உள்ளடக்கத்துக்குச் செல்

கடிய நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருத்துவத்தில் கடிய நோய் அல்லது குறுங்கால நோய் (acute) எனும் சொல் பின்வரும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் நோய்களைக் குறிக்கப் பயன்படுகின்றது:

  1. உடனடியாக, விரைவாகத் தோன்றும் நோய்,
  2. குறுகிய காலத்தில் மட்டும் தங்கியிருக்கக்கூடிய நோய்,
  3. தீவிரமான நோய்[1][2]

இச்சொல்லானது மேற்குறிப்பிட்ட வகை நோய்களைக் குறிக்க அந்நோயின் முன்னே உரிச்சொல்லாகப் பயன்படுத்தப்படுகின்றது.[2] உதாரணமாக, கடிய மூச்சுக்குழல் அழற்சி என்பது திடீரென்று தோன்றி நோய்க்குரிய அறிகுறிகளைக் கொண்டுற்று, குறுகிய காலப் பகுதியிலேயே நீடிக்கும் மூச்சுக்குழல் அழற்சியாகும்.

பயன்பாடு

[தொகு]

ஆங்கிலத்தில் உள்ள “அக்யூட்” (acute) எனப்படும் சொல்லானது “தீவிரமானது” என்கின்ற பொதுவான கருத்தைத் தருவதனால் பெரும்பாலான மக்களினால் தீவிரமான, கடுமையான நோய் எனும் கருத்தை மட்டுமே வைத்து நோக்கப்படுகின்றது, ஆனால் இது தவறானதாகும்.[2][3][4] ஒரு நோயானது சடுதியாகத் தோன்றி சில நாட்களுக்கோ அல்லது வாரங்களுக்கோ நீடித்தல் கடிய நோயென்று அழைக்கப்படுகின்றது, எனினும் இவ்வாறு தோன்றும் நோய்கள் பொதுவாகத் தீவிரமாக இருப்பதனால் தீவிரம் எனும் சொல்லும் இந்நோயை விபரிக்க சேர்க்கப்படலாம், ஆனால் கடிய நோய்களில் தீவிரம் இல்லாத நோய்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.[3][5]

கடிய என்பதற்கு எதிர்மாறாக, நெடுங்கால அல்லது நீண்டகால (chronic) என்னும் சொல் பயன்படுத்தப்படுகின்றது. ஆங்கிலத்தில் உள்ள “க்ரோனிக்” (chronic) எனப்படும் சொல்லும் “தீவிரமான” என்கின்ற பொருள் கொண்டு பெரும்பாலான மக்களினால் தவறாகக் கருதப்பட்டு வருகின்றது. மருத்துவத்தில் இவற்றின் பயன்பாடு தீவிரத்தை மட்டும் குறிக்கப் பயன்படுத்தப்படுவதில்லை.[2][4]

குறுங்கால நோய்க்கும் நெடுங்கால நோய்க்கும் இடைப்பட்ட நோயை தாழ்கடிய அல்லது இடைக்கால (Subacute) நோய் என அழைக்கலாம், தாழ்கடிய அகவிதயவழற்சி (subacute endocarditis) இதற்கு ஒரு உதாரணமாகும்.

கடிய மருத்துவமனை

[தொகு]

குறுகியகாலத்துக்குச் சிகிச்சை வழங்கும், பராமரிக்கும் மருத்துவ அமைவிடங்கள் கடிய மருத்துவமனைகள் (Acute hospitals) என்றழைக்கப்படுகின்றது, இதனுடன் தொடர்புடைய மருத்துவத்துறை கடிய மருத்துவம் எனப்படுகின்றது.

சொற்பிறப்பு

[தொகு]

தமிழில் கடி எனும் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு; கூர்மை, விரைவு, உடனடி ஆகிய உரிச்சொற்கள், கடித்தல் எனும் வினைச்சொல்.[6] கடிய என்பது விரைவான, உடனடியான எனும் கருத்தைத் தருமாறு கையாளப்பட்டுள்ளது.

உசாத்துணைகள்

[தொகு]
  1. "Thefreedictionary". Retrieved 2011-02-14.
  2. 2.0 2.1 2.2 2.3 "ஆங்கில விக்கிபீடியா". Retrieved 2011-02-14..
  3. 3.0 3.1 "What is the Difference Between an Acute Disease and a Chronic Disease?". WiseGeek. Retrieved 2011-02-14..
  4. 4.0 4.1 "etymonline". Retrieved 2011-02-14..
  5. Stedman, Thomas Lathrop; Dirckx, John (2001). Concise Medical Dictionary for the health professionals (4 ed.). Lippincott Williams & Wilkins. ISBN 0781730120.
  6. "தமிழ் இணையப் பல்கலைக்கழகம்". Retrieved 2011-02-14..
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடிய_நோய்&oldid=3582014" இலிருந்து மீள்விக்கப்பட்டது