உள்ளடக்கத்துக்குச் செல்

கல்கா ஆற்று யுத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்கா ஆற்று யுத்தம்
மங்கோலியர்களின் கீவ உரூசு மீதான படையெடுப்பின் ஒரு பகுதி

மங்கோலியக் குதிரை வில்லாளர்கள்
நாள் மே 31, 1223
இடம் கல்கா ஆறு (தற்போதைய உக்ரைன்)
47°15′03″N 37°29′44″E / 47.25083°N 37.49556°E / 47.25083; 37.49556
மங்கோலிய வெற்றி
பிரிவினர்
மங்கோலியப் பேரரசு
புரோதினிசி
கீவ் வேள்பகுதி
கலீசிய-வோலினிய வேள்பகுதி
செர்னிகோவ் வேள்பகுதி
சுமோலென்சுக் வேள்பகுதி
குமன்கள்
தளபதிகள், தலைவர்கள்
செபே
சுபுதை
புலோசுகனீயா
துணிவான மிசுதிலாவ்
மூன்றாம் மிசுதிலாவ் (கைதிமரணதண்டணை
கலீசியாவின் டேனியல் (காயம்)
இரண்டாம் மிசுதிலாவ் சுவையாடோசுலாவிச் 
கான் கோதன்
பலம்
20,000–23,000 வீரர்கள்[1][2] 8,000–80,000[3][4][5][6][7][8]
இழப்புகள்
தெரியவில்லை கூட்டணிப் படையில் 60~–90% பேர் கொல்லப்பட்டனர்.[9]

கல்கா ஆற்று யுத்தம் (உக்ரைனியன்: Битва на річці Калка, உருசியம்: Битва на реке Калке)[1][2] என்பது மங்கோலியப் பேரரசின் செபே மற்றும் சுபுதையின் இராணுவங்கள் மற்றும், பல்வேறு உரூசு வேள் பகுதிகளின் கூட்டமைப்பிற்கு இடையே நடைபெற்ற ஒரு யுத்தமாகும். கீவ், கலிசியா-வோலினியா மற்றும் குமன்கள் ஆகியோர் உரூசு வேள் பகுதிகளில் அடங்குவர். அவர்கள் தைரிய மிசுதிலாவ் மற்றும் கீவின் மூன்றம் மிசுதிலாவ் ஆகியோரின் தலைமையில் போரிட்டனர். இந்த யுத்தமானது மே 31, 1223 ஆம் ஆண்டு உக்ரைனின் தற்கால தோனெத்ஸ்க் மாகாணத்தில் உள்ள கல்கா ஆற்றின் கரையில் நடைபெற்றது. இந்த யுத்தத்தில் மங்கோலியர்கள் தீர்க்கமான வெற்றியை பெற்றனர்.

மங்கோலியர்களின் நடு ஆசிய படையெடுப்பு மற்றும் இறுதியாக குவாரசமிய பேரரசின் வீழ்ச்சி ஆகியவற்றுக்குப் பிறகு தளபதிகள் செபே மற்றும் சுபுதை தலைமையிலான ஒரு மங்கோலிய படையானது ஈராக்-இ அஜம் பகுதிக்கு முன்னேறியது. செபே மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கானிடம் காக்கேசியா வழியாக முதன்மை ராணுவத்துடன் திரும்ப இணைவதற்கு முன் தங்களது படையெடுப்புகளை சிலவருடங்களுக்கு தொடர அனுமதி கோரினர். செங்கிஸ்கானின் பதிலுக்கு காத்திருந்த நேரத்தில், இருவரும் சார்சியா ராச்சியம் மீது ஒரு சோதனை ராணுவ ஓட்டத்தை நடத்தி தாக்கினர். போர் பயணத்தை மேற்கொள்ள இருவருக்கும் செங்கிஸ்கான் அனுமதி வழங்கினார். காக்கேசிய வழியாக சென்றவர்கள் முதலில் காக்கேசிய பழங்குடியினரின் ஒருங்கிணைந்த ராணுவத்தை தோற்கடித்தனர். பின்னர் குமன்களை தோற்கடித்தனர். குமன் கான் தனது மருமகன் கலிசியா-வோலினியாவின் இளவரசனான தைரிய மிசுதிலாவின் அவைக்கு தப்பித்து ஓடினார். மங்கோலியர்களை எதிர்த்துப் போர் புரிய உதவுவதற்கு அவரை சம்மதிக்க வைத்தார். தைரிய மிசுதிலாவ், கீவின் மூன்றாம் மிசுதிலாவ் உள்ளிட்ட உரூசு இளவரசர்களை உள்ளடக்கிய ஒரு கூட்டணியை உருவாக்கினார்.

ஒருங்கிணைந்த உரூசு இராணுவமானது முதலில் மங்கோலியர்களின் முன்வரிசை படையை தோற்கடித்தது. உரூசு ராணுவம் தோற்று ஓடுவது போல் நடித்த மங்கோலியர்களை துரத்தியது. பல நாட்களுக்கு இவ்வாறு துரத்தினர். இதன் காரணமாக உரூசு இராணுவமானது பல்வேறு பகுதிகளில் சிதறுண்டு இருந்தது. மங்கோலியர்கள் பிறகு கல்கா ஆற்றின் கரையில் யுத்த அணிவகுப்பில் நின்றனர். தைரிய மிசுதிலாவ் மற்றும் அவரது கூட்டாளிகள் எஞ்சிய ராணுவத்திற்காக காத்திருக்காமல் மங்கோலியர்களை தாக்கினர். தோற்கடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து நடந்த குழப்பத்தில் மற்ற பல இளவரசர்கள் தோற்கடிக்கப்பட்டனர். கீவின் மிசுதிலாவ் ஒரு அரண் நிறைந்த முகாமிற்கு பின்வாங்க கட்டாயப்படுத்தப்பட்டார். மூன்று நாட்களுக்கு தாக்குபிடித்தவர் தனக்கும் தனது வீரர்களுக்கும் பாதுகாப்பான வழி திரும்பிச்செல்ல கிடைக்கும் என்ற உத்தரவாதத்தின் பேரில் சரணடைந்தார். எனினும் சரணடைந்த பின்னர் மங்கோலியர்கள் அவர்களை கொன்றனர். கீவின் மிசுதிலாவை மரண தண்டனைக்கு உட்படுத்தினர். தைரிய மிசுதிலாவ் தப்பித்தார். மங்கோலியர்கள் ஆசியாவிற்கு திரும்பினர். அங்கு அவர்கள் செங்கிஸ்கானுடன் இணைந்தனர்.

