காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது ஒரே ஒரு பாடல் குறுந்தொகை 347 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.
பாடல்
[தொகு]மல்கு கனை உலந்த நலகூர் சுரம் முதல்
குமரி வாகைக் கோலுடை நறு வீ
மடமாத் தோகை குடுமியின் தோன்றும்
கான நீளிடைத் தானும் நம்மொடு
ஒன்று மணஞ்செய்தனள் இவள் எனின்
நன்றே நெஎஞ்சம் நயந்த நின் துணிவே.
பாடல் சொல்லும் செய்தி
[தொகு]கனைப் புல் உலர்ந்து வறுமையுற்றிருக்கும் காட்டில் வாகைப் பூ மயிலின் கொண்டையைப் போலப் பூத்திருக்கும். பொருள் தேடச் செல்லும் அந்தக் காட்டில் தன் காதலியும் உடன் வந்தால் செல்லலாம் என்று காதலன் நினைக்கிறான். (அவளை அழைத்துச் செல்ல முடியாது. எனவே போகவேண்டாம் என்று தீர்மானிக்கிறான்)
கனைப் புல்
[தொகு]கனைப் புல்லை இக்காலத்தில் முறுக்கம்புல் என்பர். துணி தைக்கும் ஊசி போன்ற கதிர்நூனிகள் பல முறுக்கிக் கொண்டிருக்கும் புல் கனைப் புல். காய்ந்திருக்கும் இந்தப் புல்லில் ஈரம் பட்டதும் அதன் முறுக்கு உடைந்து விரிந்து உதிர்ந்து விழுந்து மண்ணில் புதுப்புல் முளைக்கும்.
உவமை
[தொகு]மயிலின் தலையுச்சி போல வாகைப் பூ பல நிறங்கள் கொண்டதாகவும், மென்மையானதாகவும் இருக்கும்.