உள்ளடக்கத்துக்குச் செல்

குமரிக்கல்பாளையம் நெடுங்கல்: பெருங்கற்கால ஈமச்சின்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குமரிக்கல்பாளையம் நெடுங்கல்: பெருங்கால ஈமச்சின்னம் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், குமரிக்கல்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பெருங்கற்கால ஈமச்சின்னமாகும். போரிலே மரணமுற்ற வீரன் ஒருவனுக்காக நடப்பட்டதாகக் கருதப்படும் இந்த நெடுங்கல்லை இவ்வூர் மக்கள் தெய்வமாகக் கருதி வழிபாட்டு வருகிறார்கள். [1] இந்த நெடுங்கல் இந்தியாவிலேயே உயரமான நெடுங்கல் என்று கருதப்படுகிறது.[2]

அமைவிடம்

[தொகு]

குமரிக்கல்பாளையம் ஊத்துக்குளியிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், மாவட்டத்தலைநகர் திருப்பூரிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 638056 ஆகும். ஊத்துக்குளி இரயில் நிலையம் அருகில் உள்ள இரயில் நிலையம் ஆகும்.

சங்க இலக்கியம் காட்டும் நெடுங்கல்

[தொகு]

நெடுங்கல் (Menhir) என்பது இறந்தவர்களின் நினைவாக தரையில் நடப்பட்ட உயரமான ஒற்றைக்கல் ஆகும். புதைகுழியின் மீது நடப்பட்ட உயரமான நடுகல் ஆகும். உயரமான நடுகல் என்பதால், தமிழில் இதற்கு நெடுங்கல் என்று பெயர்.கல் பதுக்கை (Cist) [3], நடுகல் ஆகிய சொற்கள் அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. போரிட்டு மாண்ட வீரனின் நினைவாகவும், பாலைநிலத்து ஆறலைக் கள்வர்களால் கொல்லப்பட்ட வழிப்போக்கர்கள் நினைவாகவும் நடப்பட்ட நடுகல் குறித்த செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.[4] இக்காலகட்டத்தில் நடுகற்கள் நெடிதுயர்ந்த நெடுங்கற்களாக நடப்பட்டன. “இலக்கியங்களில் நெடுங்கல் என்று சொல்லப்படுவதுதான் நடுகல் என மருவிவிட்டது." என்று தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் குறிப்பிட்டுள்ளார்.[1]

 பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி 
 இனிநட் டனரே கல்லும் (புறநானூறு . 264)

இறந்தவரைப் புதைத்து கல் பதுக்கை சேர்த்திய பின்னர் கல் நாட்டுதல் குறித்து உறையூர் இளம் பொன் வாணிகனார் பாடிய புறநானூற்று பாடல் இதுவாகும்.[5]

 ஏறுடை இன நிரை பெயர, பெயராது,
 செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய
 தறுகணாளர் நல் இசை நிறுமார்,            
 பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின்,
 நட்ட போலும் நடாஅ நெடுங் கல்
 (அகநானூறு பாடல் 269 மதுரை மருதன் இளநாகனார்) 

ஆநிரை கவர்வோர் முன் எதிர்த்து நின்று மாண்ட தறுகண் மழவனின் பெயரை நிலைநிறுத்துவதற்கு கல்லைக் குடைந்து நடுகல் அமைப்பர். செத்துக்கிடக்கும் யானை போன்ற பெரிய பாறையில் நடுகல் பொறிக்கப்பட்டது.[6]

 சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர்
 உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல்
 நெடு நிலை நடுகல் நாட் பலிக் கூட்டும்
 (அகநானூறு பாடல் 289 எயினந்தை மகன் இளங்கீரனார்)  

எயினர் வில்லிலே நாண் பூட்டி எய்த அம்பு பட்டு புதிய வழிப்போக்கர்கள் வீழ்வர். இவ்வாறு வீழ்ந்தவர்கள் உடல்மேல் எழுப்பிய கல்லடுக்குப் பதுக்கையில் அதிரல் (காட்டுமல்லிகை) கொடி படர்ந்திருக்கும். அதிரல் மலர்களைப் பறித்து நெடிதான நடுக்கல்லுக்கு பலியாகச் சாத்துவர்.[7]

