உள்ளடக்கத்துக்குச் செல்

காத்தவராய சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காத்தவராய சுவாமியும் மனைவியரும், வைரசெட்டி மாசி பெரியசாமி கோயில்

காத்தவராய சாமி என்பவர் இந்து சமய கிராமகாவல் தெய்வங்களில் ஒருவராவார். [1] இவர் குறித்தான காத்தவராயன் கதைப்பாடல், வாரார் அய்யா...காத்தான் வாரார் அய்யா...என கூத்துவடிவில் உடுக்கை அடிப் பாடலாக கூறப்பட்டு வருகிறது.

தாழ்த்தப்பட்ட சாம்பான் மகனான பரிமளச்சாம்பான் (காத்தவராயன்) பிராமண பெண்ணான மாலாவை (ஆரியமாலா) காதலித்து கடத்திச் சென்றமைக்காக அக்கால தர்மப்படி காத்தவராயன் கழுவேற்றம் எனும் தண்டனைப் பெற்றான். காத்தவராயன் கழுவேற்றப் பட்டதால் கழுமரமே காத்தவராயனாக வழிபடப் படுகிறது. கழுவேற்றத்திற்கு பிறகு காத்தவராயனுக்கு கழுவன், கழுவுடையான் என்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன.

தொன்மக் கதை

[தொகு]

முன்ஜென்ம கதை

[தொகு]

சிவபெருமானும், பார்வதியும் கங்கை நதிக் கரையில் தோட்டம் அமைக்கின்றனர். அந்தத் தோட்டத்திற்குப் பாதுகாவலுக்காக ஒருவரை தோட்டம் காத்தானாக சிவபெருமான் படைக்கிறார். ஒரு நாள் சப்த கன்னியர்கள் தோட்டத்திலுள்ள மலர்களைப் பறித்துச் சென்றதைக் காவலாளி அறிந்து கொண்டான். மறுநாள் அவர்கள் தோட்டத்திற்கு வந்து நீராடுகையில் ஒருத்தியின் ஆடையை மறைத்து வைத்தான்.

ஆடையைக் காணாது தவித்த பெண் நீரிலேயே இருக்க, பிறர் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர் காவலாளியை மனிதனாகப் பிறந்து, கழுவேற்றம் தண்டனையைப் பெருமாறு சாபமிட்டார்.

காத்தவராயன் பிறப்பும் வளர்ப்பும்

[தொகு]

காத்தவராயன் அரசின் நாடுகாவல் காக்கும் அதிகாரியான பெரியசாம்பான் சேப்பிளைக்காத்தான் - சங்கப்பதேவி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். அவர்கள் பரிமளம் என்று பெயரிடுகின்றனர்.காவல்காத்தான், ஊர்காத்தான்,எல்லைக்காத்தான், கன்மாய்காத்தான், ஏரிக்காத்தான்,நெல்களம்காத்தான், என காவல் காக்கும் சாம்பன் குல மரபுவழித்தொழிலை கொண்ட குடும்பத்தில் பிறந்தார் என்பதால் பிற்காலத்தில் காத்தவராயன் என்ற பெயர் வழங்கலாயிற்று

சப்த கன்னியர் பிறப்பு

[தொகு]

ஆடையைத் தொலைத்த பெண் அக்கரங்காடு ஆரியமாலா வாக சோமாசி ஐயர் எனும் பிராமணர் வீட்டிலும், பிற ஆறு பேர் வெவ்வேறு இடங்களிலும் பிறக்கின்றார்கள். வைரசெட்டி பாளையத்தில் மயிரழகியிடம் ஓந்தாயி, களத்தூர் சலுப்பர்-சலுப்பச்சியிடம் சவுதாயி, ஆட்பாடி இடையர் குலத்தில் கருப்பாயி, பாச்சூரில் பூவாயி, மாவாடி மங்களத்தில் நல்லதங்காள், நாகப்பட்டினம் புத்தூர் கிராமத்தில் வண்ணார நல்லி ஆகியோர் பிறந்தனர்.