பின்புலம்

[தொகு]

1219 ஆம் ஆண்டு தனது தூதுவர்களை கொன்றதற்கு பதிலடியாக,[10] மங்கோலிய கானாகிய செங்கிஸ்கான் குவாரசமிய பேரரசு மீது படையெடுத்தார்.[11] மூன்று ஆண்டுகள் நீடித்த அந்த படையெடுப்பில் செங்கிஸ்கான் மற்றும் அவரது தளபதிகள் குவாரசமிய இராணுவங்களை அழித்து பேரரசை சிதைவுற செய்தனர். குவாரசமிய சுல்தானாகிய அலா அத்-தின் முகமது காஸ்பியன் கடலிலிருந்த ஒரு தீவில் நோய்க்கு பலியானார். தனது மகன் ஜலால் அத்-தின் மிங்புர்னுவை நிலமற்றவராக விட்டுச் சென்றார்.[12]

முகமத்தை துரத்திய மங்கோலிய தளபதிகளில் ஒருவரான செபே முகமத்தின் இறப்பைப் பற்றி கேள்விப்பட்ட பொழுது செங்கிஸ்கானிடம் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் கால அவகாசம் கொடுக்குமாறு கோரினார். அவ்வருடங்களில் தனது படையெடுப்புகளை தொடர்ந்து விட்டு பிறகு காக்கேசிய வழியாக மங்கோலியாவிற்கு திரும்ப முடிவு செய்திருந்தார்.[13]

செங்கிஸின் பதிலுக்கு காத்திருந்த நேரத்தில் செபே மற்றும், முகமத்தை துரத்திய மற்றொரு தளபதியான சுபுதை ஆகியோர் தங்களது 20,000 வீரர்களைக் கொண்ட ராணுவத்தை வழிநடத்தினர். இந்த ராணுவத்தில் ஒவ்வொருவரும் ஒரு தியுமன் வீரர்களுக்கு தலைமை தாங்கினார்.[13] அவர்கள் தங்களுக்கு பின்னர் அழிவின் பாதையை விட்டு சென்றனர். பாரசீக ஈராக் (ஈராக்-இ அஜம்) மற்றும் அசர்பைஜான் ஆகிய பகுதிகள் வழியே சென்றனர். ரே, சஞ்சன் மற்றும் கஸ்வின் ஆகிய நகரங்களை சூறையாடினர். ஹமாதான் நகரம் எதிர்ப்பின்றி சரணடைந்தது. அதே நேரத்தில் அசர்பைஜானின் அட்டாபெக்கான ஒஸ்பெக் தனது தலைநகரமான தப்ரிசை மங்கோலியர்களுக்கு ஒரு பெரிய தொகை, உடை மற்றும் மங்கோலியர்களின் சிறந்த ஆயுதங்களான குதிரைகள் ஆகியவற்றை அளித்ததன் மூலம் அழிவிலிருந்து காப்பாற்றினார்.[14]

தப்ரிசிலிருந்து மங்கோலியர்கள் வடக்கு நோக்கி முன்னேறினர். தங்களது குளிர்கால முகாமை முகன் புல்வெளிகளில் அமைத்தனர். அங்கு மங்கோலிய ராணுவமானது குர்து இன மற்றும் துருக்மேனிய படைகளின் வரவால் வலுவடைந்தது. அவர்கள் தங்களது சேவையை மங்கோலியர்களுக்கு அளிக்க முன்வந்தனர்.[15]

காக்கேசியத் திடீர்த் தாக்குதல்

[தொகு]
1221ஆம் ஆண்டு மங்கோலியர்களின் சார்சியா மீதான படையெடுப்பு மற்றும் குனான் யுத்தம்.

அதே நேரத்தில் செபே மற்றும் சுபுதையின் கவனமானது வேறு பக்கம் திரும்பியது. 1221ஆம் ஆண்டின் சனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் குரா ஆற்றின் வழியாக சார்சியா இராச்சியத்தின் மீது வேவு பார்ப்பதற்காக அவர்கள் நுழைந்தனர். மங்கோலியர்களின் இலக்கானது அந்த நாட்டை வெல்வது கிடையாது. மாறாக அதைச் சூறையாடுவதாகும். குர்து மற்றும் துருக்மெனிய ஆட்களை தாங்கள் செல்வதற்கு முன்னர் மங்கோலியர்கள் அனுப்பினர். இருந்தும் சார்சியா மன்னனான நான்காம் ஜார்ஜ் லாசா 10,000 வீரர்களுடன் முன்னேறினார். திபிலீசிக்கு அருகில் மங்கோலியர்களின் முன்னேற்றத்தைத் தடுத்தார். மங்கோலியர்கள் பின்வாங்கினர். ஆனால் சாரர்சியா இராணுவத்தின் மீதான பதில் தாக்குதல்களைத் தொடர்ந்தனர்.

1221ஆம் ஆண்டு மார்ச் மாதம் மங்கோலியர்கள் அசர்பெய்சானுக்குத் திரும்பி வந்தனர். மரகே நகரத்தின் மீது முற்றுகை நடத்தினர். கைதிகளை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர். நகரத்தில் ஒவ்வொரு முறை தாக்குதல் நடத்தும்போது, நடத்தப்பட்ட பதில் தாக்குதலைத் தாங்கிக்கொள்வதற்காகக் கைதிகளைப் பயன்படுத்தினர். மாதக் கடைசியில் நகரத்தை மங்கோலியர்கள் கைப்பற்றினர். நகரத்தின் பெரும்பாலான மக்களைக் கொன்றனர். செபே மற்றும் சுதை தெற்கு நோக்கி முன்னேறிப் பகுதாதுவைக் கைப்பற்றத் திட்டமிட்டனர். பகுதாது அப்பாசியக் கலீபகத்தின் தலை நகரமாகும். கலீபா தனது சிறிய இராணுவத்துடன் ஈராக்கி அசம் பகுதியில் இருந்த நேரத்தில் பகுதிகளைக் கைப்பற்றி அவரிடம் மீட்புப் பணம் கேட்கலாம் என்று திட்டமிட்டனர். மாறாக மங்கோலியர்கள் மீண்டும் ஒருமுறை தங்கள் பார்வையை அமாதான் நகரத்தின் மீது திருப்பினர். இருந்தும் இந்த முறை நகரத்தின் தலைவர்கள் சரணடைவதில் தோல்வியடைந்தனர். மங்கோலியர்கள் நகரத்தைக் கைப்பற்றிச் சூறையாடுவதற்கு முன்னர் அந்த நகரத்தின் பாதுகாப்பாளர்கள் மங்கோலியப் படைகளின் மீது அதிகப்படியான சேதத்தை விளைவித்தனர்.[16]

