காட்டுமலை கந்தசாமி கோயில்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (சனவரி 2017) |
காட்டுமலை கந்தசாமி கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 9°46′12″N 80°07′20″E / 9.770134°N 80.122132°E |
பெயர் | |
பெயர்: | காட்டுமலை கந்தசாமி கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இலங்கை |
மாகாணம்: | வட மாகாணம் |
மாவட்டம்: | யாழ்ப்பாணம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | முருகன் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
தமிழர் தம் முன்னைப் பரம் பொருளாயும்,சைவசித்தாந்திகளின் பின்னைப் பெருமானாயும் விளங்கிடும் முருகப் பெருமானை வழிபடும் மரபு மிக தொன்மையானது. முருகப் பெருமான் எழுந்தருளி அருளாட்சி செய்யும் திருத்தலங்கள் ஈழத்தின் பல பாகங்களிலும் அமைந்துள்ளன. இந்த வகையில் தமிழுக்கு அணிகலனாய் சைவத்திற்கு உறைவிடமாய் விளங்கும் யாழ்ப்பாணத்திலே அச்சுவேலிப் பகுதியில் உள்ள நாவலம்பதி என்னும் ஊரில் காட்டுமலை கந்தசாமி கோயில் அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அச்சுவேலி பகுதியில் நாவலம்பதி என்னும் ஊரில் காட்டுமலை கந்தசாமி கோயில் அமைந்துள்ளது. https://goo.gl/maps/Eh8LWuVxgF22
காரணப்பெயர்
[தொகு]காட்டுமலை கந்தசாமி கோயில் அருளாளர் சீனியர் அவர்களால் கதிர்காம யாத்திரையின் பின் கதிர்காமத்தில் இருந்து கொண்டுவந்த வேலை வைத்து உருவாக்கப்பட்டது.கதிர்காம வேலவன் அருளின் விளைவாலே முருகன் ஆலயம் அச்சுவேலி நாவலம்பதியில் தோற்றம் பெற்றது .காடு மலை தாண்டி கதிரவன் திருவடி பணிந்து கதிர்காம வேலவன் வாக்கிற்கு இணங்கவே இவ்வாலயம் அமைக்கப்பட்டது.காட்டுமலை கந்தசாமி என்ற பெயர் வரவும் இதுவே காரணமாக அமைந்தது.
தோற்றம்
[தொகு]காட்டுமலை கந்தசாமி கோயில் எண்பது வருடச் சரித்திரத்தை கொண்டது. நாவலம்பதியிலே வசித்த சீனியர் என்னும் அருளாளர் தமக்குற்ற தீரா நோயைத்தீர்க்கும் முகமாக ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தெட்டாம் ஆண்டு கதிர்காம யாத்திரையை மேற்கொண்டார். அக்காலம் இந்த யாத்திரை அச்சம் தருவதும், அருமையுடையதும் புனிதமுள்ளதுமான ஒரு தவப்பேறாகும். காடும் மலையும் கடந்த அருளாளர் சீனியர் அவர்கள் கதிர்காமத்தை அடைந்து, அதிரவரு மாணிக்க கங்கைதனில் மூழ்கி அன்போடு கதிர்காம வேலவன் பவனி கண்டு கதிரமலை ஏறிக் கந்தனைத் தோத்தரித்து கற்பூரத் தீபமேற்றி விபூதிப் பிரசாதத்தோடு துணையாக வயது முதிர்ந்த ஒரு தம்பதிகளுடனும் ஊர் திரும்பினார்.
பண்டாரம் போல் வடிவம் தாங்கி வந்த தம்பதிகளுடன் நாவலம்பதிக்கு வந்து தாம் வதியும் மனைக்குச் சென்று(தற்போதைய மடம்) கால் கழுவி வர கிணற்றடிக்குச் சென்றனர். அவ்வேளை துணையாக வந்த வயது முதிர்ந்த தம்பதிகளைக் காணாது அருகில் உள்ள கொன்றை மரச் சோலையிலே தேடிப் பார்த்தார்.அவர்களைக் காணமுடியவில்லை.கந்தனையே வேண்டிய வண்ணம் தம்மனைபுகுந்தார்.
