கனடாவில் பிரெஞ்சு மொழி
கடாவில் பிரெஞ்சு மொழி இரண்டு ஆட்சி மொழிகளில் ஒன்று. ஏறத்தாழ ஏழு மில்லியன் அல்லது நான்கில் ஒரு கனடியர்கள் பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் கனடாவின் கியூபெக் மாநிலத்தில் வாழ்கிறார்கள். கியூபெக் வாழ் மக்களில் 80 விழுக்காட்டினர் பிரெஞ்சைத் தாய்மொழியாகவும், மீதி பேர் இரண்டாம் மொழியாகவோ, மூன்றாம் மொழியாகவோ பேசுகிறார்கள். கியூபெக்கில் பிரெஞ்சு மட்டுமே ஆட்சி மொழி ஆகும். இங்கு பேசப்படும் பிரெஞ்சு வட்டார வழக்கு கியூபெக் பிரெஞ்சு எனப்படும். மேலும், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய இருமொழிகளையும் ஆட்சி மொழிகளாகக் கொண்ட நியூ புருன்சுவிக் மாநிலத்தில் மூன்றில் ஒருவர் பிரெஞ்சு பேசுபவர்கள். மனிடோபா, ஒன்றாரியோ மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவினர் பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகப் பேசுகின்றனர்.
1969 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஆட்சி மொழிகள் சட்டத்தின்படி, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இருமொழிகளும் ஆட்சிமொழிகளாகப் பயன்படுத்தப்படும் என்றும் இருமொழிகளுக்கும் சம அளவில் உரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா அரசு, அரசாணைகள், சேவைகள் என அனைத்தையும் இருமொழிகளிலும் வழங்குகிறது. இருப்பினும், மாநில அளவில் அந்தந்த மாநிலங்களின் ஆட்சி மொழிகளில் சேவைகள் வழங்கப்படுகின்றன என்றாலும், கனேடிய மக்கள் உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையினர் ஆட்சிமொழியிலும் கல்வி கற்றுத் தரப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, பிரெஞ்சை ஆட்சிமொழியாகக் கொண்ட கியூபெக் மாநிலத்தில் ஆங்கிலம் பேசும் சிறுபான்மையினருக்கு அவர் மொழியிலும், ஆங்கிலத்தை ஆட்சிமொழியாகக் கொண்ட ஒன்றாரியோவில் பிரெஞ்சு பேசும் சிறுபான்மையினருக்கு பிரெஞ்சு மொழியிலும் கல்வி கற்றுத் தரப்பட வேண்டும். கியூபெக் பிரெஞ்சு மொழிக்கான வாரியம் (Office Québécois de la Langue Française) என்ற அமைப்பு பிரெஞ்சு மொழியை முன்னிறுத்தும் அமைப்பாகவுள்ளது.
மாகாணங்கள் வாரியாக பிரெஞ்சு மொழி
[தொகு]கியூபெக்
[தொகு]கியூபெக் மாநிலத்தில் பிரெஞ்சு மொழி ஆட்சி மொழியாகவும், பெரும்பானமையினர் மொழியாகவும் விளங்குகிறது. இருப்பினும், அரசு சேவைகள் அனைத்தும் சிறுபான்மையினருக்காக ஆங்கிலத்திலும் வழங்கப்படுகின்றன.
கியூபெக்கில் பிரெஞ்சு மொழிக்கு சிறப்பு அங்கீகாரம் உண்டு. பிரான்சிலேயே பொதுவழக்கில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தினாலும், கியூபெக்கில் பிரெஞ்சு சொற்களே பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல், பிற மொழிப் பெயர்களை பிரான்சு நாட்டு பிரெஞ்சில் அப்படியே குறிப்பிடப்பட்டாலும், கியூபெக்கில் மொழிபெயர்த்து எழுதும் வழக்கம் உள்ளது.
