ஐந்நூற்றுவர்
ஐந்நூற்றுவர் எனப்படுவோர் முற்காலத்தில் சாளுக்கியத் தலைநகராகிய வாதாபியில் உள்ள ஐகோலே என்னுமிடத்தில் அமையப் பெற்றிருந்த ஒரு வணிகக் கழகத்தினர் ஆவர். இன்றைய இந்தியாவின் தமிழகம், கருநாடகம், ஆந்திரப் பிரதேசம், ஆகிய பகுதிகளுக்கிடையில் இவர்களின் வணிகம் சிறந்து விளங்கியது. இவர்களைப் பற்றிப் பொ.கா. 9 ஆம் நூற்றாண்டிலிருந்துள்ள கல்வெட்டுக்கள் சில குறிப்பிடுகின்றன.[1] சாளுக்கியத் தலைநகரில் இருந்த ஏராளமான கோயில்களிற் பணியாற்றிய பிராமணர்களிற் சிலர் ஐந்நூற்றுவருடனான வர்த்தகத்திலீடுபட்டதாகத் தெரிய வருகிறது.[2] எனினும் ஐந்நூற்றுவரிற் பெரும்பாலானோர் தொலை தூர வணிகத்திலீடுபட்ட வணிகர்களாவர். பொ.கா. 9 ஆம் நூற்றாண்டுக்கும் 14 ஆம் நூற்றாண்டுக்குமிடைப்பட்ட காலப் பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் இவர்களால் கோயில்களுக்கு வழங்கப்பட்ட கொடைகளைப் பற்றியும் இவர்களின் வணிக நடவடிக்கைகளையும் வணிகப் பொருட்களையும் பற்றியும் தெளிவுறுத்துகின்றன.[3]
தென்னிந்தியாவிலும் தென்கிழக்காசியாவிலும் செயற்பட்ட இவ்வணிகக் கழகம் கன்னடத்தில் ஐயவோலே என்றும் தெலுங்கில் ஐயவோலு என்றும் வடமொழியில் ஆரியரூபா என்றும் தமிழில் ஐம்பொழில் ஐந்நூற்றுவர் என்றும் அறியப்படுகிறது. சோழர்களின் கடுமையான கட்டுப்பாடு காரணமாக இவர்களின் சொந்தப் பண்பாட்டு நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டாலும் சோழர்களின் கீழ் இவர்கள் மிக்க வலிமை பெற்றனர்.[4] இவர்கள் வீர வளஞ்சிய தர்மம் எனப்பட்ட வீர தீர அல்லது உயர் மரபு வணிகச் சட்டத்தின் காவலர்களாயிருந்தனர். இவர்களின் கொடியிற் காணப்பட்ட காளை மாட்டைச் சின்னமாகக் கொண்டிருந்த இவர்கள் தீரமிக்க வணிகர்களாகப் புகழ் பெற்றிருந்தனர்.[5]
விபரம்
[தொகு]பொ.கா. 1055 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்றிலிருந்து பெறப்பட்ட பின்வரும் பந்தி ஐந்நூற்றுவரின் நடவடிக்கைகளையும் வணிகப் பொருட்களையும் பற்றிக் குறிப்பிடுகிறது:[6]
உண்மை, தூய்மை, நன்னடத்தை, கொள்கை, அடக்கம், ஆழ்ந்த அறிவு போன்ற பல்வேறு நற்றன்மைகளுக்காக உலகெங்கும் புகழ் பெற்றோரும் வீர வளஞ்சியர் தருமத்தின் (வீரதீர வணிகர் சட்டம்) காவலரும் 32 வெலோமாக்களையும் 18 நகரங்களையும் 64 யோக பித்தாக்களையும் திசை காட்டியின் நாற்றிசையும் ஆசிரமங்களையும் உடையோரும் உலகமே தமது சாக்குப் பை போலும், ... பாம்புகள் ஓடித் திரிவது போன்றும் வெற்றிலைப் பையைத் தம் அந்தரங்கப் பையாகவும் கொண்டு பல்வேறு நாடுகளிலும் சுற்றித் திரிவதற்கென்றே பிறந்தோருமாகிய இவர்கள்,...
