உள்ளடக்கத்துக்குச் செல்

கடமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கடம்பை மான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கடமான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Artiodactyla
துணைவரிசை:
Ruminantia
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Cervinae
பேரினம்:
இனம்:
C. unicolor
இருசொற் பெயரீடு
Cervus unicolor
(Kerr, 1792)
வேறு பெயர்கள்
Rusa unicolor

கடமான் (ஒலிப்பு) (Sambar – Rusa unicolor) (நாஞ்சில்நாட்டு வழக்கு - மிளா; இலங்கை வழக்கு - மரை) தெற்காசியாவில் காணப்படும் மான் இனங்களிலேயே மிகப் பெரியதாகும். எல்லாத் திராவிட மொழிகளிலும் கடமான் என்ற சொல் இம்மானுக்குப் பரவலாக எல்லா மக்களிடையேயும் வழங்கி வருகிறது. சங்க இலக்கியம் தொடங்கி இம்மான்கள் கடமான், கடமா, கடமை, கடம்பை என்று குறிக்கப்படுகின்றன. மான் இனத்திலேயே புவிப்பரவல் அதிகமுடையது கடமான் ஆகும். ஆங்கிலத்தில் கடமான் வகைகளை ‘எல்க்’ (Elk) என அழைப்பர். கடமான்கள் இந்தியா, இலங்கை, மியான்மரிலும், மலேய தீவுக்கூட்டங்கள் தொடங்கி பிலிப்பைன்ஸ் தீவுகளைத் தாண்டியும் வாழ்கின்றன. இம்மான்கள் பல்வேறு வகையான சூழியல் கூறுகளிலும் வாழும் தன்மையைக் கொண்டவை. இந்தியாவில் குஜராத், ராஜஸ்தானின் முட்காடுகளிலும், இமயமலையின் கருவாலிக் காடுகளிலும், மூவலந்தீவின் (தீபகற்பத்தின்) ஈரமான இலையுதிர், பசுமைமாறா காடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில் தோன்றிய இம்மானினம் ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியா, டெக்சாஸ்[2], புளோரிடா மாநிலங்களிலும்[3], ஆஸ்திரேலியா[4], நியுசிலாந்து[5], தென் ஆப்பிரிக்காவிலும்[6] காணப்படுகின்றது. இம்மான்களுக்கு "கடம்பை மான்[7]" என்ற பெயரும் உண்டு. ஆங்கிலத்தில் இதன் இந்திப் பெயரான "சாம்பர்" என்பதையே பின்பற்றி அழைக்கிறார்கள். இம்மான் ஒடிசாவின் மாநில விலங்காகும்.

உடல் அமைப்பு

[தொகு]
கொம்பு உதிர்ந்த பின் புதிய கொம்புடம் ஆண் கடமான்

பருவமடைந்த கடமானின் எடை 225 முதல் 320 கிலோ வரையும், உயரம் 100 முதல் 160 செ. மீ வரையிலும் இருக்கும்[8]. வயது வந்த ஆண் (கிடா, ஏறு, விடை) கடமாவுக்கு 30-40 அங்குல நீளமுள்ள பெருங்கொம்புகள் உண்டு. பெண் கடமானிற்குக் கொம்புகள் கிடையா. ஆணின் கொம்புகள் ஆண்டுதோறும் விழுந்து மீண்டும் முளைக்கும். இக்கொம்புகள் மிகவும் கூர்முனையுடன் மிகக்கடினமாக இருக்கும். உதிர்ந்த பின் முளைக்கும் கொம்புகளின் மேலே மிக மெதுமெதுப்பான ஒரு தடினமான தோலை போன்ற அமைப்பைப் பெற்று இருக்கும். இத்தோலில் குருதியோட்டம் இருப்பதால் சிறு காயம் பட்டாலும் இரத்தம் வந்துவிடும். ஆகையால் கொம்புகள் நன்கு வளரும் வரை கடமான் மிகவும் கவனமாகவே இருக்கும். கொம்புகள் முழு வளர்ச்சி அடைந்ததும் மேல் தோல் உலர்ந்து உதிர்ந்துவிடும். கடமான் மிக அழுத்தமான கரும்பழுப்பு நிறமாக (கபிலநிறம்) இருக்கும், அதற்கு மேலே தடித்த மயிர் போர்த்தியிருக்கும். பிடரியிலும் கீழ்க்கழுத்திலும் இம்மயிர் நீண்டிருக்கும். கடமான்கள் மிகுந்த செவிக்கூர்மையும், நுகர் திறனும் கொண்டவை[9].

