உடையாநத்தம் விசிறிப்பாறை சிற்பம்
உடையாநத்தம் விசிறிப்பாறை சிற்பம் என்பது தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், கனல் வட்டம், உடையாநத்தம் கிராமத்தில் மனிதவடிவில் (Anthropomorphic sculpture) அமைந்துள்ள தாய்த்தெய்வக் கற்சிற்பத்தைக் குறிக்கும். [1] இந்தச் சிற்பம் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. பறவைக்கல் என்றும், விசிறிக்கல் என்றும் இதனை மக்கள் அழைக்கிறார்கள். [2][3]
அமைவிடம்
[தொகு]உடையாநத்தம் விசிறிப்பாறை சிற்பம், விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ள இவ்வூர், கீழ்வாலையிலிருந்து 3.0 கி.மீ. தொலைவிலும், ஆலம்பாடியிலிருந்து 10.6 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 26.2 கி.மீ. தொலைவிலும், செத்தவரையிலிருந்து 26.4 கி.மீ. தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து 41.5 கி.மீ. தொலைவிலும், திண்டிவனத்திலிருந்து 83.6 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது. இவ்வூரின் பின் குறியீடு 605701 ஆகும். [1]
தொன்மைக்கால நம்பிக்கை
[தொகு]மனிதர்கள் இறந்த பின்னர் உயிர் பறவையாகப் பறந்து மேலுலகம் செல்வர் என்பது முற்காலத்தில் நிலவிய நம்பிக்கை. எனவே இத்தகைய சிற்பங்கள் பறவை வடிவில் வடிக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. [4]
விசிறிப்பாறை சிற்பம்
[தொகு]மனித உருவத்தை ஒத்து அமைந்துள்ள (Anthropomorphic Form) விசிறிப்பாறை சிற்பம், உடையாநத்தம் ஈமக்காட்டின், கல்வட்டங்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 30 அடி தொலைவில் அமைந்துள்ளது. சற்று தொலைவில் ஆதிலி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இது போன்ற கற்சிற்பங்கள் உலகின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. இந்தியாவிலும் இது போன்ற சிற்பங்கள் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன. [4] தமிழ்நாட்டின் தருமபுரி, மாவட்டம், பாலக்கோடு வட்டம், மோதூர் கிராமத்திலும் இதுபோல ஒரு சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.[5]
விசிறிப்பாறை சிற்பத்தின் ஒரு பகுதி மண்ணுள் புதையுண்டுள்ளது. மண்ணுக்கு வெளியே உள்ள பகுதி ஏறக்குறைய 12 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஒரேகல்லில் வடிக்கப்பட்ட இந்தச் சிற்பம், ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகள் தொன்மை மிக்கதாகக் கருதப்படுகிறது. பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. தாய்த்தெய்வ வழிப்பாட்டின் முன்னோடியாகவும் இந்தச் சிற்பம் கருதப்படுகிறது. [3][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Udayanatham Onefivenine
- ↑ 2.0 2.1 உடையாநத்தம் தமிழிணையம், தமிழர் தகவலாற்றுப்படை
- ↑ 3.0 3.1 ஆடற்கலை: ஆண்ட தமிழர்கள்! கி. ஸ்ரீதரன். தினமணி (தினமணி கொண்டாட்டம்) 14th November 2021
- ↑ 4.0 4.1 Megalithic Anthropomorphic Statues: Meaning and Significance k P. Rao Indo-Pacific Prehistory Association Bulletin 19, 2000 (Melaka Papers Volume 3)
- ↑ மோதூர் - விசிறிக்கல் (தாய்த்தெய்வம்) தமிழிணையம், தமிழர் தகவலாற்றுப்படை
வெளி இணைப்புகள்
[தொகு]- visiriparai |Aathiliamman temple |udayarnatham | Thai theivam |தாய் தெய்வம்| விசிரிப்பாறை| Kalai Pavan October 26, 2020 YouTube