தரை வழியாகவும் கடல் வழியாகவும் ஆறு கண்டங்களின் பகுதிகளில் உயர் வகை யானைகள், நன்கு வளர்ந்த குதிரைகள், பெரும் நீல மணிகள், நிலாமணிக் கற்கள், முத்துக்கள், மாணிக்கங்கள், வைரங்கள், ... ஏலம், கிராம்பு, சந்தனம், கற்பூரம், கத்தூரி, குங்குமம், ஏனைய வாசனைப் பொருட்கள், மருந்துகள் என்பவற்றைப் பேரளவில் விற்பதன் மூலம் அல்லது தமது தோள்களில் சுமந்து விற்பதன் மூலம் சுங்கத் தீர்வைகளின் இழப்புக்களிலிருந்து பாதுகாப்புப் பெற்று பேரரசின் கருவூலங்களில் பொன்னையும் மணியையும் படைக் கலங்களையும் நிரப்புகின்றனர்; ஏனையவற்றிலிருந்து அவர்கள் அறிஞர்களுக்கும் முனிவர்களுக்கும் ஒவ்வொரு நாளும் கொடையளிக்கின்றனர்; வெண்குடைகளைத் தம் கவிகைகளாகவும் வலிய கடலைத் தம் அகழிகளாகவும் இந்திரனை தம் வாட்களைக் காப்போனாகவும் வருணனை வளங் கொடுப்பவனாகவும் குபேரனை பொருள் வழங்குபவனாகவும்,...
தோற்றமும் நடவடிக்கைகளும்
[தொகு]இடத்துக்கிடம் மாறி மாறி இடம் பெயர்ந்து வணிகம் செய்த இவர்களின் நடவடிக்கைகளே இவர்கள் ஒரு வணிகக் கழகத்தினராக ஆகக் காரணமாகின.[7] ஏனைய வணிகக் கழகங்களுடன் ஒப்பிடும்போது, இவர்களே ஆகவும் கவர்ச்சியுடையோராகத் திகழ்ந்தனர். மணிக்கிராமம் எனப்பட்ட மற்றுமொரு வணிகக் கழகத்தைச் சேர்ந்தோரும் இவர்களும் பல்வேறு துறைமுகங்களிலும் வணிக மையங்களிலும் காணப்பட்டனர். இவர்கள் கோயில்களுக்குக் கொடையளித்தல், பிராமணர்களுக்கு உணவளித்தல், நீர்ப்பாசன வசதிகளைப் பராமரித்தலில் பங்கு பெறல் முதலிய செயற்பாடுகளில் ஈடுபட்டனர். தென்னிந்தியாவில் காணப்பட்ட இவர்களின் கல்வெட்டுக்கள் இவர்களின் உண்ணாட்டு, வெளி நாட்டு வணிக நடவடிக்கைகளுக்குச் சான்றுகளாக அமைகின்றன. இவ்வணிகர்களில் சிலர் "நானாதேசி" (அல்லது "வெவ்வேறு நாட்டினர்) என்றும், வேறு சிலர் "சுவதேசி" (அல்லது "சொந்த நாட்டினர்") என்றும் அறியப்பட்டனர். இவர்கள் தென்கிழக்காசியாவில் இந்தியப் பண்பாட்டைப் பரப்பும் செயலிலும் ஈடுபட்டனர்.[8]
கோயில்களையும் சிலைகளையும் எழுப்புவது மன்னர்களினதும் கோயிற்கட்டுமானங்களுக்குத் துணை புரிந்த ஐந்நூற்றுவர், நகரத்தார், கோமதியர் போன்ற வணிகக் கழகங்களினதும் கொடைகளின் மூலமே நிகழ்ந்ததென்பதை கிடைக்கப் பெறும் சான்றுகள் காட்டுகின்றன. அவ்வாறே, புவியியல் அடிப்படையில் தங்களுக்குள் கழகம் அமைத்துக் கொண்டிருந்த விசுவகர்ம குலம் (சாதி) போன்ற ஆச்சாரிகளின், அஃதாவது கட்டிடக் கலைஞர்களின் பங்களிப்பும் கோயிற்கட்டுமானங்களுக்குக் கிடைத்தது.[9]
வீர வளஞ்சியர்
