கே. சி. சிவசங்கரன்
கே. சி. சிவசங்கரன் | |
---|---|
2013 இல் கே. சி. சிவசங்கரன் | |
பிறப்பு | காலத்தொழுவூர் சந்திரசேகரன் சிவசங்கரன் 19 சூலை 1924 காலத்தொழுவூர், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 29 செப்டம்பர் 2020[1] | (அகவை 96)
பணி | ஓவியர் |
செயற்பாட்டுக் காலம் | 1946–2020 |
அறியப்படுவது | அம்புலிமாமா[2] |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | வேதாளம் சொல்லும் கதை |
விருதுகள் | பத்மசிறீ[3] |
காலத்தொழுவூர் சந்திரசேகரன் சிவசங்கரன் (கே. சி. சிவசங்கரன், ஓவியர் சங்கர் என்றும் அழைக்கப்படுபவர்), (19 யூலை 1924 – 29 செப்டம்பர் 2020) என்பவர் பத்மசிறீ விருது பெற்ற இந்திய ஒவியர் ஆவார். இவர் முதன்மையாக இந்திய மொழிகளில் வெளியான அம்புலிமாமா (சந்தமாமா என்றும் அழைக்கப்படுகிறது) இதழுக்குப் பங்களித்தார். அம்புலிமாமாவில் இடம்பெற்ற வேதாளம் சொல்லும் கதை என்ற தொடரில் இவர் வரைந்த ஓவியம் பெரும் புகழைப் பெற்றது.[2] அசல் அம்புலிமாமா வடிவமைப்புக் குழுவில் கடைசியாக எஞ்சியிருந்தவராக சங்கரன் இருந்தார். அம்புலிமாமாவின் அடையாள ஓவியம், இவரது முத்திரைக் கையொப்பத்துடன், 1960 களில் வரையப்பட்டது. சந்தமாமாவுக்காக இவர் உருவாக்கிய ஆயிரக்கணக்கான ஓவியங்களில் இதுவும் ஒன்றாகும். பல தசாப்தங்களாக, அம்புலிமாமா பத்திரிகையின் தோற்றத்தை இவரது ஓவியங்கள் வழியாக வரையறுத்தார். இவரது கோட்டோவியங்களை இந்திய, கீழை நாட்டு, மத்திய கிழக்கு ஐரோப்பிய கலை மரபுகளினால் தாக்கமுற்ற பாணியுடன் இருந்தன.[1]
துவக்ககால வாழ்க்கை
[தொகு]சங்கர் இந்தியாவின், தமிழ்நாட்டின், தாராபுரத்துக்கு அருகில் உள்ள காலத்தொழுவூர் என்ற சிற்றூரில் 1924 இல் பிறந்தார். இவரது தந்தை உள்ளூர் பள்ளியில் ஆசிரியராக இருந்தார், இவரது தாயார் ஒரு இல்லத்தரசியாவார். இவருக்கு 4 சகோதரர்கள் உள்ளனர். 1934 இல், சென்னையில் ஒரு நெருங்கிய உறவினர் இறந்தபோது, சங்கரின் குடும்பம் இறந்தவரின் குடும்பத்துடன் வாழ சென்னை சென்றது. சங்கரன் சென்னை பிராட்வேயில் இருந்த மாநகராட்சிப் பள்ளியிலும், முத்தியால்பேட்டை பள்ளியிலும் படித்தார்.
சங்கர் தனது குழந்தை பருவத்திலிருந்தே ஓவியத்தின் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். இவரது வரலாற்றுப் பாடத் தேர்வுகளில், பிரபலமான வரலாற்று கதாபாத்திரங்களின் ஓவியங்களை வரைவார். இவரது குடும்பத்தினரால் இவரது ஓவியப் பொழுதுபோக்கிற்கு தேவைப்பட்ட பொருட்களை வாங்கித்தர முடியவில்லை. எனவே சங்கர் தனது வரைபட ஆசிரியருக்கு வார இறுதி நாட்களில் மற்ற மாணவர்களின் வரைபடங்களை வரைந்து, அவரிடமிருந்து ஓவியம் வரைய மூலப் பொருட்களைப் பெற்று அதை ஈடு செய்வார்.
கல்வியும், தொழிலும்
[தொகு]1941 இல் தனது தரம் 12 தகுதித் தேர்வை முடித்த பின்னர், இவருக்கு ஓவியத்தில் உள்ள திறமையைக் கண்ட ஓவிய ஆசிரியரின் ஆலோசனையின் பேரில் சென்னை அரசு கவின்கலை கல்லூரியில் இணைந்தார்.