1221ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மங்கோலியர்கள் வடக்கு நோக்கி சார்சியாவுக்கு மீண்டும் ஒருமுறை முன்னேறினர். குரா ஆற்று வழியாக நுழைந்தனர். திபிலீசியில் 30,000 வீரர்களைக் கொண்ட ஒரு வலிமையான சார்சிய-ஆர்மீனிய இராணுவமானது நிறுத்தப்பட்டிருந்தது.[17] மங்கோலியர்களுக்கும் உதவிப் படைகள் வந்தன. மங்கோலியர்களின் எண்ணிக்கை 30 ஆயிரமாக இருந்தது. உள்ளூர் துருக்மெனியத் துருப்புகள் மங்கோலியர்களின் உதவிக்காக வந்தன.[18] முதன்மை மங்கோலிய இராணுவமானது தோற்று ஓடுவது போல் நடித்த பொழுது, செபே 5,000 வீரர்களைக் கொண்டு ஒரு பதுங்கி இருந்து தாக்கும் திட்டத்தைச் செயல்படுத்தினார். துருக்மெனியர்களைத் தோற்கடித்த பிறகு சார்சியக் குதிரைப்படையானது சுபுதையின் இராணுவத்தைத் துரத்தியது. சார்சிய இராணுவம் செபே பொறி வைத்திருந்த இடத்திற்குள் நுழைந்தபோது அவர்களைச் சுற்றி வளைத்து மங்கோலியர்கள் அழித்தனர். குனான் யுத்தத்தில் கடுமையான தோல்வியைச் சார்சிய இராணுவம் சந்தித்தது. ஜார்ஜ் மன்னர் படுகாயமடைந்தார். பிறகு தெற்கு சார்சியாவைச் சூறையாடுவதற்காக மங்கோலியர்கள் சென்றனர்.[19]

பின்னணி

[தொகு]
குமன் கானரசு மற்றும் உரூசு வேள் பகுதிகளைக் காட்டும் ஒரு வரைபடம்

இறுதியாகச் செங்கிஸ்கான் செபேவுக்கு அனுமதி வழங்கினார். செபேவுக்கு உதவித் தளபதியாகச் சுபுதையை நியமித்தார்.[13] தெர்பந்து நகரத்தை நோக்கி மங்கோலியர்கள் முன்னேறினர். அந்த நகரம் சரணடைய மறுத்தது. காக்கேசிய வழியாகத் தங்களை அழைத்துச் செல்வதற்காக 10 வழிகாட்டிகளை அனுப்பினால், அதற்குப் பதிலாக நகரத்தை விட்டுவிடுவதாக செபே உறுதி அளித்தார். வழிகாட்டிகள் ஏதாவது தந்திரம் செய்யக்கூடாது என்று எச்சரிப்பதற்காக, வழிகாட்டிகளில் ஒருவரை மங்கோலியர்கள் மரண தண்டனைக்கு உட்படுத்தினர். காக்கேசியாவைக் கடந்த பயணமானது மங்கோலியர்களுக்குக் கடினமானதாக இருந்தது. இப்பயணத்திற்காக மங்கோலியர்கள் தங்களது முற்றுகை எந்திரங்களை அப்படியே விட்டு விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. குளிரால் நூற்றுக்கணக்கான வீரர்களையும் இழந்தனர்.[20]

காக்கேசியா வழியாகப் பயணித்த பிறகு, லெசுகியர்கள், ஆலன்கள் மற்றும் செர்கீசு ஆகியோரை உள்ளடக்கிய ஒரு கூட்டணிப் படையினரை மங்கோலியர்கள் எதிர்கொள்ள வேண்டி வந்தது. காக்கேசியாவுக்கு வடக்கே வாழ்ந்த இந்தப் பழங்குடியினங்கள் சுமார் 50,000 வீரர்களை உள்ளடக்கிய ஓர் இராணுவத்தைத் திரட்டியிருந்தன.[21] இவர்களுடன் குமன்கள் என்ற ஒரு துருக்கிய இன மக்களும் இணைந்திருந்தனர். குமன்கள் பால்காஷ் ஏரி முதல் கருங்கடல் வரை விரிந்திருந்த ஒரு நீண்ட கானரசை ஆண்டு வந்தனர். வோல்கா பல்கேரியா மற்றும் கசர்களையும் தங்களுடன் இணையுமாறு குமன்கள் இணங்க வைத்தனர். குமன் கானான கோதன் தனது இராணுவத்தை நிர்வகிக்கும் பொறுப்பைத் தனது சகோதரர் யூரிக்கும், தன் மகன் டேனியலுக்கும் வழங்கியிருந்தார். இந்தக் கூட்டணிப் படைகளுக்கும் மங்கோலியர்களுக்கும் இடையிலான முதல் யுத்தமானது யாருக்கும் வெற்றி தோல்வியின்றி முடிந்தது. ஆனால் இந்தக் கூட்டணியிலிருந்து விலகுமாறு குமன்களை மங்கோலியர்கள் இணங்க வைத்தனர். அவர்களுக்குத் துருக்கிய-மங்கோலிய நட்பை நினைவுபடுத்தினர். காக்கேசியப் பழங்குடியினங்களிடமிருந்து பெறப்பட்ட பொருட்களின் ஒரு பகுதியை அவர்களுக்குக் கொடுப்பதாக உறுதி அளித்தனர்.[22]

இந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு மங்கோலியர்கள் கூட்டணி இராணுவத்தைத் தாக்கினர். அவர்களைத் தோற்றோடச் செய்தனர். பிறகு குமன்களைத் தாக்க மங்கோலியர்கள் முன்னேறினர். குமன்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தங்களது நாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த இரண்டு இராணுவங்களையும் மங்கோலியர்கள் அழித்தனர். அனைத்துக் கைதிகளையும் மரண தண்டனைக்கு உட்படுத்தினர். அசுதிரகானைச் சூறையாடினர்.[23] வடமேற்கு திசையில் தப்பி ஓடிய குமன்களை மங்கோலியர்கள் துரத்த ஆரம்பித்தனர்.[24]