சப்த கன்னியருடன் தொடர்பு

[தொகு]

காத்தவராயன் வளர்ந்ததும் சப்த கன்னியர்கள் ஒவ்வொருவருடனும் காதல் கொண்டு தொடர்பு கொள்கிறான். வைரசெட்டி பாளையத்தில் ஓந்தாயியைக் கண்டு அவளை, முதலைப்பாரில் சிறைவக்கிறான். களத்தூர் சவுதாயிடம் கோழி கொல்கிறான். ஆட்பாடி கருப்பாயி வீட்டில் தயிர்மோர் குடித்தான். புத்தூர் வண்ணாரநல்லிக்கு வேளாங்கண்ணி யில் பால் வாங்கி கொடுத்தான். பாச்சூர் பூவாயின் வீட்டில் மதுகுடித்தான். இறுதியாக ஆரியமாலாவுடன் உடன்போக்காக வேறிடம் சென்றான்.மண் குதிரை உயிர் குதிரையாக காத்தான் கைபட்டு ஓடியது இருவரும் கோடியக்காட்டுக்கு தப்பிச் சென்று நெடுங்காலம் தங்கி ஊர் நிலவரம் அறிய திரும்பி வரும் போது தேவதாக்குடி காட்டில் பதுங்கி இருந்த போது பிடிபட்டனர்

சின்னான்

[தொகு]

காத்தவராயன் நண்பர் சின்னான்.ஆரியமாலா விற்கும்,காத்தானுக்குமிடையே காதல் தூதுவராகவும், ஆரியமாலாவை கடத்திச் செல்ல உதவியாக இருந்தவரும் ஆவார்.

காத்தவராயனை தேடல்

[தொகு]

ஆரியமாலாவை காத்தவராயன் கவர்ந்து சென்றானென பிராமணர்கள் அரசனிடம் முறையிட்டனர். அரசன் நாடு காவலதிகாரி சேப்பிளையானை அழைத்து ஒரு வாரத்திற்குள் காத்தவராயனை கொண்டுவர சொல்கிறார். ஒருவாரம் சேப்பிளையான் தேடியும் காத்தவராயன் இருக்குமிடம் அறியமுடியவில்லை.

தன் தந்தையே தன்னை தேடுவதை அறிந்த காத்தவராயன் ஆரியமாலையிடம் தானே அகப்பட்டு கழுவேறி திரும்புவதாய் உரைக்கிறான். தேவதாக்குடி காட்டில் (இவ்விடம் தேத்தாக்குடியில் காத்தான்குத்தகை என வழங்கப்படுகிறது ) இரவில் மதுவருந்தி மயங்கி கிடக்கையில் காவலர்கள் சுற்றி வளைத்து பிடித்து கழுவேற்றி தண்டிக்க திருச்சிக்கு கொண்டுச் செல்கின்றனர்.

கழுமரம்

[தொகு]

கழுமரம் என்பது ஊரின் உயரமான மலைப்பாங்கான இடத்தில் மரத்தால் அமைக்கப்பட்ட ஒரு பழங்கால தண்டணை கருவி.தரையில் நடப்பட்ட சுமார் 30 முதல் 70 அடி உயரமுள்ள தேக்கு மரத்தின் உச்சியில் கூர்மையான வெண்கலம் பொருத்தப்பட்டிருக்கும்,அதன் கீழ் பிளஸ்(+) வடிவில் அரை அடி அகளமுள்ள கனமான மரச்சட்டங்கள் பொருத்தப்பட்டிருக்கும், மரச்சட்டங்களின் முனைப்பகுதியில் நான்கு தூண்டில் முள்களை சேர்த்தார்போல் நான்கு கூர்மையான முனைகள் கொண்ட ஒருஅடி நீளமுள்ள முற்கள் மரச்சட்டங்களின் நான்கு முனையிலும் அமைக்கப்பட்டிருங்கும். மரத்தின் மீது எவரும் ஏறமுடியாதபடி வழவழப்பு தண்மைக்காக மரம் முழுவதும் விளக்கு எண்ணை தடவப்பட்டிருக்கும்.வழுக்குமரம் கடுங்குற்றங்கள் செய்பவர்களை இந்த மரத்தின் முன்பாக கொண்டு வந்து அவரது கை,காள்களை கயிற்றால் கட்டிவிட்டு இடுப்பில் கயிறு கட்டி கழுமரத்தின் உச்சியில் இனைத்து கொடி ஏற்றுவது போல குற்றவாளியின் உடலை மரத்தில் ஏற்றுவார்கள், அவ்வாறு ஏற்றப்படும் உடல் மரச்சட்டங்களில் உள்ள தூண்டில் முள்களில் மாட்டிக்கொள்ளும் வகையில் கயிற்றின் மறுபக்கத்தில் நின்று இழுப்பார்கள்.கழுமரத்தின் உச்சியில் உடல் சென்று முள்ளில் சிக்கியதும் கயிறு அகற்றப்படும், இதன் பின் கழுமரத்தில் ஏற்றப்பட்டு தூண்டிலிடப்பட்ட உடலை கழுகு,காக்கை, போன்ற பறவைகள் உண்ணும். கழுமரத்தில் ஏற்றப்பட்டதும் உயிர் நின்றுவிடாது. அதில் உள்ள தூண்டில் முள் உடலின் எந்த பாகத்தில் குத்தி சிக்கி கொள்கிறதோ அதனைப் பொருத்தே உயிர்பிரியும் நாட்களை கூறமுடியும், ஏனெனில் தூண்டில் முள் கழுத்துபகுதியை குத்தினால் விரைவாக உயிர்போகும் மற்ற பாகங்ஙளில் குத்தினால் உயிர் பிரிய ஒரு வரங்கள்கூட ஆகலாம். கழுமரம் ஏற்றப்பட்டவரை உயிருடன் மீட்பது அவ்வளவு எளிதானதல்ல.இந்த கொடூரமான தண்டனை முறையால் மற்றவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது என்பது தான் இதன் மையக் கருத்து. அரபு நாடுகளில் இன்றும் கூட பொது வெளியில் கொடூர குற்றங்கள் புரிந்தவர்களை தூக்கிலிடும் முறை அமலில் இருந்து வருகிறது.

