காடோவிகோவைட்டு
காடோவிகோவைட்டு (Godovikovite) என்பது (NH4)Al(SO4)2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய சல்பேட்டுக் கனிமம் ஆகும். கனிமத்தின் இயைபில் அலுமினியத்திற்குப் பதிலாக இரும்பும் ஒரு பகுதியாக இங்கு பதிலீடு செய்யப்பட்டிருக்கலாம். காடோவிகோவைட்டை நீரேற்ற வினைக்கு உட்படுத்துவதால் அமோனியம் படிகாரமும் திகெர்மிகைட்டும் உருவாகின்றன. பாறை இழையமைப்போடு நுண்துளைகளுடன் பொதுவாக வெண்மை நிறப் பொதிகளாக இக்கனிமம் உருவாகிறது. தனி படிகங்கள் மிகச்சிறிய அறுகோண தகடுகளாக காணப்படுகின்றன. நிலத்துக்கு அடியில் கனன்றுகொண்டு கொண்டிருக்கும் நிலக்கரி சுரங்கங்களின் சூழலில் குவியல்களாக காடோவிகோவைட்டு காணப்படுகிறது. அங்கு காணப்படும் சல்பேட்டு கனிம மேலோட்டில் மில்லோசெடிகைட்டுடன் ஒன்றாகச்சேர்ந்து இதுவும் காணப்படுகிறது [1][2].
உருசியாவில் உள்ள தெற்கு யூரல் மலை மண்டலத்தில் அமைந்திருக்கும் செலியாபின்சுக் மாகாண செலியாபின்சுக் நிலக்கரி வடிநிலத்தில் முதன்முதலாக 1988 ஆம் ஆண்டு காடோவிகோவைட்டு கண்டறியப்பட்டது. 1927 முதல் 1995 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த உருசிய கனிமவியலாலர் அலெக்சான்டரோவிச்சு காடோவிக்கோவ் நினைவாக கனிமத்திற்கு காடோவிகோவைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது [3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chesnokov B. V. and Shcherbakova E. P. 1991: Mineralogiya gorelykh otvalov Chelyabinskogo ugolnogo basseina - opyt mineralogii tekhnogenesa. Nauka, Moscow
- ↑ Jambor J. L. and Grew E. S. 1990: New mineral names. American Mineralogist, 76, pp. 240-246
- ↑ Godovikovite on Mindat.org