உள்ளடக்கத்துக்குச் செல்

எந்திர யானை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எந்திர யானை [1] என்பது எந்திரத்தால் இயங்கும் யானை. பெருங்கதை என்னும் இலக்கியம் இதனைக் குறிப்பிடுகிறது. பிரச்சோதனன் என்னும் அரசன் உதயணனைக் கைது செய்ய இதனை உருவாக்கினான்.

சிறந்த சிற்பிகளைக் கொண்டு அரக்காலும் மரத்தாலும் இதனை உருவாக்கினான். தொண்ணூற்றாறு (96) போர்வீரர்கள் அதன் வயிற்றில் ஒளிந்திருக்குமாறு செய்தான். அதன் கால்களிலும், துதிக்கையிலும் போரிடுவதற்கு உரிய ஆயுதங்களை மறைத்து வைத்தான். சாலங்காயன் என்னும் படைத்தலைவன் பதினாயிரம் சதுரங்கப் படைகளுடன் எந்திர யானையை வழிநடத்திச் சென்றான்.

இந்தமாய யானை தன்னை உயிருள்ளது போலக் காட்டிப் பல பிடிகள் [2] புடை சூழக் காட்டில் திருந்துகொண்டிருந்தது. உதயணன் இந்த யானையைத் தன்னிடமிருந்து பிரிந்து போய்விட்ட தெய்வயானை என எண்ணித் தன்னிடமிருந்த, அதனை மயக்கும், கோடபதி என்னும் யாழை மீட்டினான். அருகில் நெருங்கினான். அப்போது யானைக்குள் இருந்த போர்வீரர்கள் வெளிப்பட்டு உதயணனைப் பலவாறு திட்டினர். அந்தச் சொற்கள் சிறியோரின் இழிசொற்கள் என எண்ணி உதயணன் நகைத்தான்.

உதயணனுக்குத் துணையாக 500 வீரர்களுடன் வந்திருந்த உதயணனின் தோழன் வயந்தகன் எந்திர யானைக்குள்ளிருந்து வெளிப்பட்ட 96 பேரையும் கொன்றான். பதினாயிரம் பேருடன் வந்திருந்த சாலங்காயன் உதயணனைத் தாக்கினான். சாலங்காயன் படைகளை உதயணன் வீழ்த்தினான். சாலங்காயன் பிரச்சோதனனுக்கு அமைச்சனாகவும் விளங்கியபடியால் அமைச்சனைக் கொல்லக்கூடாது என உதயணன் விட்டுவிட்டான். பின்னர் உதயணன் யானையைக் கொல்லத் துணிந்து வாளால் வீசினான். வாள் யானையின் கொம்பில் பட்டு முறிந்துவிட்டது. இந்த நிலையில் சாலங்காயன் உதயணனைக் கைது செய்தான்.

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link) உ.வே.சா. எழுதிய உதயணன் சரித்திரச் சுருக்கம்
  2. பெண்யானைகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எந்திர_யானை&oldid=3320658" இலிருந்து மீள்விக்கப்பட்டது