கெபெக் பிரெஞ்சிற்கும் பொது பிரெஞ்சிற்கும் சில வேறுபாடுகள்:
தமிழ்ச் சொல் | கெபெக் பிரெஞ்சில் | பொது பிரெஞ்சு |
---|---|---|
வார இறுதி | fin de semaine | week-end |
நிறுத்தம் | stationnement | parking |
மின்னஞ்சல் | courriel | e-mail/mél |
எரிதம் | pourriel | spam |
அரட்டையடித்தல் | clavarder | chater |
பானம் | breuvage | boisson |
மதிய உணவு | dîner | déjeuner |
இரவு உணவு | souper | dîner |
அட்லாண்டிக் மாகாணங்கள்
[தொகு]இங்கு பேசப்படும் பிரெஞ்சு அக்காடிய பிரெஞ்சு எனப்படுகிறது. நியூ புருன்சுவிக் மாநிலத்தில் ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இருமொழிகளும் ஆட்சி மொழிகளாக ஏற்கப்பட்டுள்ளன. கனடாவின் மாநிலங்களிலேயே கியூபெக்கிலும் நியூ பிரான்சிக்கில் மட்டுமே பிரெஞ்சு ஆட்சிமொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் மூன்றில் ஒருவர் பிரெஞ்சு பேசுபவராக உள்ளார். கியூபெக் பிரெஞ்சு வழக்கைப் போன்றே இவ்வழக்கிலும் ஆங்கிலத்தின் தாக்கம் காணப்படுகிறது. இங்கு வாழ்பவர்களில் பெரும்பான்மையினர் கியூபெக் மாநில எல்லைப்பகுதியில் வசிக்கிறார்கள்.
ஒன்றாரியோ
[தொகு]பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் அரை மில்லியன் பேர் இருந்தாலும், மொத்தத் தொகையில் 4.4 விழுக்காட்டினராக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் கெபெக் மாநிலத்தின் எல்லையில் வாழ்கிறார்கள். இவர்களில் பலருக்கு பிரெஞ்சு பேசத் தெரியாது.
இங்கு வாழும் பிரெஞ்சுக்காரர்கள் பிரான்சு, கெபெக், அயித்தி, ஆப்பிரிக்கா, வியட்னாம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள். இம்மாநிலத்திற்கு எந்த ஆட்சி மொழியும் இல்லையென்றாலும், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரு மொழிகளிலும் சட்டங்கள், அரசாணைகள் வெளியிடப்படுகின்றன. சட்டமன்றங்களில் பேசுபவர்கள் தாங்கள் விரும்பும் மொழியில் பேசலாம். பிரெஞ்சு மொழி பேசுவோர் பிரெஞ்சிலேயே அரசு சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். ஒன்றாரியோ அரசு இணையதளமும் இருமொழிகளிலும் கிடைக்கின்றது. ஆங்கில மொழியின் ஆதிக்கத்தால் பிரெஞ்சு மொழி வீழ்ச்சியடைந்துள்ளது.
நியூஃபவுண்ட்லாந்து
[தொகு]பிரிடன், அக்காடியன் ஆகிய இரு குழுக்கள் பிரெஞ்சு பேசுகின்றனர். இருமொழித் திட்டத்தின்கீழ் பிரெஞ்சு மொழியும் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது.
மேற்கு மாகாணங்கள்
[தொகு]மனிடோபா மாநிலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் பிரான்சு மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள். மனிடோபா மாநில அரசு இருமொழிகளிலும் இணையதளங்களை வழங்குகிறது. கனேடிய அரசு, மனிடோபாவிலும் பிரெஞ்சை ஆட்சி மொழியாக்கியுள்ளது. சசுகட்சிவன், ஆல்பர்ட்டா , பிரித்தானிய கொலம்பியா ஆகிய பகுதிகளிலும் குழுக்களாக வாழ்கின்றனர்.இப்பகுதியில் கிரீ, பிரெஞ்சு ஆகிய இருமொழிகளும் கலந்த வழக்கை பேசுகின்றனர்.
இவற்றையும் பார்க்க
[தொகு]- கெபெக் பிரெஞ்சு
- பிரெஞ்சு இலக்கணம்
- ஐக்கிய அமெரிக்காவில் எசுப்பானிய மொழி
- ஐக்கிய அமெரிக்காவில் பிரெஞ்சு மொழி
- உக்ரைனில் உருசிய மொழி
வெளி இணைப்புகள்
[தொகு]- கனேடிய பிரெஞ்சு பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலத்தில்)
- 2001 மக்கட்தொகை - கனடா பரணிடப்பட்டது 2007-08-09 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலத்தில்)
- கெபெக் பிரெஞ்சு மொழி அமைப்பு நிறுவனம் (பிரெஞ்சில்)