ஓவியக் கல்லூரியில் படித்தபோது கண்ணன் கோபிகையருடன் இருப்பதுபோன்ற ஒரு ஓவியத்தை சங்கரன் வரைந்தார். அதை அக்கலூரியின் முதல்வராக இருந்த டி. பி. ராய் சௌத்தரி கலைமகள் இதழுக்கு அனுப்பினார். அந்த ஓவியம் கலைமகளில் வெளியாகி, சங்கரனுக்கு கலைமகள் இதழிலேயே 85 ரூபாய் மாதச் சம்பளத்தில் ஓவியர் பணி கிடைத்தது. அங்கு பணியில் இருந்தபோது கி. வா. ஜகந்நாதன், கு. ப. ராஜகோபாலன், அகிலன் போன்ற பிரபலமான எழுத்தளர்களின் கதைகளுக்கு ஓவியங்களை வரைந்தார். அகிலன் எழுதிய பெண்ணின் பெருமை என்ற தொடருக்கு வண்ண ஓவியங்களை வரைந்தார். மேலும் மஞ்சரி லெஜண்ட், கண்ணன் என்ற சிறார் பத்திரிக்கை போன்றவற்றிற்கு ஓவியம் வரையும் வாழ்ப்பைப் பெற்றார். அம்புலிமாமா இதழுக்கு முழுநேர ஓவியர் வேலைக்கு அந்த நிறுவனத்தால் அழைக்கப்பட்டார். அதை கலைமகள் நிர்வாகத்திடம் தெரிவித்து அவர்களின் ஒப்புதலுடன் அம்புலிமாமாவில் 1952 ஆம் ஆண்டு பணிக்குச் சேர்ந்தார். அங்கு 1953 சனவரியில் மனக்கணக்கு என்ற கதைக்கு தன் முதல் ஓவியத்தை வரைந்தார். இதற்குப் பிறகு 1964 இல் இருந்து விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் சொன்ன கதைக்கு தொடர்ந்து ஓவியங்களைத் தீட்டத் தொடங்கினார். 1952 இல் தொடங்கிய இவரது ஓவியப் பணி 2012 இல் அம்புலிமாமா இதழ் நிறுத்தப்படும்வரை 60 ஆண்டுகள் தொடர்ந்தது.[4]
2021 நவம்பரில், இவரது மரணத்திற்குப் பின்னர் இந்திய அரசாங்கத்தால் இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. சத்தீசுகர் மாநிலம் ராய்ப்பூரில் ஆங்கிலம் இந்தி என இரு மொழிகளில் வெளியாகும் கார்ட்டூன் வாச் என்ற இதழ் சங்கரனுக்கு 2015 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சங்கர் தன் மனைவி கிரிஜா, மகள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார். சங்கருக்கு மனைவி, 5 குழந்தைகள் (4 மகன்கள், 1 மகள்), 6 பேரக்குழந்தைகள் உள்ளனர்.[2] இவரது மூத்த மகன் தன் குடும்பத்தினரும் கனடாவில் வசிக்கின்றனர். இவரது மூன்றாவது மகனும் மனைவியும் ஆஸ்திரேலியாவில் வசிக்கின்றனர். இவர் 2020 செப்டம்பரில் தனது 96 வயதில் மூப்பின் காரணமாக இறந்தார்.[1][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "'Chandamama' artist KC Sivasankar passes away in Chennai". deccanherald.com. 30 Sep 2020. பார்க்கப்பட்ட நாள் 18 June 2021 – via News Deccan Herald.
- ↑ 2.0 2.1 2.2 "Vikram, Vetala and Sankar". thehindu.com. 9 Nov 2011. பார்க்கப்பட்ட நாள் 18 June 2021 – via News The Hindu.
- ↑ "Ten from T.N. chosen for Padma Shri". thehindu.com. 26 Jan 2021. பார்க்கப்பட்ட நாள் 18 June 2021 – via News The Hindu.
- ↑ "ஓவியர் சங்கர் நூற்றாண்டு: ஒரு தலைமுறை அடையாளச் சின்னமான விக்கிரமாதித்தன் - வேதாளம்". Hindu Tamil Thisai. 2024-10-06. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
- ↑ "'Chandamama' artist KC Sivasankar passes away in Chennai at 97". thenewsminute.com. 30 Sep 2020. பார்க்கப்பட்ட நாள் 18 June 2021 – via News The News Minute.