சூழியல்

[தொகு]
கடமானும் அதன் வாழிடமும்

கடமான்கள் குழுவாக வாழும் தன்மை கொண்டவை அல்ல. பெரும்பாலும் தனியாகவோ சிறுகுழுவில் ஆறுக்கும் குறைவாகவோ காணப்படுகின்றது. சிறிய குழுக்கள் முதிர்ந்த பெண் கடமானின் தலைமையில் இயங்கும்[10]. இந்தியாவில் கடமான், 139 வகையான வெவ்வேறு தாவரங்களை உண்டு வாழ்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன[11][12]. கடமான் மிகவும் குறிப்பிட்ட உணவு வகைகள் என்று இல்லாமல் கிடைக்கும் பெரும்பாலான தாவரங்களை உண்கிறது[13][14]. இந்தியாவில் இவை காட்டு மரங்களின் இலைகள், பட்டை, புல் பூண்டு மற்றும் சில காய்களையும் உண்கிறது.[9] கடமான்கள் பெரும்பாலும் மரங்கள் நெருங்கி வளர்ந்திருக்கும் பகுதிகளையே வாழிடமாக கொண்டவை. திறந்த புல்வெளிகளுக்கு மாலை, இரவு, விடியற்காலை பொழுதுகளில் மட்டும் மேய்ச்சலுகாக செல்லும். காடுகளில் இவற்றின் வாழிடம் நீர்நிலையின் அடிப்படையைக் கொண்டே முடிவாகிறது.[11] ஆண்டுக்கு ஒரு முதிர்ந்த ஆண் கடமான் சுமார் 46 சதுர கி.மீ பரப்பளவுக்கும், பெண் கடமான் 20 சதுர கி.மீ பரப்பளவுக்கும் உணவு மற்றும் இனப்பெருக்கத்துக்காகவும் சுற்றித்திரியும்.[15]

இனப்பெருக்கம்

[தொகு]
பெண் கடமான்

கடமானின் இனப்பெருக்கம், காலம் அதன் கொம்புகள் விழுந்து முளைப்பதைப் பொருத்தே அமையும். இக்காலம் இந்தியாவின் பல்வேறு காட்டுவிலங்கு காப்பகங்களில் பல்வேறு சமயங்களில் நடக்கின்றது. ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலகட்டத்தில் இனப்பெருக்கம் நடக்கின்றது. இனப்பெருக்கக் காலங்களில் ஆண் கடமான் சராசரியாக 4 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இடத்தைத் தன் எல்லையாக பாதுகாக்கும். இப்பகுதிக்குள் கூடுதல் எண்ணிக்கையிலான பெண் கடமான்களை வைத்திருக்க முயலும். இக்காலகட்டதில் ஆண் கடமான் தனித்துத் திரியும்; வேறொரு ஆணைக் கண்டால் அதனுடன் சண்டையிட முயலும். தனியாகத் திரியும் (Solitaire) கடமான் ஏறு தமிழ் இலக்கியங்களில் ஒருத்தல் எனப்படுகிறது. இனப்பெருக்கக் காலங்களில் ஓங்கி நிற்கும் கடமான் ஏறு, பிணைக் கடமானை (பெண் கடமான்) புணர்வதற்கான வாய்ப்புக்காக காத்திருக்கும். பருவமடைந்த ஆண் கடமான்கள் தன் இணையை ஒருவித சத்தத்தை எழுப்பியோ நுகர்வின் மூலமோ கவரும். இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் (சினைகாலம்) 9 மாதங்கள் ஆகும். தாய் பேறுகாலத்துக்குப் பிறகு ஒரு குட்டியை ஈனும். குட்டிகள் தம் தாயுடன் இரண்டு ஆண்டுகள் வரை வாழ்ந்த பின்னர் தனித்துச் சென்றுவிடும்.