குமரிக்கல்பாளையம் நெடுங்கல்

[தொகு]

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், குமரிக்கல்பாளையத்தில் இந்தியாவிலேயே உயரமானது [2][8] என்று கருதப்படும் நெடுங்கல் 2016 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டுள்ளது. [2] ஏறக்குறைய 2300 ஆண்டுகள் தொன்மையானதாகக் கருதப்படும் இந்த நெடுங்கல்லின் தற்போதைய உயரம் 30 அடி, அகலம் 6 அடியாகும். சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நெடுங்கல்லின் தலைப்புப் பகுதியிலிருந்து சுமார் 4 அடி உயர நுணிக்கல் உடைந்து கீழே விழுந்துள்ளது. இந்த நெடுங்கல்லின் எடை சுமார் 10 டன் இருக்கலாம்.[1]

பெருங்கற்காலத்தில், இப்பகுதியில் வாழ்ந்திருந்த இனக்குழுக்களிடையே ஏற்பட்ட பூசலால், நிகழ்ந்த போரில், போரிட்டு வீரமரணமுற்ற ஒரு வீரனின் நினைவாக இந்த நெடுங்கல் நாட்டப்பட்டிருக்கலாம்.[1] இந்த நெடுங்கல், பெருங்கற்கால ஈமச்சின்னமான, நடுகல் வகையைச் சேர்ந்தது.

பண்டைத் தமிழகத்தில், பெருங்கற்படைக்காலம் என்பது கி.மு. 1000 முதல் கி.பி. 300 வரை நிலவியிருக்கிறது. இப்பகுதியில் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே இப்பகுதி ஈமக்காடாக இருந்திருக்கலாம்.[1] தொடக்கத்தில் நடுகற்கள் என்பன நெடிதுயர்ந்த நெடுங்கற்களாகத் திகழ்ந்தன. இவை 10 - 15 டன் எடைகொண்டிருந்தன என்று திருப்பூர் வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தின் பொறியாளர் சு.ரவிக்குமார் குறிப்பிட்டுளார்.[1] இந்த நெடுங்கல்லானது தரைக்கு மேலே 35 அடி உயரத்திலும், தரைக்குக் கீழே 10 அடி ஆழத்திலும் நாட்டப்பட்டுள்ளது. இத்தகைய நெடுங்கல்லை ஒரு தனிமனிதன் நாட்டியிருப்பதற்கான வாய்ப்புகள் அரிது. ஒரு இனக்குழு சமூகமே ஒருங்கிணைந்து இந்த நெடுங்கல்லை நாட்டியிருக்கும் வாய்ப்பு மிகுதி. இப்பகுதி மக்கள் இந்த நெடுங்கல்லை தெய்வமாக வழிபாட்டு வருகின்றனர். நெடுங்கல்லின் அடியில் சப்தகன்னியர் உருவங்களை அமைத்து வழிபாடு நடத்தி வருகிறார்கள்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 நெடிதுயர்ந்து நிற்கும் நடுகல்.. தெய்வமாய் வணங்கும் மக்கள்..! இரா.கார்த்திகேயன் இந்து தமிழ் திசை செப்டம்பர் 7, 2017
  2. 2.0 2.1 2.2 2.3 குமரிக்கல்பாளையம் தமிழிணையம் தகவலாற்றுப்படை
  3. அகநானூறு 109, 157, 215, 231, புறநானூறு 3, ஐங்குறுநூறு 362.
  4. தென்னிந்திய நடுகற்கள், கேசவராஜ், வெ., காவ்யா, சென்னை, 2008. பக். 84
  5. புறநானூறு 264 நடுகல் தமிழ்த்துளி ஏப்ரல் 17, 2015
  6. அகநானூறு Agananuru 269 தமிழ்த்துளி செப்டம்பர் 19, 2016
  7. அகநானூறு Agananuru 289 தமிழ்த்துளி பிப்ரவரி 17, 2019
  8. On the menhir trail Frontline Sep 06, 2013