[தொகு]ஐந்நூற்றுவர் கழக வணிகர்களான வளஞ்சியர் கன்னடத்தில் வீர பளஞ்சியா என்றும் தமிழில் வீர வளஞ்சியர் என்றும் தெலுங்கில் வீர பலிஜா என்றும் "தீரமிக்க வணிகர்கள்" என்ற பொருளில் அழைக்கப்பட்டனர்.[10] வீர வளஞ்சிய தருமத்தின் காவலர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்ட இவ்வணிகர்களைப் பற்றி நடுக்கால கல்வெட்டுக்கள் பலவும் குறித்துரைக்கின்றன.[11] வீர வளஞ்சியர் பற்றிக் காணப்படும் கல்வெட்டுக்கள் நிறையவே உள்ளன. எடுத்துக் காட்டாக, அனிலமை எனும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பொ.கா. 1531 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று அக்கிராமத்திலிருந்த சங்கமேசுவரர் கோயிலுக்கு ஐந்நூற்றுவர் வணிகக் கழகத்தின் வீர வளஞ்சியர்களால் கொடையளிக்கப்பட்ட விளக்கின் காரணமாகப் பருத்தி, நூல், துணிமணிகள் போன்ற வணிகப் பொருட்களுக்கான தீர்வை நீக்கம் பற்றிக் குறிப்பிடுகிறது.[12]
ஐந்நூற்றுவர் அல்லது ஐயவோலா-எனும்பாரு-சுவாமிகளு எனப்பட்டோர் வீர வளஞ்சிய தருமத்தின் காவலர்களாகவும் வீர வளஞ்சிய சமயத்தைப் பின்பற்றுவோராகவும் இருந்தனரென்று நெல்லூர்ச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.[13] சிந்தப்பள்ளியில் காணப்பட்ட பொ.கா. 1240 ஐச் சேர்ந்த கல்வெட்டொன்று வீர வளஞ்சிய சமயத்தில் (வணிகக் கழகத்தில்) உபயநானாதேசிகளும் கண்டாலிகளும் மும்முறி தண்டர்களும் இருந்ததாகவும் ஐந்நூறு வீரர்களைத் தம்முடன் வைத்திருக்கும் உரித்துடையோராக இருந்ததாகவும் குறிப்பிடுகிறது.[14] இவர்களில் உபயநானாதேசிகள் எனப்படுவோர் பல்வேறு பகுதிகளையும் நாடுகளையும் சேர்ந்த தேசிகளும் பரதேசிகளும் நானாதேசிகளுமாக இருந்த அதே வேளை, கண்டாலிகள் எனப்படுவோர் கண்டலேசுவரர் எனப்பட்ட கடவுளை வழிபடும் வணிகர்களாக இருந்தனர்.
கவரேசுவரரை வழிபட்டவர்கள் கவரைகள் என்றும், நகரேசுவரரை வழிபட்ட வைசியர்களைக் கொண்ட நகரத்தார் சமூகத்தையும் (சிறீ கண்டரேசுவர திவ்ய தேவ சிறீபாத பதுமராதக் குழு) எனப்பட்ட கண்டலேசுவரரை வழிபட்ட வளஞ்சியர் சமூகத்தின் கண்டாலிகளையும் போலச் சில வணிகக் கழகங்கள் சமய அடையாளங்களின் அடிப்படையில் அமையப் பெற்றிருந்தன.[15] மும்முறி தண்டர்கள் எனப்படுவோர் முதலில் போர் வீரர்களாயிருந்து பின்னர் வணிகர்களாக மாறியோராவர். குருகோடு என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொ.கா. 1177 ஆம் ஆண்டின் கல்வெட்டொன்று மும்முறி தண்டர் எனப்படுவோர் ஆரியபுரம் அல்லது ஐகோலே என்ற நகரின் ஐந்நூற்றுவர் வணிகக் கழகத்தின் ஒரு பிரிவினரெனக் குறிப்பிடுகிறது.[16] போர்களும் படையெடுப்புக்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், வீர வளஞ்சிய போன்ற வணிகக் கழகங்கள் பல்வேறு பேரரசுகளின் கீழும் வள மிக்கனவாகவே திகழ்ந்தன.[17]
தொடர்புடைய தமிழ் ஆவணங்கள்
[தொகு]சேர நாட்டில் பொ.கா. 1000 ஆம் ஆண்டளவில் பாஸ்கர ரவி வர்மாவின் ஆட்சிக் காலத்திய கல்வெட்டொன்று மூன்று துண்டுகளாக உடைந்த நிலையில் கோழிக்கோட்டுக்கு அருகில் உள்ள பண்டலையினி கொல்லம் என்னுமிடத்தில் உள்ள பள்ளிவாசலொன்றில் கண்டெடுக்கப்பட்டது. அது ஐந்நூற்றுவர் வணிகக் கழகத்திலிருந்த வளஞ்சியர் பற்றியும், ஏனைய வணிகர் பற்றியும் குறிப்பிடுகிறது.[18] இவர்கள் தமிழில் வெறுமனே 'ஐந்நூற்றுவர்' என்றே அழைக்கப்பட்டனர்.
