உள்ளடக்கத்துக்குச் செல்

இருந்தையூர்க் கொற்றன் புலவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இருந்தையூர்க் கொற்றன் புலவன் என்பவர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.[1] அவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் உள்ளது. அது குறுந்தொகை நூலில் பாடல் எண் 335 ஆக அமைந்துள்ளது. குறிஞ்சித் திணை நெறியில் அமைந்துள்ள இந்தப் பாடலில் தலைவியை அடையத் தலைவன் இரவில் வரவேண்டாம் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

பாடல் தரும் செய்தி

[தொகு]

இவளது அண்ணன் வல்வில் கானவன். இவள் பெருந்தோள் கொடிச்சி. இவளது ஊரிலுள்ள மகளிர் கைவளை குலுங்கக் கவண் வீசித் தினைப்புனம் காப்பர். இடையே சுனையாடச் செல்வர். அந்த நேரம் பார்த்து மந்தி தன் குட்டியோடு வந்து தினையைக் கவர்ந்து செல்லும். அந்த இடம் பக்கத்தில்தான் இருக்கிறது. - இவ்வாறு எங்கு வரவேண்டும் என்னும் இடத்தையும் தோழி தலைவனுக்குச் சுட்டுகிறாள்.

பெயரில் புதுமை

[தொகு]

புலவரை 'அன்' விகுதி தந்து குறிப்பிடும் பழக்கம் சங்ககாலத்தில் இல்லை. நக்கீரர் என்றோ, நக்கீரனார் என்றோ வெருமைப்படுத்தும் உயர்வுப்பன்மை விகுதி தந்தே அழைப்பது வழக்கம். இந்தப் புலவர் பெயருக்கு இறுதியில் உள்ள 'புலவன்' என்னும் சொல்லே இவரைப் பெருமைப்படுத்தும் விருதாக அமைந்துள்ளது. ஈ, வே. ரா. பெரியார் என்று இக்காலத்தில் வழங்குவது போன்றது இது.

இருந்தையூர்

[தொகு]

இது மதுரையை அடுத்து வையை ஆற்றின் மேல்பகுதியில் திருவிருந்த நல்லூர் என்னும் பெயருடன் விளங்கும் ஊரே இருந்தையூர் ஆகும். மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூர் ஊர் இதன் பகுதியாக உள்ளது. பரிபாடல் திரட்டு என்று சேர்க்கப்பட்டுள்ள பாடல் ஒன்றில் இவ்வூரிலிருக்கும் திருமால் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளார்.[2]

மேற்கோள்

[தொகு]
  1. கா., கோவிந்தன் (1964). சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - கo. மாநகர்ப் புலவர்கள் -க. (மறுபதிப்பு) (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 54.
  2. பொதுவன் அடிகள் (2009), சங்கநூல் பத்துப்பாட்டு மூலமும் செய்தி உரையும் நூல். பக். 477