வெனிசியர்கள் மங்கோலியர்களுக்கு ஒரு குழுவை அனுப்பினர். தாங்கள் செல்லும் வழியில் இருக்கும் மற்ற எந்த ஐரோப்பிய வணிக நிலையங்களையும் அழிக்க வேண்டும் என மங்கோலியர்களுடன் ஒரு கூட்டணி ஒப்பந்தத்தை அவர்கள் ஏற்படுத்தினர்.[25] மங்கோலியர்கள் குமன்களைத் துரத்த ஆரம்பித்த போது, செபே ஒரு இராணுவப் பிரிவைக் கிரிமியா மூவலந்தீவுக்கு அனுப்பினார். அங்கு செனோவாக் குடியரசுக்கு வணிக நிலையங்கள் இருந்தன. செனோவா நகரமான சோல்தயாவை மங்கோலியர்கள் கைப்பற்றிச் சூறையாடினர். அதே நேரத்தில் கோதன் தனது மருமகனான கலீசியாவின் இளவரசனான துணிவான மிசுதிலாவின் அவைக்குத் தப்பித்து ஓடினார்.[24] அவர் மிசுதிலாவிடம் பின்வருமாறு எச்சரித்தார்: "இன்று மங்கோலியர்கள் எங்களது நிலத்தை எடுத்துக் கொண்டுள்ளனர், நாளை அவர்கள் உங்களது நிலத்தை எடுத்துக்கொள்வார்கள்".[26] எனினும் குமன்களின் எச்சரிக்கையானது கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருந்தது. ஏனெனில் தசாப்தங்களாகக் குமன்களின் திடீர்த் தாக்குதல்களினால் உரூசானது பாதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தினியேசுதர் ஆற்றின் பக்கவாட்டில் மங்கோலியர்கள் அணிவகுத்து வருகின்றனர் என்ற செய்தியானது கீவை அடைந்தபோது உரூசு எதிர்வினையாற்றியது.[27] மிசுதிலாவ் கீவ உரூசு இளவரசர்கள் அடங்கிய ஒரு கூட்டணியை ஏற்படுத்தினார். இதில் அவருக்கு உதவி அளிப்பதாக உறுதி அளித்த விளாதிமிர் சுசுதாலின் இளவரசனான இரண்டாம் யூரி மற்றும் கீவின் மூன்றாம் மிசுதிலாவ் ஆகியோரும் அடங்குவர். உரூசு இளவரசர்கள் பிறகு தங்களது இராணுவங்களைத் திரட்ட ஆரம்பித்தனர். மங்கோலியர்களைச் சந்திக்கும் இடத்திற்குப் புறப்பட்டனர்.[23]

யுத்தம்

[தொகு]

ஆரம்ப நகர்வுகள்

[தொகு]

இந்த யுத்தத்தில் எவ்வளவு வீரர்கள் பங்கேற்றனர் என்பது விவாதத்திற்குரியதாக உள்ளது. எந்த ஒரு முதன்மை நூலும் இந்த யுத்தத்தில் எவ்வளவு எண்ணிக்கையிலான வீரர்கள் இருந்தனர் என்ற உண்மையைக் கொடுக்கவில்லை என்பது ஒரு முக்கியக் காரணியாக உள்ளது. இது வீரர்களின் எண்ணிக்கையை மதிப்பிடும் நிலைக்கு நவீன வரலாற்றாளர்களைத் தள்ளியுள்ளது. வரலாற்றாளர் லியோ டி கார்டாக், உரூசு இராணுவத்தின் அளவை 30,000 என்று குறிப்பிடுகிறார்.[28] அதே நேரத்தில் ரிச்சர்ட் கேப்ரியல் மற்றும் சாகி ஆகியோர் உரூசு இராணுவத்தின் அளவை 80,000 என்று கூறுகின்றனர்.[7] லியோ டி கார்டாக் மங்கோலிய இராணுவத்தின் அளவை 20,000 என்று மதிப்பிடுகிறார். அதே நேரத்தில் கேப்ரியல் மங்கோலியர்கள் சுமார் 23,000 வீரர்களைக் கொண்டிருந்திருக்கலாம் என்று மதிப்பிடுகிறார்.[2] கீவ உரூசு மற்றும் ஆரம்ப உருசிய வரலாற்றில் நிபுணரான மற்றும் முதன்மை நூல்களைப் பற்றி நன்றாக அறிந்தவருமான வரலாற்றாளர் யோவான் பென்னல் இந்த பெரும்பாலான எண்ணிக்கைகள் குறித்து சந்தேகிக்கிறார். உருசிய நூல்களில் தரப்பட்டுள்ள எண்ணிக்கையானது மதிப்பீட்டின்படியோ அல்லது மிகைப்படுத்தப்பட்டதாகவோ உள்ளது. அனைத்து நூல்களும் ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபடுகின்றது. இந்த எண்ணிக்கைகள் பற்றிக் குறிப்பிடும் மங்கோலிய அல்லது போலோவிதிசிய நூல்கள் இல்லை அல்லது இதைக் குறிப்பிட்ட எந்த ஒரு நூலும் தற்போது எஞ்சியிருக்கவில்லை. இந்த எண்ணிக்கைகளைக் குறிப்பிட்டுள்ள மற்ற கலாச்சாரத்தைச் சேர்ந்த நூல்கள் எஞ்சியிருந்தாலும் அவையும் தவறான தகவல்களையே கொண்டுள்ளன.[3] நோவ்கோரோட் முதல் நூல் மற்றும் முதன்மை நூல் ஆகிய இரண்டிலும் தரப்பட்டுள்ள தகவல்கள் உரூசு படைகளில் மொத்தமாக 11,000 வீரர்கள் இருந்தனர் என்பதைக் காட்டுகின்றன. ஆனால் பென்னல் இந்த எண்ணிக்கையைக் கூட மிகைப்படுத்தப்பட்டது என்கிறார்.[3] அதே நேரத்தில் சோவியத் காலத்தைச் சேர்ந்த உருசிய வரலாற்றாளர்கள் பாரம்பரியமாக 80,000 - 1,00,000 வரையிலான மதிப்பீடுகளைக் கொடுக்கின்றனர். நவீன உருசிய வரலாற்றாளர்கள் புனராய்வு நிலைப்பாட்டை எடுக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டு வீரர்களின் எண்ணிக்கையைப் பெருமளவுக்குக் குறைத்துள்ளனர். அவர்களின் கூற்றுப்படி மங்கோலியர்களிடம் எண்ணிக்கையில் அதிகமான வீரர்கள் இருந்தனர்.[4] உருசிய வரலாற்றாளரான டி.ஜி. குருசுதலேவின் 2013ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி உரூசு இராணுவமானது கூலிப்படையினரையும் சேர்த்து 10,000 வீரர்களைக் கொண்டிருந்தது. அதேநேரத்தில் குமன்கள் 5,000 குதிரைப்படையினரைக் கொண்டு வந்தனர். இவ்வாறாக மொத்த இராணுவத்தின் அளவானது 15,000மாக இருந்தது.[5] கார்ல் சுவெர்துரப்பின் மதிப்பீட்டின் படி, உரூசிடம் 8,000 வீரர்கள் இருந்தனர் மற்றும், 30,000 மற்றும் 80,000 போன்றவை அதிகப்படியான மிகைப்படுத்தலாகும்.[6] மங்கோலியர்கள் இவர்களின் அளவை மிகுதியான எண்ணிக்கையாகக் கருதினர். இவர்களை இடம்பிறழச் செய்ய மங்கோலியர்கள் செய்த மட்டுமீறிய முயற்சிகள் இதை நமக்கு உணர்த்துகின்றன.[29]

