கந்தன் குடைவரை
கந்தன் குடைவரை என்பது, மதுரையின் புறப்பகுதியாக உள்ள நரசிங்கத்தில் நரசிங்கப் பெருமாள் குடைவரையை அடுத்துள்ள ஒரு குடைவரைக் கோயில் ஆகும். இது, சுப்பிரமணியர் குடைவரை, முருகன் குடைவரை போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இதன் பெயர் காட்டுவது போல் இது முருகனுக்காக அமைக்கப்பட்ட கோயில் ஆகும்.
அமைப்பு
[தொகு]இது ஒற்றை மண்டபத்தோடு கூடியது. உயரமான இதன் தளத்தை அடைவதற்கு இரண்டு பக்கங்களிலும் இருந்து படிகள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் முகப்பை அண்டி அமைந்துள்ள தூண்வரிசையில் இரண்டு முழுத்தூண்கள் உள்ளன. இவற்றுக்கு நேராகப் பக்கச் சுவர்களில் ஒட்டியபடி அரைத் தூண்கள் காணப்படுகின்றன. தூண்கள் மேலும் கீழும் சதுரத்தையும் நடுவில் எண்பட்டை அமைப்பையும் கொண்டுள்ளன. சதுரங்களில் தாமரைப் பதக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அரைத்தூண்களின் பக்கங்களிலும் அரைத் தாமரைப் பதக்கங்கள் காணப்படுகின்றன. தூண்களின் மேல் தரங்க அமைப்புக்கொண்ட போதிகைகள் உத்தரத்தைத் தாங்குவதுபோல் அமைக்கப்பட்டு உள்ளன.[1]
மண்டபத்தின் பின் சுவரில் கருவறை குடையப்பட்டுள்ளது. கருவறையின் முகப்புச் சுவர் சற்று முன்தள்ளி அமைக்கப்பட்டுள்ளது. கருவறை வாயிலுக்கு முன் உள்ளே செல்வதற்குப் படிகள் உள்ளன. கருவறை முகப்பின் கீழ்ப்பகுதியில் தாங்குதள அமைப்பு உள்ளது. வாயிலின் இரு பக்கங்களிலும் வாயிற்காவலர் சிற்பங்கள் உள்ளன.[2] முருகனின் அடையாளங்களான சேவல், மயில் ஆகியனவும் காணப்படுகின்றன. கருவறையினுள் அதன் பின் சுவரில் தேவயானையுடன் கூடிய முருகனின் சிற்பம் உள்ளது.
காலம்
[தொகு]குடைவரையின் அமைப்பையும், அங்குள்ள சிற்பங்களின் அமைதியையும் கருத்தில் கொண்டு இது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இக்குடைவரையில் திருப்பணி செய்ததைக் குறிக்கும் கல்வெட்டு 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[3]