விசாகப்பட்டினத்திற் கண்டெடுக்கப்பட்ட மூன்று கல்வெட்டுக்களில் இரண்டு தெலுங்கிலும் ஒன்று தமிழிலும் காணப்பட்டன. தமிழ்க் கல்வெட்டு தெலுங்குக் கல்வெட்டொன்றின் தமிழ் வடிவமாகும். விசாகப்பட்டினத்தில் ஐந்நூற்றுவர் பெரும்பள்ளி என்ற இடத்தில் காணப்பட்ட அவை பொ.கா. 1090 இல், அஃதாவது கங்க மன்னன் அனந்தவர்மதேவனின் ஆட்சிக்காலத்தில் எழுப்பப்பட்டவையாகும்.[19] மற்றொரு தெலுங்குக் கல்வெட்டு தலைமை மகாமண்டலேசுவரர் குலோத்துங்க பிரிதிவீசுவரரினால் ஐந்நூற்றுவர் பெரும்பள்ளிக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அஞ்சுவண்ணத்தார் எனப்பட்டோர் ஐந்நூற்றுவரின் துணையைப் பெற்றமையையும் ஐந்நூற்றுவர் வணிகக் கழகத்தின் உறுப்பினர்களைப் போன்றே மதிக்கப்பட்டமையையும் அக்கல்வெட்டு கூறுகிறது.[20]
தென்னிந்தியாவில் ஐந்நூற்றுவர் வணிகக் கழகம் நன்கு விரிவடைந்த வேளையில் உள்ளூர் வணிகக் கழகங்கள் இவர்களுடன் சேர்ந்து கொண்டமை இதன் மூலம் தெரிய வருகிறது. மணிக்கிராமம் வணிகக் கழகம், நானாதேசி வணிகக் கழகம் என்பனவும் ஐந்நூற்றுவர் வணிகக் கழகத்துடன் சேர்ந்து கொண்டன. கடல் கடந்த வணிகத்தில் சிறப்புற்றுத் திகழ்ந்த ஐந்நூற்றுவர் வணிகக் கழகம் ஸ்ரீவிஜயத்தில் நன்கு புகழுடன் விளங்கியது. இந்தோனேசியாவின் மேற்குச் சுமாத்திரா மாகாணத்தின் பாருசு என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொ.கா. 1088 இன் கல்வெட்டொன்றில் இது சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்னிந்திய வணிகர்கள் இன்றைய பர்மா, தாய்லாந்து ஆகிய பகுதிகளிலும் தமது செயற்பாடுகளைக் கொண்டிருந்தனர்.[21]
உசாத்துணை
[தொகு]- ↑ A History of India, by Burton Stein and David Arnold, p.120
- ↑ A History of India, by Burton Stein and David Arnold, p.120
- ↑ A History of India, by Burton Stein and David Arnold, p.120
- ↑ Nagapattinam to Suvarnadwipa: reflections on Chola naval expeditions to Southeast Asia by Hermann Kulke, K. Kesavapany and Vijay Sakhuja, p.xviii and p.181
- ↑ Peranakan Indians of Singapore and Melaka: Indian Babas and Nonyas--Chitty Melaka, by Samuel Dhoraisingam, p.3
- ↑ A History of India, by Burton Stein and David Arnold, p.121
- ↑ A History of India, by Burton Stein, p. 126
- ↑ A History of India, by Burton Stein and David Arnold, p.121
- ↑ Art of South India, Andhra Pradesh, by B. Rajendra Prasad, p.85
- ↑ Encyclopaedia Indica: India, Pakistan, Bangladesh, Volume 100, by SS Shashi, p.86
- ↑ Studies in economic and social conditions of medieval Andhra, by K.Sundaram, p.69-76
- ↑ Hindu and Muslim religious institutions, Andhra Desa, 1300-1600, by Ravula Soma Reddy, p.110
- ↑ The quarterly journal of the Mythic society (Bangalore), Volume 82, p.88-91
- ↑ A study of the history and culture of the Andhras, Volume 2, by Kambhampati Satyanarayana, p.52
- ↑ Cultural heritage of the Kakatiyas: a medieval kingdom of south India, by S.Nagabhushan Rao, p.59
- ↑ Brahma sri: Researches in archaeology, history, and culture in the new millennium : Dr. P.V. Parabrahma Sastry felicitation volume, Volume 1, p.169
- ↑ A study of the history and culture of the Andhras, Volume 2, by Kambhampati Satyanarayana, p.125
- ↑ Nagapattinam to Suvarnadwipa: reflections on Chola naval expeditions to Southeast Asia by Hermann Kulke, K. Kesavapany and Vijay Sakhuja, p.163
- ↑ Nagapattinam to Suvarnadwipa: reflections on Chola naval expeditions to Southeast Asia by Hermann Kulke, K. Kesavapany and Vijay Sakhuja, p.164
- ↑ Nagapattinam to Suvarnadwipa: reflections on Chola naval expeditions to Southeast Asia by Hermann Kulke, K. Kesavapany and Vijay Sakhuja, p.165
- ↑ Nagapattinam to Suvarnadwipa: reflections on Chola naval expeditions to Southeast Asia by Hermann Kulke, K. Kesavapany and Vijay Sakhuja, p.10-12 [1]