உரூசு இராணுவத்தின் நகர்வை மங்கோலியர்கள் கண்டறிந்தனர். மங்கோலியர்கள் தினேப்பர் ஆற்றின் கிழக்குப் பகுதியில் செங்கிஸ் கானின் மூத்த மகன் சூச்சியிடமிருந்து வரும் வலுவூட்டல் படைகளுக்காகக் காத்திருந்தனர். ஏரல் கடலைச் சுற்றியிருந்த பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளைச் சூச்சி மேற்கொண்டிருந்தார். எனினும் சூச்சிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் பொருள் வலுவூட்டல் படைகள் வராது என்பதாகும்.[27]

அதே நேரத்தில் உரூசு இராணுவத்தினர் மங்கோலியர்களைப் பொறியில் சிக்க வைக்க முயற்சித்தனர். கலீசியா மற்றும் வோலினியாவின் இளவரசர்கள் தங்களது இராணுவங்களை ஆற்றின் தெற்குப் பக்கவாட்டு வழியே நகர்த்தினர். கீவ் மற்றும் செர்னிகோவின் இளவரசர்கள் ஆற்றின் வடக்குப் பகுதி நோக்கி முன்னேறினர். குருசுகுவின் இராணுவமானது முன்பகுதியை நோக்கி முன்னேறியது. மங்கோலிய இராணுவத்தின் பின்பகுதியைத் தாக்கக் குமன்கள் முயற்சித்தனர்.[27] செபேவுக்கு இது தெரிந்தபோது, கீவின் இளவரசனுக்கு 10 தூதுவர்களை அவர் அனுப்பினார். அந்தத் தூதுவர்கள் மங்கோலியர்களுக்கு உரூசுடன் எந்தச் சண்டையும் கிடையாது எனவும், தாங்கள் குமன்களை மட்டுமே தாக்க வந்ததாகக் கூறினர். மேலும் மங்கோலியர்கள் உரூசின் நகரங்களிலிருந்து எதிர்த் திசையில் கிழக்கு நோக்கி அணிவகுத்துச் செல்வதாகவும் கூறினர். அத்தூதுவர்களைக் கீவின் மிசுதிலாவ் மரண தண்டனைக்கு உட்படுத்தினார். இதற்கு எதிர்வினையாக மங்கோலியர்கள் மற்றொரு தூதுக் குழுவை அனுப்பினர். அத்தூதுவர்கள் போரை அறிவித்தனர்.[30]

உரூசின் நகர்வுகளைச் செபே மற்றும் சுபுதை அறிந்தபோது அவர்கள் உரூசிலிருந்து எதிர்த்திசையில் கிழக்கு நோக்கி நகர ஆரம்பித்தனர். அந்த ஒரு திசையில்தான் மங்கோலியர்களால் நகரவும் முடியும். மங்கோலியர்கள் அமபெக்கு என்று ஓர் அதிகாரியின் தலைமையில் 1,000 வீரர்களைக் கொண்ட ஒரு பின்வரிசைப் பிரிவை விட்டுச் சென்றனர். அவரது பணி உரூசின் நகர்வுகளைப் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பதும், தூண்டிலாகச் செயல்படுவதும் ஆகும். சீக்கிரமே துணிவான மிசுதிலாவ் மங்கோலியர்களின் பின்வரிசைப் படை இருந்ததற்கு எதிர்ப்புறமாக இருந்த ஆற்றுப்பகுதிக்கு வந்தார். எந்த உரூசு இளவரசனும் ஒட்டுமொத்த இராணுவத்திற்குத் தலைவனாக நியமிக்கப்படவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இவ்வாறாக அனைத்து இளவரசர்களும் தங்கள் மனம் போன போக்கில் செயல்படலாம் என்ற நிலை இருந்தது. இறுதியாக மங்கோலியர்களின் கடுமையான அம்பு மழைக்கு நடுவிலே மிசுதிலாவ் ஆற்றைக் கடந்தார். இருந்த போதிலும் உரூசு இராணுவமானது ஆற்றின் மறு பகுதியை அடைந்தபோது அவர்களது எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. மங்கோலியர்கள் எஞ்சிய கடைசி வீரன் வரை கொல்லப்பட்டனர்.[30]

உரூசின் தாக்குதல்

[தொகு]
தினேப்பர் ஆறு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் ஒரு படம்

தோற்று ஓடுவது போல் நடித்து 9 நாட்களுக்கு உரூசின் இராணுவங்களை அவர்களது நிலப்பகுதிகளில் இருந்து வெளியில் கொண்டு வந்ததற்குப் பிறகு கல்கா ஆற்றின் பக்கவாட்டில் தங்களைத் துரத்தி வந்தவர்களை மங்கோலிய இராணுவமானது திரும்பி எதிர்த்து நின்றது. இந்த ஆற்றின் அமைவிடமானது தற்போது தெரியவில்லை. ஆனால் இது அசோவ் கடலில் சென்று கலக்கும் கல்சிக் ஆறு என்று கருதப்படுகிறது.[31]

உருசிய முதன்மை நூல்கள் இந்த யுத்தத்தைப் பற்றி ஒரு மிகப் பொதுவான மேலோட்டத்தை மட்டுமே கொடுக்கின்றன. புல்வெளியின் வழியாக இளவரசர்கள் எவ்வாறு துரத்தினர் என்பதைப் பற்றி மட்டுமே கூறுகின்றன. இந்நூல்கள் எந்த இளவரசர்கள் பங்கேற்றனர், யார் யார் இருந்தனர் என்பதைப் பற்றிப் பேசுகின்றன. ஆனால் இராணுவங்களின் அளவு அல்லது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பற்றிப் பெரிதாக மற்ற தகவல்களைக் குறிப்பிடவில்லை. இந்த யுத்தத்தைப் பற்றி உண்மையிலேயே அந்த நூல்கள் போலோவிதிசி (குமன்கள்) இராணுவத்திலிருந்து சண்டையிடாமல் ஓடினர் என்றும், உரூசு படையினரின் வழியாக அவர்கள் தப்பித்து ஓடியது ஒட்டுமொத்த இராணுவத்தின் நடுவில் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியது என்றும் குறிப்பிடுகின்றன. இது மங்கோலியர்கள் அனைவரையும் படுகொலை செய்யும் நிலைக்கு இட்டுச் சென்றது.[32]