ஊழ்வினை வசத்தால் வந்த நோய்க்கு விபூதியே ஔடதமாக எண்ணி வாழ்ந்தார்.நோய் மேன் மேலும் வருத்தியது. கந்தன் கழலினையே தஞ்சமென எண்ணி நைந்துருகினார்.ஒரு நாள் கனவிலே முருகன் தோன்றி கதிர்காமத்திலிருந்து கொண்டு வந்த விபூதிப் பிரசாந்துடன் வேல் இருப்பதையும் அதனை ஒரு புனிதமான இடத்தைக் காட்டி அங்கே தன்னை வைத்துப் பூசித்தால் நோய் தீர்ந்து குணமடைவாய் எனக்கூறிப் போந்தார். அருளாளராகிய சீனியர் தாம் கண்ட கனவின் படியே ஆயிரத்து தொளாயிரத்து இருபத்தொன்பதாம் வருடம் (1929) ஆனித் திங்கள் இருபத்தைந்தாம் நாள் கதிரமலைக் கந்தனின் ஆலயத்தை நிறுவினார்.இவ்வாறு தோற்றம் பெற்ற ஆலயமே காட்டுமலை கந்தசாமி கோயில்.
ஆலய வரலாறு
[தொகு]1929 ஆம் ஆண்டு அருளாளர் சீனியர் அவர்கள் கோவிலை நிறுவிச் சுவாமியை பிரதிஸ்டை செய்ததோடு தாமே பூசகராய் அமர்ந்து நித்திய பூசைகளையும் செய்தார். தமிழ் வேதமாகிய தேவார,திருவாசகத்தை மந்திரமாக கொண்டு அவர் அன்போடு செய்த பூசை வெகு விரைவில் பலனளித்தது. நோய் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. அருளாளர் அகம் மிக மகிழ்ந்தார். காட்டுமலைக் கந்தனின் அருட்திறத்தை எண்ணி வியந்தார்.
காட்டுமலைக் கந்தனின் அருட் செயல்கள் யாழ்குடாநாடு எங்கும் பரவுவதாயிற்று தீராத நோய்களைத் தீர்த்தருள வல்லான் என்ற செய்தி நாடெங்கும் பரவவே வைத்தியர்களால் கைவிடப்பட்ட நோயாளர்கள் பலர் நீயே தஞ்சமென அடைக்கலம் புகுந்தனர். அருளாளர் சீனியர்,அப்பனை வணங்கி வெந்துயர் தீர்க்கும் விபூதியை அளித்து பலரை குணமாக்கினார். இச் செய்தி நாடறிந்த தொன்று. அருளாளர் சீனியர் அவர்கள் 1939 ஆம் வருடம் சிவப்பேறு அடைந்து விட்டார். அவரின் பின் அவரின் குமாரர்களாகிய சிவகுரு, குமரகுரு என்போர் நாவலம்பதி சைவப் பெருமக்களின் உதவியுடன் இக் கோவிலை நன்கு பரிபாலித்து வேண்டிய திருத்தங்களை செய்து அழகும், புனிதமும் பேணி நித்திய, பூசைகளில் கவனம் செலுத்தி வந்தனர்.
இக் கோவிலில் மூலமூர்த்தி சிவன் ஆக இருந்த போதிலும் ஆறுமுகப் பெருமானுக்கே சிறப்பிடம் தரப்பட்டது. சுற்றுப்புறத்தில் விநாயகரும்,அம்மையும்,வைரவர்,காளி,பழனி ஆண்டவர் முதலிய பரிவார மூர்த்திகளும் வீற்றிருக்கின்றனர். ஆலயம் ஸ்தாபிக்கப்பட்ட காலத்திலிருந்து 1971 ஆம் ஆண்டுவரை (1929-1971) வேற்பெருமானுக்கு விசேட உற்சவமாக ஆனிப்பூரணையில் தீர்தோற்சவம் நிகழும் வகையில் பதினைந்து திருவிழாக்கள்(15) நடைபெற்று வந்தன.