காப்பு நிலை

[தொகு]

இந்தியாவில் மொத்தம் 208 பாதுகாக்கப்பட்ட இடங்களில் காணப்படுகிறது[16]. இந்தியாவில் கடமானின் சூழியல் குறித்து பல்வேறு இடங்களில் (கானா,[11] பந்திபூர்[17], நாகரகொளை[18][19], சரிஸ்கா[20], கீர்[21], பென்ச்[22], ரந்தம்போர்[23] ) பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. நேபாளத்திலும் கடமானைப் பற்றி ஆய்கிறார்கள்[24]. கடமான் புலி, சிறுத்தை, செந்நாய் போன்ற கொன்றுண்ணிகளின் மிகவும் பிடித்த இரையாகும்[11][25]. காடுகளின் வளத்தைத் தீர்மானிக்கிறது. கடமான் போன்ற விலங்குகளின் உயிர்தொகையே புலி போன்ற அரிய விலங்குகளின் இருப்பை உறுதி செய்கின்றது. காடுகளில் கால்நடை மேய்த்தல், வேட்டையாடுதல் போன்ற மாந்தரின் பல்வேறு செயல்கள் கடமான்களின் வாழ்க்கையைப் பெரிதும் அச்சுறுத்துகின்றன. மேலும் கடமான்களின் வாழ்விடம் சீர் கெட்டமையால் அவை தங்கள் அருகில் இருக்கும் விளை நிலங்களுக்கு உணவுக்காக வருவதால் உழவர்களும் கடமான்களைக் கொல்கின்றனர்..

காணப்படும் நாடுகள்[26]

[தொகு]

