குமரகுருபரர்
குமரகுருபரர் | |
---|---|
பிறப்பு | 1625 திருவைகுண்டம், மதுரை நாயக்கர் அரசாட்சி (தற்போது தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 18 மே 1688 பெனாரசு, இலாகாபாத் சுபா, முகலாயப் பேரரசு (தற்போது வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா) | (அகவை 62–63)
சமயம் | இந்து |
பெற்றோர் |
|
தத்துவம் | சைவம் |
இலக்கிய பணிகள் |
குமரகுருபரர் (1625 - 18 மே 1688) சைவ நெறியைப் போற்றிய தருமபுரம் ஆதீனத்துடன் தொடர்புடையவர் ஆவார். இவரது நூல்கள் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் பிரபந்தங்கள் என்னும் பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.[1][2][3] இவரது நூல்கள் தோன்றியது பற்றிய கதைகளை மு. அருணாசலம் கையெழுத்து நிலையில் குறிப்புகளாக வைத்திருந்தார்.[4]
இளமைப்பருவம்
[தொகு]இவர் தமிழ்நாட்டுத் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் என்னும் ஊரில் சைவ வெள்ளாளர் குலத்திலே சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாகப் பிறந்தார். ஐந்து வயது வரை பேசும் திறன் அற்று இருந்தார் பின்பு இவரின் பெற்றோர் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்று வழிபடப் பேசும் திறன் வாய்க்கப் பெற்றார். அந்த வயதிலேயே கந்தர் கலி வெண்பா என்னும் பாடலைத் திருச்செந்தூர் முருகக் கடவுளைப் போற்றிப் பாடியுள்ளார்.[5] சில வருடங்களுக்குப் பிறகு . பின்னர்த் தருமபுரம் ஆதீனத்தில், மாசிலாமணி தேசிகர் என்பவரிடம் சீடராக இருந்தார். அங்குச் சைவ சித்தாந்தம் பயின்றார்.
குமரகுருபரர் தனது இளம் வயதிலேயே கடவுளை அறியும் பொருட்டு தன் குருவைத் தேடி வீட்டை விட்டு வெளியேறினார். திருச்செந்தூரில் அவர் இருந்தபோது, தன் குருவைக் காணும்போது தன்னால் சரியாகப் பேச இயலாத நிலை ஏற்படும் என்கிற அசரீரி ஒலியினைக் கேட்டார். அதனால் தன் குருவைக் காணும் நோக்கத்தில் மதுரை நகருக்கு வந்தார். அச்சமயத்தில் மதுரையைத் திருமலை நாயக்கர் ஆண்டு வந்தார். அவர் குமரகுருபரரை நன்கு கௌரவித்தார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை இயற்றினார். ஒரு சமயம், இந்த நூலில் உள்ள "வருகைப்பருவம்" என்னும் பகுதியை கோவில் மேடையில் அமர்ந்தவாறு பாடிய போது மதுரை மீனாட்சி அம்மனே சிறு பெண் வடிவத்தில் வந்து குமரகுருபரருக்கு முத்து மாலை பரிசளித்ததாக வரலாறு உள்ளது. மேலும் மீனாட்சி அம்மனைப் போற்றி மதுரைக் கலம்பகம், மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், நீதி நெறி விளக்கம் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். பின்னத்ர் திருவாரூர் சென்று அங்குள்ள தியாகராச பெருமானைப் போற்றித் "திருவாரூர் நான்மணி மாலை" என்னும் நூலை இயற்றினார்.
குருவைக் காணுதல்
[தொகு]குமரகுருபரர் திருவாரூரிலிருந்து தருமபுரத்திற்குப் பயணப்பட்டார். அவ்வாறு செல்லும்போது ஏதோ ஒரு பெரிய விளைவு தனக்கு ஏற்படப்போவதை உணர்ந்தார். தருமபுரத்தில் பாரம்பரிய சைவ மடம் ஒன்று இருந்தது. அதன் பெயர் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் என்பதாகும். அம்மடத்தை துறவி மாசிலாமணி தேசிகர் நிர்வகித்து வந்தார். குமரகுருபரர் அங்குச் சென்று அவரை வணங்கினார். அப்போது மாசிலாமணி தேசிகர், குமரகுருபரரிடம் பெரிய புராணத்தில் வரும் "ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள" எனத் தொடங்கும் பாடலின் சிறப்பம்சத்தை விளக்குமாறு கூறினார். அப் பாடலானது தில்லையில் உறையும் கடவுள் சிவபெருமானின் நாட்டியத்தைக் கண்டு மெய்யுருகி நின்ற "சுந்தரமூர்த்தி நாயனாரின் நிலையைச் சொல்வதாகும். சேக்கிழார் அந்த நிகழ்ச்சியை அழகாகப் பெரிய புராணத்தில் விவரித்திருப்பார். யாரால் அதை விளக்க முடியும்?
குமரகுருபரர் இதைக் கேட்டதும் வாயடைத்து நின்றார். அவருக்குத் தான் தேடி வந்த குரு மாசிலாமணி தேசிகர்தான் எனப் புரிந்து கொண்டு அவரைச் சரணடைந்தார். தேசிகர் ஒரு ஆன்மீக நோக்குடைய நபர் மட்டுமல்லர். சமுதாயத்தின் மீதும் அவருக்கு அக்கறை இருந்தது. ஆன்மீக ரீதியில் உயரும்போது, சுற்றியுள்ள எல்லா உயிர்களிடமும் ஒருவர் அன்பு நிறைந்தவராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். முகலாய சாம்ராஜ்யத்தின் கீழ் இந்து மதம் நசுக்கப்படுவதைத் தேசிகர் உணர்ந்திருந்தார். குமாரகுருபாரரைப் போன்ற ஆன்மீக ரீதியில் உயர்ந்த, திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள ஒருவரின் தேவையை அவர் உணர்ந்தார். எனவே அவர் காசி (வாரணாசி) யாத்திரை சென்று திரும்பி வரவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் குமரகுருபரரின் குருவாக இருக்க ஒப்புக் கொண்டார். பின்னர் அவர் குமரகுருபரரைத் துறவறம் மேற்கொள்ளச் செய்தார்.