கழுவேற்றம்

[தொகு]

அரசன் முன்பு தன் முன்ஜென்ம கதையையும் சிவபெருமான் சாபத்தையும் எடுத்துரைக்கிறான் காத்தவராயன். அத்துடன் தான் பறையன் இல்லை, முற்பிறவியில் பிராமணன் என்கிறான்.

உயர்சாதி பிராமணப் பெண்ணை தாழ்சாதி ஆண் உடன்போக்கு செய்ததை காரணமாக்கிக் காத்தவராயனைக் கழுவில் ஏற்ற எண்ணியவர்கள் மனம் மாறுகிறார்கள். ஆனால் கழுவேறினால்தான் தன்சாபம் நீங்குமென காத்தவராயன் கழுவேறுகிறான்.

தூண்டிக்காரன்

[தொகு]

காத்தவராயனின் தாய் மாமன் பெரியண்ணன் என்கிற பெரியகருப்பன் காத்தான் கழுமரத்தில் ஏற்றப்பட்ட செய்தி சின்னான் மூலமாக அறிந்த காத்தானின் தாய்மாமன் பெரியகருப்பன் திருச்சிராப்பள்ளி வருகிறார். அரச படைகளை அடித்து வெட்டி அழித்துவிட்டு கழுமரம் ஏறி கழுமர தூண்டிலில் காத்தான் கழுத்து மாட்டியுள்ளதை தூண்டிலுடன் முறித்து காத்தானை கீழே இறக்கி வருகிறார்.கழு மரத்திலிருந்து காத்தவராயனை மீட்டதூண்டிலுடன் காத்த கருப்பன் தூண்டிகருப்பன் அல்லது தூண்டிக்காரன் என வணங்கப்படுகிறார். எவ்வளவு கொடிய ஆபத்திலும் தன்னை நம்பியவர்களை ஓடிவந்து மீட்டுச் செல்லும் கடவுளாக, காதலர்களின் காவல் தெய்வமாக திருமறைக்காடு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் தூண்டிக்காரன்''' வணங்கப்படுகிறார். ஆத்திரமடைந்த அரசப்படை பெரிய கருப்பனை பிடித்து தென்னம்புலம் ஐயனார் காட்டில் இரு கைகளிலும் மரத்துடன் இனைத்து ஆணி அடித்து தண்டனை வழங்கினர். பங்குனி உத்திரம் அன்று இறந்ததாக நம்பப்படுகிறது. சிவபெருமான் அருளால் காத்தவராயன் காக்கப்பட்டு, ஆரியமாலாவுடன் திருமணம் செய்து வைக்கப்படுகிறார். பெரிய கருப்பண் கைகளில் இருந்து ஆணி விடுவிக்க படுகிறது.

தற்கால சீர்திருத்த இயக்க மாற்றுக்கதை

[தொகு]

நாட்டார் வரலாற்று ஆய்வாளரான நா. வானமாமலை அவர்கள் காத்தவராயன் கதைபாடலின் பிற்சேர்க்கையை களைந்துள்ளார். [2] அவருடைய கூற்றின் படி காத்தவராயன் பறையர் சமூகத்தை சேர்ந்தவன். அவன் ஆரியமாலா என்ற பிராமண பெண்ணை காதலித்தான். இருவரும் உடன்போக்காக சென்றனர். [3] பிராமணர்கள் ஆரியபூஜனார் அரசனிடம் இச்செய்தியை கூறினர். சோழ அரசன் சேப்பிளையான் என்ற காவல் அதிகாரியிடம் அவனை கண்டுபிடித்து அழைத்துவர செய்கிறான். பின்பு காத்தவராயனை கழுவேற்றம் தண்டனை தந்து கொல்கிறான். [4]

