உள்ளடக்கத்துக்குச் செல்

கசல் (இசை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கசல் (gazal, அரபி உருது: غزل) என்பது உருதுமொழியில் யாக்கப்படும் ஈரடி சந்தங்கள் கொண்ட, மீளவரும் பல்லவியுடன் அமைந்த கவிதை வடிவாகும். இவ்வடிவில் பிரிவின் துயரத்தையும் வேதனையையும் வெளிக்கொணரவும் வலியை மீறிய காதல் உணர்வினை காட்டுவதாகவும் கவிதைகள் யாக்கப்பட்டன. ஆறாம் நூற்றாண்டு முதலே கசல் வடிவமைப்பு அரபி மொழியில் இருந்துள்ளது. இது இந்தோ-பெர்சிய-அராபிக் பண்பாடு கிழக்கு இசுலாமிய நாடுகளுக்கு வழங்கியுள்ள இலக்கிய வகை ஆகும். இதன் பாணியும் நடையும் பிரிவையும் காதலையும் மையமாகக் கொண்ட பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டுள்ளது.[1][2][3]

சுஃபிக்கள் மற்றும் புதிய இசுலாமிய சுல்தான்களின் தாக்கத்தால் 12ஆம் நூற்றாண்டில் தெற்கு ஆசியாவில் கசல் பரவத்தொடங்கியது. பெரும்பாலும் இது உருது மொழியில் எழுதப்பட்டாலும் நடப்புக் காலங்களில் கசல் வடிவத்தில் பிற மொழிகளிலும் கவிதைகள் வடிக்கப்படுகின்றன.

பெர்சிய சமயவியலாளர்களும் கவிஞர்களுமான ஜலால் அல்-தின் முகமது ரூமி (13வது நூற்றாண்டு) மற்றும் ஹஃபேசு (14வது நூற்றாண்டு),அசேரி மொழி கவிஞர் ஃபூசுலி (16வது நூற்றாண்டு), ஆகியோரும் பெர்சிய மற்றும் உருது மொழியில் எழுதிய மிர்சா கலீப் (1797–1869) மற்றும் முகமது இக்பால் (1877–1938) ஆகியோரும் புகழ்பெற்ற கசல் கவிஞர்கள் சிலராவர். யோகன் வுல்ஃப்கேங் வொன் கோதெ (1749–1832) பத்தொன்பதாம் நூற்றாண்டில் செருமனியில் கசல் வடிவை பரப்பினார். இந்த வடிவை பிரெடெரிக் ருக்கெர்ட் (1788–1866) மற்றும் அகஸ்ட் வொன் பிளேட்டன் (1796–1835) மிகுதியாகப் பயன்படுத்தினார்கள். காசுமீரிய அமெரிக்கர் ஆகா சகித் அலி கசல் வடிவில் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளில் கவிதைகளை வடித்துள்ளார்.

கசல் கவிதைகள் சிலவற்றில் கடைசி வரியில் கவிஞரின் பெயர் இடம் பெருவது வழமையாக உள்ளது.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "A new Hindustani-English dictionary". dsalsrv02.uchicago.edu. 1879. பார்க்கப்பட்ட நாள் 9 September 2018.
  2. "Meaning of ghazal in English". Rekhta Dictionary (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
  3. "Ghazal". Poetry Foundation. 9 September 2018. பார்க்கப்பட்ட நாள் 9 September 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசல்_(இசை)&oldid=3939794" இலிருந்து மீள்விக்கப்பட்டது