கார்த்திகைச் சுளுந்து
கார்த்திகைச் சுளுந்து சிறுவர் விழாக்கால விளையாட்டு. கார்த்திகை மாதம் கார்த்திகைத் திருநாளன்று நடைபெறும். அண்மைக்காலமாக இந்த விளையாட்டு அருகிவருகிறது. கார்த்திகைத் திருநாளில் மகளிர் விளக்குகள் பல ஏற்றி வானத்து விண்மீன்கள் போல ஊரெங்கும் ஒளிரச் செய்வர். சிறுவர் தாமே செய்த சுளுந்தைச் சுற்றித் தீப்பொறிகள் சிதறும்படி செய்து மகிழ்வர். தற்போது இந்த விளையாட்டு மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள சில மாவட்டங்களில் சுளுந்தங்குச்சி என்றும் அறியப்படுகிறது.
சுளுந்து செய்யும் முறை
[தொகு]துவரங்கட்டைக் கரி, நெல் உமி, உப்பு, ஊமத்தஞ்சாறு ஆகியவற்றைச் சேர்த்து இடித்து நிழலில் காயவைத்து, சிறுசிறு துணிப்பைகளில் கட்டி வைத்துக்கொள்வர். சுமார் ஒரு அடி நீளமுள்ள 3 மூங்கில் சிம்புகளை நுனியில் கட்டி இடையில், முன்பே செய்து வைத்திருக்கும் பைகளில் ஒன்றை வைத்து மற்றொரு முனைகளை நீண்ட கயிற்றில் சேர்த்துக் கட்டி, பையில் தீ மூட்டிக் கயிற்றைச் சுற்றும்போது இக்கால மத்தாப்பைப் போலத் தீப்பொறி பறக்கும்.
பல சிறுவர்கள் ஒரே இடத்தில் நின்றுகொண்டு சேர்ந்தாற்போல் சுற்றும்போது சுற்றுபவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் பெருங் கொண்டாட்டம்.
சுளுந்து வகை
[தொகு]- கூந்தல்பனை மரத்தில் தொங்கும் காய்விழுதுகளைக் காயவைத்து ஒவ்வொன்றாக எடுத்து நுனியை நசுக்கித் தீப் பற்றவைத்துச் சுற்றுவர். இதிலும் பொறி பொறியாக விழும்.
- அகத்திக் குச்சியின் நுனியில் தீப் பற்றவைத்துச் சுற்றுவதும் உண்டு. இதில் தீ வட்டம் தெரியும்.
சுளுந்து சுற்றும்போது பாடும் பாடல்
[தொகு]- மாவளியோ மாவளி
- மாவளிக்காலன் பெண்டாட்டி
- மரக்கால் பிள்ளையைப் பெற்றாளாம்
- பார்க்கப் போன சீமாட்டி
- பல் உடைந்து செத்தாளாம்
- எடுக்கப் போன சீமாட்டி
- இடுப்பு ஒடிந்து செத்தாளாம்
வேறு பாடல்
- சோளப் பொரி
- சொக்குப் பொரி
- நாளை வரும் மாப்பிள்ளைக்கு
- நாழிப் பொரி
பார்க்க
[தொகு]கருவிநூல்
[தொகு]- டாக்டர் ஏ. என். பெருமாள், தமிழக நாட்டுப்புறக் கலைகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
- ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல், 627 716, 1982
- இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980