ஒத்தசொல்

ஒத்தசொல், இணைச்சொல் அல்லது ஒருபொருள் பன்மொழி என்பது ஒரு சொல் அல்லது சொற்றொடருக்கு இணையான பொருளுடைய மற்றொரு சொல் அல்லது சொற்றொடரைக் குறிக்கும். இது ஒருபொருட்கிளவி, பரியாயம், பிரதிபதம் என பலவாறு குறிப்பிடப்படுகிறது. [1] எடுத்துக்காட்டாக, தொடக்கம், ஆரம்பம் மற்றும் துவக்கம் என்ற சொற்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று ஒத்த சொற்கள்.
ஒத்தசொல்லுக்கான இலக்கண அடையாளம் மாற்றீடு ஆகும்.
எடுத்துக்காட்டு:
குருதி வடிந்தது. இரத்தம் வடிந்தது.
இவ்விரண்டு வாக்கியங்களில் உள்ள குருதி, இரத்தம் என்ற சொற்களை மாற்றீடு செய்யும் போது பொருள் மாறாததால் இவ்விரண்டு சொற்களும் ஒன்றுக்கொன்று ஒத்த சொற்கள் ஆகும்.
சொற்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட பொருளில் மட்டும் ஒத்ததாக இருக்கலாம்.
எடுத்துக்காட்டு:
நீண்ட மற்றும் அதிக என்னும் இரண்டு சொற்களை கால சூழல் என்னும் பொருட்பின்னணியில் கையாளும் போது கிடைக்கும் நீண்ட நேரம் மற்றும் அதிக நேரம் என்னும் சொற்றொடர்கள் ஒத்த பொருளை தருகின்றன ஆனால் பற்கள் என்னும் பொருட்பின்னணியில் அதே சொற்களைப் பயன்படுத்தினால் கிடைக்கும் நீண்ட பற்கள் மற்றும் அதிக பற்கள் என்பவை ஒத்த பொருளை தரவில்லை எனவே இச் சொற்களை மாற்றீடாக இந்த சொற்றொடரில் பயன்படுத்த முடியாது ஆகவே பற்கள் என்ற பொருட்பின்னணியில் அமைந்த இந்த சொற்றொடரில் நீண்ட மற்றும் அதிக என்னும் சொற்கள் ஒத்த சொற்கள் அல்ல.