மூவைந்து தினங்கள் வெற்றி வேலுடன் வீதிவலம் வந்த காட்டுமலை வேலனது திருத்தல் வரலாற்றில் ஒரு புதுமை நிகழ்ந்தது. அவன்வாக்கிற்கமைய 1972 ஆம் ஆண்டில் திருவிழாவில் மாற்றம் செய்யப் பெற்றது. ஆனி அமாவாசையன்று தீர்த்தோற்சவம் நிகழும் வண்ணம் 25 தினங்கள் திருவிழா நடைபெறுகின்றது. மேலும் பூங்காவனம்,வைரவர் உற்சவம் ஆகிய திருவிழாக்களும் சேர்த்து 27 தினங்கள் உற்சவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.இவ் விழாக்கள் மட்டுமன்றி அம்பாளுக்குரிய நவராத்திரி பூசையும், திருவெம்பாவை , கார்த்திகை உற்சவம் , தைப்பூசம்,சூரசங்காரம்(கந்தஷஷ்டி உற்சவம்) ஆகிய காலங்களிலும், சித்திரை வருடப்பிறப்பன்று 1008 சங்காபிஷேகமும் விசேட பூசைகளாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் சித்திரையில் சித்திர குப்த விரத உற்சவமும் (சித்திரை பௌர்ணமி ) , மார்கழி மாதத்தில் காளி அம்பாளுக்கும்,வைரவசுவாமிக்கும் விசேட பொங்கல் பூசை(மடை) சிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாலயத்தின் தீர்த்தத் திருவிழா புதுமையானது.செல்வச்சந்நிதி குமாரவேல் ஆலயத்தினின்றும் பெருகிவரும் தொண்டைமானாறு வல்லைப் பெரும்பாலத்துக் கூடாக அச்சுவேலிப் பகுதிக்குள் புகுந்து நாவலம்பதியை அடைந்து அப்பாலும் பாய்கிறது.நாவலம்பதியில் இந்த ஆறு வயல்களை உப்பாக்காதவாறு வரம்பெடுத்துத் தடுக்கப்பட்டுருக்கிறது.காட்டுமலைக் கந்தன் ஆலயத்திலிருந்து 3/4 கிலோ மீற்றர் தூரமுள்ள இவ் ஆற்றுப் படுக்கையில் புனிதமான ஒரு குன்று எப்போதும் கடும் வரட்சியுள்ள கோடைக்காலத்திலும் கூட சுரந்து கொண்டிருக்கின்றது.அதிகம் ஆழமில்லாத இக் குன்று சிறு கிணறு போலக் கட்டப்பட்டிருக்கின்றது.இப்புனித இடம் கூடக் கந்தனின் அருளால் கனவிலே காட்டப்பட்ட இடமாகும் இவ்விடத்திலேதான் காட்டுமலைக் கந்தன் பக்தர்கள் புடைசூழ அரோகராச் சத்தம் ஒலிக்க தீர்த்தமாடித் திரும்புகின்றான்.
இத் தீர்த்தத்துக்கு இன்னொரு விசேடமும் உண்டு கோவில் கட்டாப்பட்ட வருடத்திலிருந்து 1971ஆம் ஆண்டுவரை கொடியேற்றத் தினத்திலன்று இப் புனிதக் குன்றிலிருந்து தீர்த்தம் கொண்டு செல்லப்பட்டு அதுவே எண்ணெயாகத் திரி தோய்க்கப் பெற்றுப் பதினைந்து நாட்களும் தீர்த்த விளக்காக எரிக்கப் பெற்று வந்தது.
படங்கள்
[தொகு]தேர்
[தொகு]
கோயிலின் வலைத்தளம்
[தொகு]மேலும் தகவலுக்கு கோயிலின் வலைத்தளம் [1]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-31. பார்க்கப்பட்ட நாள் 2017-06-04.