உரூசின் தோல்வி

[தொகு]

கல்கா ஆற்றைப் பெரும்பாலான கூட்டணி இராணுவத்தினர் கடந்து வந்தபோது, மங்கோலியர்கள் அவர்களைத் தாக்கினர். கூட்டணிப் படையினரை குதிரை வில்லாளர்களின் அம்புத் தாக்குதலிலிருந்து, மொத்தமான குதிரைப் படைத் தாக்குதல்களுக்கு இலக்காக வேகமாக  மாற்றியதன் மூலம் கூட்டணிப் படையினருக்கு மங்கோலியர்கள் அதிர்ச்சி கொடுத்ததாகத் தெரிகிறது. ஏனெனில், கூட்டணிப் படையினர் தோற்றோடச் செய்யப்பட்ட நிகழ்வானது மின்னல் வேகத்தில் ஆரம்பித்தது. உரூசு படையினரின் பின்வரிசைப் படையினர் யுத்தம் ஆரம்பித்த நேரத்தில் யுத்தகளத்தை அடையாமல் இருந்தன. கலீசியா மற்றும் குருசுகின் இராணுவங்கள் தங்களது அணி வகுப்புகளுக்கு இடையே தப்பித்து ஓடும் குமன்கள் பின் வாங்குவதற்காக ஓர் இடைவெளியை விட்டன. எனினும், மங்கோலியக் கனரகக் குதிரைப் படையினர் புதிதாக விடப்பட்ட இடைவெளிக்குள் புகுந்தனர். அவர்களைச் சுற்றி வளைத்தனர். இந்த யுத்தம் ஆரம்பித்தது என்பதே செர்னிகோவின் இராணுவத்திற்குத் தெரியாமல் இருந்தது. அவர்கள் படையினருடன் முன்னேறி வந்தபோது பின் வாங்கி ஓடிய குமன்களுடன் மோதினர். புகைக் குண்டுகளைப் பயன்படுத்திக் கூட்டணிப் படையினர் மீண்டும் ஒன்றிணைவதை மங்கோலியர்கள் தடுத்தனர். செர்னிகோவின் வரிசையில் ஏற்பட்ட குழப்பத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மங்கோலியக் குதிரைப்படையானது தாக்குதலை ஆரம்பித்தது. இதனால் செர்னிகோவின் வரிசையானது சிதைந்தது. இதன் விளைவாகச் செர்னிகோவின் இளவரசன் மிசுதிலாவ் இறந்தார்.[33][34]

அதே நேரத்தில் மங்கோலிய இராணுவத்தின் மற்ற பிரிவுகள் சிதறிய உரூசின் இராணுவத்தைச் சுற்றி வளைத்தன. அவர்கள் தப்பித்து ஓட இருந்த வழிகளை அடைத்தனர். சுற்றி வைக்கப்பட்ட உரூசு இராணுவமானது மாறி, மாறி அம்பு மழைக்கு உள்ளாக்கப்பட்டது. உரூசு இராணுவத்தின் அமைப்பில் பலவீனமாக இருந்த எந்த ஒரு இடத்திலும் குதிரைப் படையினர் சென்று தாக்கினர். இந்தக் கொன்றழிப்பை மங்கோலியர்கள் நடத்திக்கொண்டிருந்த பொழுது துணிவான மிசுதிலாவ் தலைமையிலான சில இராணுவத்தினர் மங்கோலிய வளையத்தை உடைத்து வெளியேறினர். தப்பித்து ஓடினர்.[35] யுத்தகளத்திற்குக் கடைசியாக வந்த கீவின் மிசுதிலாவால் உரூசின் எஞ்சிய இராணுவமானது தப்பித்து ஓடுவதை மட்டுமே காண முடிந்தது. 10,000 வீரர்களை கொண்ட தன்னுடைய பிரிவுடன் தினேப்பர் ஆற்றுக்கு அருகில் இருந்த ஒரு குன்றின்மீது கழியரண்களைக் கொண்டிருந்த தனது முகாமுக்கு அவர் பின்வாங்கினர். துரத்தி வந்த மங்கோலிய இராணுவமானது கீவின் மிசுதிலாவின் படைகளை நெருங்கியது. முகாமை முற்றுகையிட ஆரம்பித்தது.[27]

புரோதினிசியின் தலையீடு

[தொகு]

கீவின் மிசுதிலாவ் மற்றும் கீவின் இராணுவமானது 3 நாட்களுக்குத் தாக்குப் பிடித்தது. ஆனால் இறுதியாகப் புலோசுகனீயாவிடம் சரணடையும் நிலைக்குத் தள்ளப்பட்டது.[36] ஆனால் புலோசுகனீயா இசுலாவியர்களை ஏமாற்றினர். அவர்களைத் தாதர்களிடம் கொடுத்தார். புலோசுகனீயா என்பவர் தற்போதைய மால்தோவா மற்றும் உருமேனியாவின் நிலப்பகுதியைச் சேர்ந்த புரோதினிசி என்ற மக்களின் தலைவராவார். அவர் முதலில் இசுலாவியர்கள் மற்றும் குமன்களுடன் கூட்டணியில் இருந்தார். ஒருமுறை முகாமானது தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு மங்கோலியர்கள் கீவின் மிசுதிலாவ் மற்றும் பல பிற உயர்குடிக் கைதிகள் உள்ளிட்ட கீவின் இராணுவத்தைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர்.[37]

பிறகு

[தொகு]
இந்த திடீர்த் தாக்குதலின் வழிகளானவை இந்த வரைபடத்தின் இடது மேல் மூலையில் குறிக்கப்பட்டுள்ளன