பிராமணர் மற்றும் அரச குலத்தை சேர்ந்தவர்களுக்கு எதிரானதாக இக்கதை இருந்தமையால் பிற்சேர்க்கையாக கையிலை வாசம் மற்றும் வரம் குறித்த பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். [4]

விழாக்கள்

[தொகு]
  1. காத்தவராய கழுவேற்று விழா
  2. காத்தவராய - ஆரியமாலா திருக்கல்யாண விழா
  3. காத்தவராய சுவாமி விதி உலா

காத்தவராய கழுவேற்ற விழா

[தொகு]

சிவபெருமான் சாபத்தின் படி காத்தவராயன் கழுவேறுவதையும், பின்பு சிவபெருமான் கழுமரத்திலிருந்து காத்தவராயனைக் காப்பதையும் சித்தரிக்கும் விதமாக ஆடி மாதத்தில் காத்தவராய கழுவேற்று விழா ஆண்டுதோறும் திருச்சிராப்பள்ளி அம்மா மண்டபத்தில் நடைபெறுகிறது.[5]

இந்நாளுக்காக கழுமரமும், அதில் ஏற ஏணியும் தயார் செய்யப்படுகிறது. அதனடியில் பூசாரிகளால் காத்தவராயன் கதை பக்தர்களுக்குக் கூறப்படுகிறது. அன்னகாமாட்சி கோயிலிருந்து காத்தவராயன் வேடமிட்டவரை மருளாளிகள் அழைத்து வந்து, அதிகாலையில் கழுவேற்றம் செய்கிறார்கள்.

சடங்குகள் முடிந்த பின்பு காத்தவராயன் கழுவிலிருந்து இறங்குகிறார். காத்தவராயன், சந்தனக்கருப்பு, ஆரியமாலா, மருளாளிகள் என வேடமிட்டவர்கள் அன்னகாமாட்சி கோவிலுக்கு ஊர்வலமாக செல்கிறார்கள்.

கோயில்கள்

[தொகு]

காத்தவராயன் உடன் ஆரியமாலையும்,அவரது தாய்மாமன் பெரியன்னனும், காத்தவராயன் கையாள் தொட்டிக்கட்டி சின்னசாம்பனும் என ஓரே இடத்தில் வைக்கப்பட்டு வழிபாடு செய்து வருகிறார்கள். காத்தானை மட்டும் வழிபடுவதில்லை,இவைகளை இனைந்தே காத்தவராயன் சாமிக்கு நிறைய கிராமங்களில் கோவில்கள் உள்ளன. சில அம்மன் கோவில்களில் தனி சந்நிதி உள்ளது. காமாட்சி அம்மனை, மழைமாரியம்மனை குல தெய்வமாக கொண்டவர்கள் காத்தவராயனை உடன் தெய்வமாக வணங்குகிறார்கள். நிறைய கிராமங்களில் கோவில் கட்டி வழிபடுகின்றனர். அம்மன் வீதியுலா வின் போது காவல் தெய்வமான காத்தவராயன் முன்பு செல்ல பின்னர் அம்மன் வீதியுலா நடைபெறுவது நாகப்பட்டினத்தாரின் மரபு வழியாக உள்ளது.

படைப்புகள்

[தொகு]

காத்தவராயன் கதை பாடல்

திரைப்படங்கள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=24164 காத்தவராயன் கதை தினமலர் கோயில்கள்
  2. http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=235&pno=01
  3. http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=235&pno=2
  4. 4.0 4.1 http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=235&pno=5
  5. http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=466552&cat=504 பரணிடப்பட்டது 2021-05-16 at the வந்தவழி இயந்திரம் காத்தவராயன் கழுவேற்ற விழா- தினகரன்

வெளி இணைப்புகள்

[தொகு]
  • காத்தவராயன் கதைப்பாடல் - நா.வான்மாமலை,எம்,ஏ.எல்.டி.
  • மேல்மருவத்தூர் சோத்துப்பாக்கம் காத்தவராயன் கோயில், மேல்மருவத்தூர், தமிழ்நாடு 603319
  • காத்தவராயர் கோவில் https://maps.app.goo.gl/arQjLgwTGw4F2YGz9
  • தென்னம்புலம் தூண்டிக்காரன் கோவில், வேதாரண்யம் வட்டம் 614806 நாகப்பட்டினம் மாவட்டம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காத்தவராய_சாமி&oldid=4088848" இலிருந்து மீள்விக்கப்பட்டது