உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜ அரியரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜ அரியரத்தினம்
பிறப்பு(1916-01-15)சனவரி 15, 1916
இறப்புமே 28, 1998(1998-05-28) (அகவை 82)
சென்னை, தமிழ்நாடு
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிபத்திரிகை ஆசிரியர்
அறியப்படுவதுஎழுத்தாளர், பத்திரிகையாளர்

இராஜ அரியரத்தினம் (15 சனவரி 1916 - 28 மே 1998) ஈழத்தின் பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர். ஈழத்தின் சிறுகதை முன்னோடிகளுள் ஒருவர். ஈழகேசரி, ஈழநாடு, சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தவர்.

எழுத்துலகில்

[தொகு]

ஆரம்பத்தில் இவர் ஆங்கிலப் பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதி வந்தார். இவரது முதல் சிறுகதை "வயலுக்குப் போட்டார்" ஈழகேசரி பத்திரிகையில் 1945 ஆம் ஆண்டில் வெளிவந்தது.[1] இதே கதை சிற்பி சரவணபவன் தொகுத்து வெளியிட்ட தொகுப்பில் "வெள்ளம்" என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

பத்திரிகை ஆசிரியர்

[தொகு]

இராஜ அரியரத்தினம் 1941 ஆம் ஆண்டு முதல் 1958 ஆம் ஆண்டில் அப்பத்திரிகை மூடப்படும் வரையில் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.[1] 1950களின் ஆரம்பத்தில் தங்கப்பூச்சி என்ற பெயரில் ஈழகேசரியில் ஒரு தொடர் புதினத்தையும் எழுதினார். செருமானிய எழுத்தாளர் தோமசு மான் எழுதிய எழுதிய புதினம் ஒன்றை இவர் "மனவிகாரம்" என்ற தலைப்பில் சோனாசலம் என்ற புனைபெயரில் ஈழகேசரியில் எழுதினார். "அரியம்", அரியரத்தினம் சோனாசலம் போன்ற புனைபெயர்களிலும் இவர் எழுதினார். சோனாசலக் கவிராயர் என்ர பெயரில் கவிதைகளும் இவர் எழுதியுள்ளார்.[1]

ஈழகேசரி பத்திரிகை மூலமாக கல்கி, பெரியசாமி தூரன் போன்றோர் இவருக்கு நண்பர்களாயினர். "கல்கி பிறந்தார்" என்ற நூலையும் எழுதி வெளியிட்டார்.

ஈழகேசரி மூடப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான ஈழநாடு பத்திரிகையில் இரண்டாண்டுகள் பணியாற்றி 1960 ஆம் ஆண்டில் கொழும்புக்கு இடம் பெயர்ந்தார். அங்கு சுயாதீனப் பத்திரிகை நிறுவனம் நடத்திய தினபதி நாளேட்டின் ஞாயிறு பதிப்பான சிந்தாமணி பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். அக்கால அரசியல் நெருக்கடியால் இப்பத்திரிகைக் காரியாலயம் அப்போதைய அரசால் மூடப்பட்டதை அடுத்து சிந்தாமணி பத்திரிகையும் நிறுத்தப்பட்டது.

மறைவு

[தொகு]

இராஜ அரியரத்தினம் தமிழ்நாடு சென்றிருந்தபோது 1998 மே 28 இல் தனது 82வது அகவையில் சென்னையில் காலமானார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 துயர் பகிர்தல்: ஈழகேசரி பொன்னையா கண்டெடுத்த இராஜ அரியரத்தினம், வீரகேசரி, டிசம்பர் 7, 2013

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜ_அரியரத்தினம்&oldid=2805276" இலிருந்து மீள்விக்கப்பட்டது