கருப்புசாமிக் காசித்தும்பை
கருப்புசாமிக் காசித்தும்பை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | I. karuppusamyi
|
இருசொற் பெயரீடு | |
Impatiens karuppusamyi P.S.S.Rich. & V.Ravich |
கருப்புசாமிக் காசித்தும்பை (Impatiens karuppusamyi) என்பது 2023-ஆம் ஆண்டு களக்காடு பகுதியில் கண்டறியப்பட்ட காசித்தும்பைச் செடியினம்.[1] இது களக்காடு பகுதியில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதால் இதைக் களக்காட்டுக் காசித்தும்பை எனலாம்.
வகைப்பாடும் பரம்பலும்
[தொகு]காசித்தும்பைப் பேரினத்தைச் சேர்ந்த செடிகள் ஆப்பிரிக்கா, மடகாசுக்கர், தென்னிந்தியா, இலங்கை ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. அவற்றுள் இந்தியாவில் 280 இனங்கள் கீழை இமயமலையிலும், மேற்குத் தொடர்ச்சி மலையிலும் உள்ளன. அவற்றுள் 106 இனங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணும் அகணிய இனங்கள்.[2][3] அவற்றுள் 80 விழுக்காட்டுக்கும் மேல் அச்சுறுத்தலுக்குள்ளான இனங்களாவன.
அவற்றுள் இலையறு தண்டுள்ளி (scapigerous) இனங்களான 36 இனங்கள் மிகமிக அரிதானவை. இவை தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே வளர்கின்றன. அவற்றுள் அகத்தியமலைப் பகுதியில் திருநெல்வேலிக் காசித்தும்பை (I. tirunelvelliensis), கொம்புக் காசித்தும்பை (I. bicornis), குறுந்தண்டுக் காசித்தும்பை (I. acaulis) ஆகியன ஏற்கனவே அறியப்பட்டிருந்தன. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த பால்ராசு செல்வா, வெள்ளிங்கிரி இரவிச்சந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் பாறையொன்றில் வளர்ந்திருந்த காட்டுத்தும்பைச் செடியை ஆய்வு செய்தபோது அது அப்பகுதியில் எதிர்பார்க்கக்கூடிய கொம்புக் காசித்தும்பையை ஒத்து இருந்தாலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.[1] அதுவரை பதிவாகாத புது இனம் என நிறுவி, தாவரவியலாளர் கருப்புசாமியின் பெயரால் அறிவியற் பெயரில் சிற்றினத்திற்கு கருப்புசாமியி எனப் பெயரிட்டனர்.[4] Impatiens எனும் பேரினம் காசித்தும்பைகளுக்கானது.
தோற்றம்
[தொகு]கொம்புக் காசித்தும்பை போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும் கருப்புசாமிக் காசித்தும்பையின் இலைகள் சற்றே சிறிய அளவின. ஆறு முதல் 8 மலர்கள், சிறு தரைப்பூக்காம்பில் (scape) காணப்படும். மலர்கள் 1 செ.மீ. விட்டம் கொண்டவை. பூந்துகள் அடர்செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். வல்லாரை போன்ற இலைவடிவம் இருக்கும். 0.4 மி.மீ. பருமனுள்ள கிழங்குபோல் உருண்ட, சதைப்பற்றுள்ள வேர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கின்றன.
சூழியல்
[தொகு]பாறைவாழிகளான கருப்புசாமிக் காசித்தும்பைகள் மலைப்பாசிகளினூடே வளர்பவை. பிற குறுந்தண்டுக் காசித்தும்பைகளைப் போலவே குறுகிய மழைக்காலத்தில் மட்டும் தளைத்து மடிந்துவிடுபவை.[5] இதனாலேயே இவ்வினங்கள் மிகவும் அச்சுறுதலுக்குள்ளானவை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Singh Richard, Paulraj Selva; Ravichandran, Vellingiri (2023-06-20). "Impatiens karuppusamyi (Balsaminaceae), a New Species from the Southern Western Ghats, India". Annales Botanici Fennici 60 (1). doi:10.5735/085.060.0121. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-3847.
- ↑ Vivekananthan, K (1997). "Balsaminaceae". Flora of India (Maphighiaceae-Dichaptalaceae) (Botanical Survey of India).
- ↑ Nair, N.C. (1991). "Endemism on the Western Ghats with special reference to Impatiens L.". Proceedings of the Symposium on Rare, Endangered and Endemic Plants of Western Ghats (Kerala Forest Department (Wildlife Wing), Thiruvananthapuram, India): 92–102.
- ↑ A Ragu Raman (2023-11-27). "Researchers Discover New Plant Species in KMTR, Chennai". The Times of India. http://timesofindia.indiatimes.com/articleshow/105522702.cms.
- ↑ Narayanan, M. K. Ratheesh; Joseph, Jayesh P.; Kumar, N. Anil; Sivadasan, M.; Alfarhan, Ahmed H. (2013-03-01). "Impatiens theuerkaufiana (Balsaminaceae), a new scapigerous species from the Western Ghats, India". Phytotaxa 83 (1). doi:10.11646/phytotaxa.83.1.3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1179-3163.