உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்வேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கரந்தைத் தமிழ்க்கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்வேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக் கல்லூரி (Tamilavel Umamaheswaranar Karanthai Arts College) என்பது, தமிழ்நாட்டிலுள்ள தமிழ்க் கல்லூரிகளில் ஒன்று. இது தஞ்சை நகருக்கு வடக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ள கரந்தட்டாங்குடியில் (முன்பு கருந்திட்டைக்குடி), கரந்தைத் தமிழ்ச்சங்கத்தால், 1911ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.[1] இதனை ஐந்தாம் தமிழ்ச்சங்கம் என்பர். இதன் வளர்ச்சியாக, 1916-ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச்சங்கச் செந்தமிழ்க் கைத்தொழில் கல்லூரியானது தொடங்கப் பெற்றது.[2] தமிழ் மொழி, தமிழர், தமிழ் இலக்கியம், தமிழ் இசை போன்றவற்றை மேம்படுத்த இச்சங்கம் பலவகையில் பணியாற்றியுள்ளது. கரந்தைத் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரித்துவாரமங்கலம், பெருநிலக் கிழார் பெருவள்ளல் வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார், ஆண்டிப்பட்டி பெருநிலக் கிழார் பெருவள்ளல் சா.ராம.ழ.சித. பெத்தாச்சி செட்டியார் ஆகியோர் தங்கள் பேராதரவு நல்கியுள்ளனர். இதன் வளர்ச்சிக்கு பெரிதும் காரணமாக இருந்தவர் வழக்கறிஞர் தமிழவேள் உமாமகேசுவரனார் ஆவார். நீண்ட காலமாகவே 'தமிழ்ப் பொழில்' என்ற செந்தமிழ் மாத இதழை இச்சங்கம் நடத்தி வருகிறது. புலவர்களுக்கான தகுதித்தேர்வு நடத்தி, பல புலவர்களை இச்சங்கம் உருவாக்கியுள்ளது. இங்கு பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், கரந்தை கவியரசு வேங்கடாசலனார், ந.மு. வேங்கடசாமி நாட்டார், நீ. கந்தாமி பிள்ளை, பேரா. பாலசுந்தரம், வரலாற்றறிஞர் சீ. கோவிந்த ராசனார் முதலியோர் ஆவர். கரந்தை செப்பேட்டை கண்டுபிடித்து சங்கம் பாதுகாத்து வருகிறது. 'யாழ்நூல்' கண்ட விபுலானந்தரின் நூலை வெளியிட்டு உதவியுள்ளது. இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்ட போராட்ட வீரர்களுக்கு இச்சங்கம் உறுதுணையாக இருந்தது. தமிழர் வரலாற்றில் மறக்க முடியாது இடத்தைக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் பிடித்திருக்கிறது.[3]

உமாமகேசுவரனார் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் விளைவாக, 1938ஆம் ஆண்டு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா நிகழ்வின்போது, தனித் தமிழ்க் கல்லூரி ஒன்றினை, கரந்தைப் புலவர் கல்லூரி என்னும் பெயரில் தொடங்குவது என்று தீர்மானிக்கப் பட்டது. க.வெள்ளைவாரணன் என்பார் இப்புலவர் கல்லூரியின் முதல் ஆசிரியராக நியமனம் செய்யப் பெற்றார்.[4] திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் முதலானோர் இதன் வளர்ச்சிக்கு உதவியுள்ளனர்.

மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய தமிழ்த் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 'பண்டிதர்' என்னும் பட்டம் வழங்கப்பட்டது போல, கரந்தைத் தமிழ்ச்சங்கம் நடத்திய தமிழ்த் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் 'புலவர்' என்னும் பட்டம் வழங்கப்பட்டுவந்தது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தக் கல்லூரி சென்னைப் பல்கலைக்கழக வரம்புக்குள் இணைந்தது. தற்பொழுது அரசு நிதியுதவி பெற்றுத் தமிழுடன் பிற பாடங்களையும் வழங்கிவரும் இக்கல்லூரி திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. கதிர்நிலவன். "தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார்". www.keetru.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-25.
  2. https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2010/jan/24/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-134327.html
  3. தமிழ்க்களஞ்சியம்.காம்
  4. பின்னாளில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவராய் அமர்ந்து, அரும் பணிகள் பல ஆற்றிய பேராசிரியர் வெள்ளைவாரணனார் இவர்தான்.