உரூசின் இளவரசவர்களுக்கு இந்த யுத்தமானது மிகக் கடுமையான தோல்வியாக அமைந்தது. ரிச்சர்ட் கேப்ரியல் அவர்கள் 50,000 வீரர்களை இழந்ததாகவும், மங்கோலிய இழப்பானது குறைவாக இருந்ததாகவும் கூறுகிறார். யுத்தத்தில் ஈடுபட்ட அனைத்துக் கூட்டணிப் படையினரும் தங்களது பின்புறம் ஆறு இருந்தவாறு பிடிக்கப்பட்டனர். இவ்வாறாக அவர்கள் தப்பித்து ஓடுவதற்கு வழியில்லாமல் போனது. துணிவான மிசுதிலாவால் மட்டுமே தன்னுடைய இராணுவத்தில் சிலரைக் காப்பாற்ற முடிந்தது. உரூசின் முதன்மை ஆதாரங்களில் முதன்மை நூலானது 10,000 பேர் கொல்லப்பட்டனர் என்று குறிப்பிடுகிறது. அதே நேரத்தில் யுத்தத்திற்கு நீண்ட காலத்திற்குப் பிறகு எழுதப்பட்ட மற்றும் அதிக நம்பகத்தன்மையற்ற நிக்கோனிய நூலானது 60,000 பேர் கொல்லப்பட்டனர் என்று குறிப்பிடுகிறது. மிகுந்த நம்பகத்தன்மையுடைய நோவ்கோரோடின் முதல் நூலானது இந்த யுத்தம் நடந்த காலத்தில் எழுதப்பட்டதாகும். அது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடவில்லை. ஆனால் 10இல் 1 வீரன் மட்டுமே வீட்டிற்குத் திரும்பி வந்தான் என்று கூறுகிறது. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கிட்டத்தட்ட முழு இராணுவமும் என இதிலிருந்து இவ்வாறாக நாம் அறியலாம்.[3] அனைத்து உரூசு இளவரசர்களில் காயமடைந்த வோலினியாவின் டேனியல் மற்றும் துணிவான மிசுதிலாவ் ஆகியோர் மட்டுமே யுத்த களத்திலிருந்து தப்பித்தனர்.[38] இந்த யுத்தமானது உரூசுக்கு ஒரு முக்கியமான தோல்வியாக அமைந்தது. ஏனெனில், உரூசு வேள் பகுதிகளில் பெரும்பாலானவை தங்களது இராணுவங்களில் பெரும்பாலானவற்றை இழந்தன. இதில் எஞ்சியது விளாதிமிர் சுசுதாலின் இராணுவம் மட்டுமே.[39] வரலாற்றாளர் இராபர்ட் மார்சல் இந்தத் திடீர்த் தாக்குதலைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "சுபுதையின் போர்ப் பயணத்தில் எஞ்சியவை இராணுவ வரலாற்றுப் பதிவேடுகளில் குதிரைப்படைப் போர்முறையின் மகா சாகசங்களில் ஒன்றாகப் பதிந்து போயின."[40]

அரச குடும்பத்தினர் மற்றும் உயர்குடியினருக்கு என்று மங்கோலியர்கள் தனியாகக் கடைபிடிக்கும் பாரம்பரிய மங்கோலிய எச்சரிக்கை முறையை, கீவின் மிசுதிலாவ் மற்றும் கீவின் உயர்குடியினரை மரண தண்டனைக்கு உட்படுத்த மங்கோலியர்கள் கடைபிடித்தனர். அது இரத்தம் சிந்தாமல் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படுவது என்பதாகும். மங்கோலியத் தளபதிகள் இந்த வெற்றியைக் கொண்டாட ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். அதற்காக ஒரு வட்டமான மர மேசை தயாரிக்கப்பட்டது. மிசுதிலாவ் மற்றும் அவரது உயர்குடியினர் தரையில் போடப்பட்டு அவர்களுக்கு மேல் மேசை வைக்கப்பட்டு விருந்து கொண்டாடப்பட்டது. அதில் அவர்கள் நசுங்கி இறந்தனர்.[41] அதே நேரத்தில் துணிவான மிசுதிலாவ் தினேப்பர் ஆற்றின் மேற்குப் பகுதியை தன்னுடைய இராணுவத்தில் எஞ்சியவர்களுடன் அடைந்தார். மங்கோலியர்கள் தினேப்பர் ஆற்றைக் கடந்து மேற்குப் பகுதிக்கு வருவதைத் தடுக்கத் தன் கண்ணில் பட்ட அனைத்து படகுகளையும் மிசுதிலாவ் அழித்தார்.[42] இந்த யுத்தத்திற்குப் பிறகு, யாரென்று தெரியாத, தங்களுக்குப் பெருமளவு துன்பம் விளைவித்த இந்த வீரர்களை எண்ணி உரூசின் மக்கள் பயத்தில் நடுங்கினர். இந்த வீரர்கள் எல்லைப் பகுதியிலிருந்து தோன்றிய உரூசின் இராணுவத்தின் பெரும்பாலானவற்றை அழித்திருந்தனர். ஆனால், இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான தகவல் யாதெனில், மங்கோலியர்கள் இந்த முறை வெல்வதற்காக வரவில்லை. மாறாக, சூறையாடிய பிறகு கிழக்கு நோக்கி அணிவகுத்து அவர்கள் பயணிக்க ஆரம்பித்தனர்.

ஆனால் என்ன நடக்குமென்று உரூசு பயந்தார்களோ அது நடக்கவில்லை. மங்கோலியர்கள் கலீசியாவின் இளவரசனைத் துரத்தினர். தெற்கிலிருந்த ஒரு சில பட்டணங்களைச் சூறையாடிய பிறகு திரும்பினர். மங்கோலிய இராணுவமானது தற்போதைய வோல்கோகிராடுக்கு அருகில் வோல்கா ஆற்றைக் கடந்தது. வோல்கா பல்கேரியா வழியாகப் பயணித்தது. மங்கோலிய இராணுவமானது பல்கர்களைத் தோற்றோடச் செய்தது. கிழக்கு நோக்கித் தங்கள் அணிவகுப்பைத் தொடர்ந்தது. தாங்கள் அடைய வேண்டிய இடத்தை அடைந்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு மங்கோலியர்கள் கங்கிலி குமன்களைத் தாக்கினர். ஒரு ஆண்டுக்கு முன் காக்கேசியப் பகுதியில் தங்களது இனம் சார்ந்த குமன்களுக்குக் கங்கிலி குமன்கள் ஆதரவு அளித்திருந்தனர். உரால் மலைகளுக்கு அருகில் குமன் இராணுவத்திற்கு எதிராக மங்கோலியர்கள் சண்டையிட்டனர். அவர்களைத் தோற்கடித்து அவர்களது கானைக் கொன்றனர். பிறகு அவர்களைக் காணிக்கை செலுத்த வைத்தனர்.[43]

