக் கொள்கையில் விரவிக் கிடந்தன. இந்நிலையைக் கண்டித்துக் கிறிஸ்தவ உண்மையை நிலைநிறுத்த இத்திருமுகம் எழுதப்பட்டிருக்க வேண்டும். சிறையிலிருந்து எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்டிருப்பதால் இது "சிறைக்கூட மடல்களுள்" ஒன்றாகக் கருதப்பட்டது.
இம்மடல் கி.பி. 70-80 ஆண்டுகளில் எழுதப்பட்டிருக்கலாம்.
மடலின் உள்ளடக்கம்
[தொகு]இம்மடலில் இரு பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவு போதனைப் பகுதியாகவும் (அதிகாரங்கள் 1-2), இரண்டாம் பிரிவு நடைமுறை வாழ்க்கை நெறியாகவும் (அதிகாரங்கள் 3-4) அமைக்கப்பட்டுள்ளன.
கொலோசையில் இருந்த போலிப் போதகர்களின் தவறான கொள்கைகளைக் கண்டிப்பதற்காக இத்திருமுக ஆசிரியர் கிறிஸ்துவைக் கடவுளது சாயல் என்கிறார் (கொலோ 1:15). கிறிஸ்து அனைத்தையும் படைத்தவர் என நூலாசிரியர் கூறுகிறார் (கொலோ 1:16). அனைத்துக்கும் முந்தியவரும், அனைத்தையும் நிலைக்கச் செய்பவரும் கிறிஸ்துவே என்கிறார் (கொலோ 1:17).
இத்திருமுகத்தின்படி, கிறிஸ்து திருச்சபையின் தலைவர் (1:18), இறந்து உயிர்த்தெழுவோருள் தலைப்பேறு (1:18), கடவுளின் தன்மையை மனித உருவில் நிறைவாய்க் கொண்டவர் (1:19; 2:9), கடவுளோடு நம்மை மீண்டும் ஒப்புரவாக்குபவர் (1:20-22).
மடலின் முதற்பகுதியில் (அதிகாரங்கள் 1-2) கிறிஸ்துவின் தன்மையை எடுத்துக்காட்டிய திருமுக ஆசிரியர், இரண்டாம் பகுதியில் (அதிகாரங்கள் 3-4) இப்போதனை கிறிஸ்தவர்களின் வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என விளக்குகிறார். கிறிஸ்தவர்கள் பழைய இயல்பைக் களைந்து புதிய இயல்பை அணிந்துகொள்ள வேண்டும்; குடும்ப வாழ்விலும், தொழிலிலும், பொது வாழ்விலும் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்துகிறார்.
இறுதியில், திக்கிக்கு என்பவருக்கு நன்றி கூறி நண்பர்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார். இவ்வாறு இத்திருமுகம் நிறைவுறுகிறது.
கொலோசையர் திருமுகத்திலிருந்து ஒரு பகுதி
[தொகு]கொலோசையர் 1:13-20
"தந்தையாம் கடவுளே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத்
தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தினார்.
அம்மகனால்தான் நாம் பாவமன்னிப்பாகிய மீட்பைப் பெறுகிறோம்.
அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்;
படைப்பனைத்திலும் தலைப்பேறு.
ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை,
கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை,
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர்,
ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும்
அவரால் படைக்கப்பட்டனர்.
அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.
அனைத்துக்கும் முந்தியவர் அவரே;
அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன.
திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே.
எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு
இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார்.
தம் முழுநிறைவும் அவருள் குடிகொள்ளக்
கடவுள் திருவுளம் கொண்டார்.
சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும்
விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும்
அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்."
கொலோசையர் நூலின் உட்பிரிவுகள்
[தொகு]பொருளடக்கம் - பகுதிப் பிரிவு | அதிகாரம் - வசனம் பிரிவு | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. முன்னுரை
(வாழ்த்தும் நன்றியும் மன்றாட்டும்) |
1:1-14 | 375 |
2. கிறிஸ்துவின் மேன்மை | 1:15 - 2:3 | 375 - 376 |
3. போலிப் போதகர்களுக்கு எதிரான எச்சரிக்கை | 2:4-23 | 377 - 378 |
4. கிறிஸ்தவ வாழ்வு | 3:1 - 4:6 | 378 - 379 |
5. முடிவுரை | 4:7-18 | 379 - 380 |