சந்நியாசி வாழ்க்கை
[தொகு]குமரகுருபரர், தருமபுரம் மடத்திற்கு வந்த பிறகு, சைவ சித்தாந்த அமைப்பைப் பற்றி விரிவான ஆய்வு செய்து, தமிழ் குறித்த தனது அறிவை மேம்படுத்துவதில் பணியாற்றினார். ஒரு சந்நியாசி வாழ்க்கை முறையை வழிநடத்துவதில் அவரது ஆழ்ந்த கற்றல் மற்றும் நேர்மையை உணர்ந்து, மடத்தின் தலைவர்கள் அவருக்கு "தம்பிரான்" என்ற பட்டத்தை வழங்கினர். குருவின் ஆணைப்படி, காசிக்குச் சென்று சைவ சமயத்தைப் பரப்பினார். அங்குள்ள கேதாரேஸ்வர் கோவிலைைப் புதுப்பித்தார். மேலும், காசியில் மடத்தை நிறுவி இறக்கும்வரை அங்குத் தங்கியிருந்தார்.[6] இதன் கிளையொன்றைத் திருப்பனந்தாளிலும் நிறுவினார்.
2010-ஆவது ஆண்டு சூன் மாதம் 27-ஆம் தேதி அவர் மீது ஒரு நினைவு தபால்தலை இந்திய தபால் துறையால் வெளியிடப்பட்டது.[7] கயிலாசபுரத்தில் அடிகள் பிறந்த வீட்டுப் பகுதி அடிகளின் மடமாக ஆகஸ்டு 31, 1952-இல் அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகளால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
குமரகுருபரர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து, தவழ்ந்து, வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்து காவிரியாற்றங் கரையிலும் கங்கை ஆற்றங்கரையிலும் மடமமைத்துத் தமிழையும் சைவத்தையும் வளர்த்து கங்கை ஆற்றங்கரையில் இறைவனடி சேர்ந்தார்.
- மதுரைக் கலம்பகம்,
- நீதிநெறி விளக்கம்,
- திருவாரூர் நான்மணிமாலை,
- முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்,
- காசிக் கலம்பகம்,
- சிதம்பர மும்மணிக்கோவை,
- சகலகலாவல்லி மாலை
என்பன இவர் இயற்றிய பிற நூல்களாகும்.
மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதில் நீதிநெறி விளக்கம் என்ற நூல் பெயர் பெற்றது.
எழுதிய நூல்கள்
[தொகு]- கந்தர் கலிவெண்பா
- மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
- மதுரைக் கலம்பகம்
- நீதிநெறி விளக்கம்
- திருவாரூர் நான்மணிமாலை
- முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
- சிதம்பர மும்மணிக்கோவை
- சிதம்பரச் செய்யுட்கோவை
- பண்டார மும்மணிக் கோவை
- காசிக் கலம்பகம்
- சகலகலாவல்லி மாலை
- மதுரை மீனாட்சியம்மை குறம்|மதுரை மீனாட்சி அம்மை குறம்
- மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
- தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
- கயிலைக் கலம்பகம்
- காசித் துண்டி விநாயகர் பதிகம்
குமரகுருபரரைப் பாடியோர்
[தொகு]- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை 338 பாடல்களில் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளின் சரித்திரம் என்ற நூலை எழுதியுள்ளார்.
- சேற்றூர் இரா. சுப்பிரமணியக் கவிராயர் 1001 பாடல்கள் கொண்ட ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளின் புராணம் என்ற நூல் எழுதியுள்ளார்.
- பாரதிதாசன் குமரகுருபரர் மீது கொண்ட பற்றினால் தமது எதிர்பாராத முத்தம் என்ற நூலில் அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
- தேனூர் வே. செ. சொக்கலிங்கனார் சுவாமிகளைப் பற்றி செய்த தொண்டர் புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் பிரபந்தங்கள் [[உ. வே. சா. பதிப்பு, 1939
- ↑ http://www.tamilvu.org/courses/degree/c012/c0122/html/c012251.htm
- ↑ குமரகுருபரர் கட்டுரை குமுதம் பக்தி ஸ்பெசல் - 14.07.2016 பக்கம் 41
- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 17-ஆம் நூற்றாண்டு பாகம் 1, தி பார்க்கர் அச்சகம், முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு மார்கழி 2005
- ↑ "Blessed in life and death". The Hindu (Chennai, India). 24 November 2009 இம் மூலத்தில் இருந்து 28 நவம்பர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091128132731/http://www.hindu.com/2009/11/24/stories/2009112454640600.htm.
- ↑ "Divinity revealed". The Hindu (India). 7 December 2011. http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/divinity-revealed/article2693309.ece.
- ↑ "Stamps 2010". Postal department, Indian Government. Archived from the original on 14 August 2013. பார்க்கப்பட்ட நாள் 7 June 2013.
கருவி நூல்
[தொகு]குமரகுருபரர் கற்பனை. டாக்டர் ஆ.கந்தசாமி : முதல் பதிப்பு டிசம்பர் 1999 மணிவாசகர் பதிப்பகம்.