இந்த யுத்தத்திற்குப் பிறகு மங்கோலியர்கள் கிழக்கு நோக்கித் திரும்பி சிர் தாரியா ஆற்றின் கிழக்குப் பகுதியில் இருந்த புல்வெளிகளில் செங்கிஸ் கான் மற்றும் எஞ்சிய மங்கோலிய இராணுவத்தைச் சந்தித்தனர். தன்னுடைய தளபதிகளின் சாதனைகளைச் செங்கிஸ் கான் மிகவும் பாராட்டினர். செபே மற்றும் சுபுதையைப் புகழ்ந்தார். எனினும் இந்தப் போர்ப் பயணத்தில் செபே நீண்ட நாட்களுக்குப் பயணிக்கவில்லை. இதற்குப் பிறகு தனது பயணத்தின்போது சீக்கிரமே அவர் இறந்தார்.[44] இந்தப் போர்ப் பயணத்தின் முக்கியத்துவமானது மிகப் பிரம்மாண்டமானதாகும். வரலாற்றின் மிக நீண்ட குதிரைப் படைத் தாக்குதல் இந்தப் பயணம் தான். மங்கோலியர்கள் 3 ஆண்டுகளில் சுமார் 9,000 கிலோமீட்டர் தூரத்தை இந்தப் பயணத்தின்போது கடந்திருந்தனர். உரூசின் நிலங்களில் ஏராளமான ஒற்றர்களையும் சுபுதை நிறுத்தினார். ஐரோப்பா மற்றும் உரூசில் என்ன நடக்கின்றது என்பதைப் பற்றிய தகவல்களை அவர்கள் அடிக்கடித் தெரிவித்து வந்தனர்.[45]

1237ஆம் ஆண்டு சுபுதை படுவுடன் இணைந்து மற்றொரு தாக்குதலுக்குத் தலைமை தாங்கினர், சுமார் 1,20,000 வீரர்களுடன் அவர்கள் கீவ உரூசைக் கைப்பற்றினர்.[46]

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 118.
  2. 2.0 2.1 2.2 Gabriel, Subotai The Valiant: Genghis Khan's Greatest General, p. 100.
    * de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 118.
  3. 3.0 3.1 3.2 3.3 John Fennell, The Crisis of Medieval Russia 1200–1304, pp. 66–68.
  4. 4.0 4.1 D.G. Khrustalev. Rus and the Mongol invasion (20 - 50's of XIII century). - SPb: Eurasia, 2013. - pp. 85–86
  5. 5.0 5.1 Khrustalev, p. 416
  6. 6.0 6.1 Sverdrup, p. 206
  7. 7.0 7.1 Gabriel, Subotai The Valiant: Genghis Khan's Greatest General, p. 98.
    * Munro, The Rise of the Russian Empire, p. 81.
  8. Spencer C. Tucker. A Global Chronology of Conflict: From the Ancient World to the Modern Middle East. - 23.12.2009. - pp. 426
  9. The Novgorod First Chronicle, translated by R. Michell, and N. Forbes, London 1914.
  10. de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 87.
  11. de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 98.
  12. de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 106.
  13. 13.0 13.1 13.2 de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 107.
  14. de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 116.
  15. Gabriel, Subotai The Valiant: Genghis Khan's Greatest General, p. 89.
    * de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 116
  16. Gabriel, Subotai The Valiant: Genghis Khan's Greatest General, p. 92.
    * de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 117
  17. "Genghis Khan: the man who conquered the world, chapter 12 the great raid"by Frank Lynn
  18. Prawdin, Michael; Chaliand, Gerard (November 1, 2005). The Mongol Empire: Its Rise and Legacy. Routledge. p. 211.
  19. Gabriel, Subotai The Valiant: Genghis Khan's Greatest General, pp. 93–94.
    * de Hartog, Genghis Khan: Conqueror of the World, pp. 117–18
  20. Gabriel, Subotai The Valiant: Genghis Khan's Greatest General, p. 95.
    * de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 118
  21. Gabriel, Subotai The Valiant: Genghis Khan's Greatest General, p. 95.
  22. Gabriel, Subotai The Valiant: Genghis Khan's Greatest General, p. 96.
    * de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 119
    * Jackson, The Mongols and the West, 1221–1410, p. 48
  23. 23.0 23.1 Wallace, Rise of Russia, p. 38.
    * de Hartog, Genghis Khan: Conqueror of the World, 119–20
    * Gabriel, Subotai The Valiant: Genghis Khan's Greatest General, p. 97
  24. 24.0 24.1 de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 120.
  25. Gabriel, Subotai The Valiant: Genghis Khan's Greatest General, p. 97.
  26. Wallace, Rise of Russia, p. 38.
  27. 27.0 27.1 27.2 27.3 Gabriel, Subotai The Valiant: Genghis Khan's Greatest General, p. 98.
  28. de Hartog, Genghis Khan: Conqueror of the World, 120
  29. Chris Peers, the Mongol War Machine (2015), 158-9.
  30. 30.0 30.1 Gabriel, Subotai The Valiant: Genghis Khan's Greatest General, p. 99.
    * de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 120
    * Munro, The Rise of the Russian Empire, p. 81.
  31. de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 121.
    * Gabriel, Subotai The Valiant: Genghis Khan's Greatest General p. 99.
  32. Chronicle of Novgorod, 65–66.
  33. "Battle of the Kalka River" (in ரஷியன்). Britannica. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  34. Martin, Medieval Russia: 980–1584, p. 132.
    * Gabriel, Subotai The Valiant: Genghis Khan's Greatest General, p. 100
    * de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 122.
  35. de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 122.
    * Gabriel, Subotai The Valiant: Genghis Khan's Greatest General p. 100.
  36. A. Boldur, Istoria Basarabiei,Editura V. Frunza, Bucuresti, 1992, pp. 100–05.
  37. de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 122.
  38. Munro, The Rise of the Russian Empire, p. 84.
  39. Gabriel, Subotai The Valiant: Genghis Khan's Greatest General, pp. 100–01.
  40. Marshall, Storm from the East: from Genghis Khan to Khubilai Khan, p.57.
  41. May, Timothy (2007). The Mongol Art of War. Casemate Publishers. p. 164. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781781597217. பார்க்கப்பட்ட நாள் 15 June 2021.
  42. Gabriel, Subotai The Valiant: Genghis Khan's Greatest General, p. 101.
    * de Hartog, Genghis Khan: Conqueror of the World, 122
    * Hector Hugh Munro, The Rise of the Russian Empire, p. 84.
  43. Gabriel, Subotai The Valiant: Genghis Khan's Greatest General, pp. 101–02.
    * de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 122
  44. Gabriel, Subotai The Valiant: Genghis Khan's Greatest General, p. 102.
    * de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 123
  45. Gabriel, Subotai The Valiant: Genghis Khan's Greatest General, p. 102.
  46. de Hartog, Genghis Khan: Conqueror of the World, pp. 165–66.

நூல்கள்

[தொகு]

பதிப்பிக்கப்பட்ட நூல்கள்

[தொகு]

இணைய நூல்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்கா_ஆற்று_யுத்தம்&oldid=3590392" இலிருந்து மீள்விக்கப்பட்டது