இயற்கை உயிர்தொகை

அறிமுகப்படுத்தப்பட்ட உயிர்தொகை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rusa unicolor". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
  2. Ables, E.D., and Ramsey, C.W. 1974. Indian mammals on Texas rangelands. J. Bombay Nat. His. Soc. 71: 18-25.
  3. Lewis, J.C., Flynn, L.B., Marchinton, R.L., Shea, S.M. and Marchinton, E.M. 1990. Part I : Introduction, study area description and Literature review. Pp 1-12. In: Ecology of sambar deer on St. Vincent National Wildlife Refuge, Florida. Bull. No. 25. Tall Timbers Research Station, Tallahassee, Florida.
  4. Slee, K.J. 1984. The sambar deer in Victoria. Pp 559-72. In: “Deer”. Post-Grad.Comm.Vet.Sci., Proc. 72. Univ. of Sydney. Sydney.
  5. Kelton, S.D. and Skipworth, J.P. 1987. Food of sambar deer (Cervus unicolor) in a Manawatu (New Zealand) flax swamp. New Zealand Journal of Ecology. 10:149-152
  6. Lever, C. 1985. Naturalized mammals of the world. Longman, London. 467 pp.
  7. கே. உல்லாஸ் கரந்த் (தமிழில் தியோடர் பாஸ்கரன்), 2006. கானுறை வேங்கை இயற்கை வரலாறும் பராமரிப்பும், காலச்சுவடு பதிப்பகம், நாகர் கோவில்
  8. Lydekker, R. 1916. Wildlife of the world. Vol.II. Rowland Ward Ltd., London, U.K.
  9. 9.0 9.1 மா. கிருஷ்ணன் (தொகுப்பாசிரியர்: தியோடர் பாஸ்கரன்), 2004. மழைக்காலமும் குயிலோசையும். காலச்சுவடு பதிப்பகம். நாகர் கோவில்
  10. Downes, M. 1983. The forest deer project 1982. Australian Deer Research Foundation Ltd., Melbourne, Australia.Eisenberg, J. F., and Lockhart, M. 1972. An ecological reconnaisance of Wilpattu National Park, Ceylon. Smithsonian Contributions to Zoology. 101:1-118.
  11. 11.0 11.1 11.2 11.3 Schaller, G.B. 1967. The Deer and the Tiger. A study of Wildlife in India. The University of Chicago Press, Chicago. 370 Pp.
  12. Johnsingh, A. J. T., and Sankar, K. 1991. Food plants of chital, sambar and cattle on Mundanthurai plateau, Tamil Nadu, South India. Mammalia 55:57-66.
  13. Bentley, A. 1978. An introduction to the deer of Australia. Koetong ed. Koetong Trust Service, Victoria, Australia.
  14. Kelton, S.D. 1981. Biology of sambar deer (Cervus unicolor Kerr, 1972) in New Zealand with particular reference to diet in a Manuwata flax swamp. Master’s Thesis, Massey University, Palmerston North, New Zealand.
  15. Richardson, W. A. 1972. A natural history survey of sambar deer (Cervus unicolor) on the powerhorn ranch calhoun country, Texas. M.Sc., Thesis. Texas A & M University, Texas. 76 Pp.
  16. National Wildlife Database, Wildlife Institute of India, Dehradun)
  17. Johnsingh, A.J.T. 1983. Large mammalian prey- predators in Bandipur. J. Bombay Nat.Hist.Soc. 80(1):1-57
  18. Karanth, K. U., and Sunquist, M.E. 1992. Population structure, density and biomass of large herbivores in the tropical forests of Nagarahole, India. Journal of Tropical Ecology 8:21-35.
  19. Karanth, K. U., and Sunquist, M.E. 1995. Prey selection by tiger, leopard and dhole in tropical forests. Journal of Animal Ecology 64:439-450.
  20. Sankar, K. 1994. The ecology of three large sympatric herbivores (chital, sambar and nilgai) with special reference for reserve management in Sariska Tiger Reserve, Rajasthan. Ph.D. Thesis. University of Rajasthan, Jaipur.
  21. Khan, J. A., Chellam, R. and Johnsingh, A. J. T. 1995. Group size and age-sex composition of three major ungulate species in Gir Lion Sanctuary, Gujarat, India. J. Bombay Nat. Hist. Soc., 92:295-302.Lever, C. 1985. Naturalized mammals of the world. Longman, London. 467 pp
  22. Biswas, S., and Sankar, K. 2002. Prey abundance and food habit of tigers (Panthera tigris tigris) in Pench National Park, Madhya Pradesh, India. Journal of Zoology 256:411-420. Crandall, L. 1964. The management of wild animals in captivity. University of Chicago Press, Chicago.
  23. Bagchi, S., Goyal, S.P., and Sankar, K. 2003. Prey abundance and prey selection by tigers (Panthera tigris) in a semi-arid, dry deciduous forest in western India. Journal of Zoology 260:285-290.
  24. Dinerstein, E. 1979. An ecological survey of the Royal Karnali-Bardia Wildlife Reserve, Nepal. Part II:Habitat/animal interactions. Biolo. Conserv. 16:265-300.
  25. Johnsingh, A.J.T., Goyal, S.P., Rawat, G.S. and Mukherjee, S. 1993. Food habits of tiger and leopard in Rajaji, north west India. Abstracts. International symposium on the tiger, Delhi. 22nd to 24th February. Ministry of Environment & Forests, Government of India.
  26. http://www.iucnredlist.org/search/details.php/41790/all

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடமான்&oldid=3630468" இலிருந்து மீள்விக்கப்பட்டது