உள்ளடக்கத்துக்குச் செல்

இரட்டை ஏரி சந்திப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரட்டை ஏரி சந்திப்பு
ரெட்டேரி சந்திப்பு
அமைவிடம்
கொளத்தூர், சென்னை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
சந்தியில் உள்ள
சாலைகள்:
4
கட்டுமானம்
Spans:27
வழித்தடங்கள்:2
திறக்கப்பட்டது:2021 (2021)
பராமரிப்பு:மாநில நெடுஞ்சாலைத் துறை, தமிழ்நாடு

இரட்டை ஏரி சந்திப்பு (Retteri junction) என்பது, இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் பகுதியிலுள்ள சில சாலைகளின் சந்திப்பு ஆகும். இந்தச் சாலை சந்திப்பில், அண்ணா நகரிலிருந்து வரும், அண்ணா நகர் செல்லும் வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்தச் சந்திப்பு வழியாக புழல் மற்றும் செங்குன்றம் செல்லும், செங்குன்றத்திலிருந்து வரும் வாகனங்கள் பயணிக்கின்றன. மாதவரத்திலிருந்து வரும், மாதவரம் செல்லும் வாகனங்கள் இச்சாலை சந்திப்பு வழியாகப் பயணம் செய்கின்றன. மேலும், பெரம்பூர் சென்று, வர இச்சாலை சந்திப்பு முக்கியமானதாக இருக்கிறது.[1] எப்போதும் பரபரப்புடனும், கூட்டம் அதிகமாகவும் காணப்படும் இச்சந்திப்பில், கூட்ட நெரிசலைக் குறைக்கவும், போக்குவரத்தை எளிதாக்கவும் கட்டப்பட்ட மேம்பாலங்கள் இரண்டில் ஒன்று, அண்ணா நகரிலிருந்து, பாடி வழியாக மாதவரம் செல்லும் வகையிலும், மற்றொன்று மாதவரத்திலிருந்து, பாடி வழியாக அண்ணா நகர் செல்லும் வகையிலும் அமையப் பெற்றுள்ளன.

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 36 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இரட்டை ஏரி சந்திப்பின் புவியியல் ஆள்கூறுகள் 13°07'48.9"N, 80°12'49.6"E (அதாவது, 13.130240°N, 80.213790°E) ஆகும்.

போக்குவரத்து

[தொகு]

மேம்பாலங்கள்

[தொகு]

சுமார் 740 மீட்டர் நீளத்தில், அண்ணா நகர் - மாதவரம் நூறு அடி சாலையில், இரட்டை ஏரி சந்திப்பில், ரூ.55.25 கோடி திட்ட மதிப்பீட்டில், மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டு, போக்குவரத்து நடைபெறுகிறது. பாலத்தின் இருபுறமும் முறையே சுமார் 280 மீட்டர் நீளங்களில், அணுகுமுறைச் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.[2] மேலும், இரண்டாவது பாலமாக, இப்பாலத்திற்கு இணையாக, மாதவரம் - அண்ணா நகர் நூறு அடி (ஜவஹர்லால் நேரு) சாலையில் சுமார் 1,320 மீட்டர் நீள மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.

மெட்ரோ இரயில்

[தொகு]

சென்னையில் மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட, ஐந்தாவது வழித்தடமாக மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடம் அமைய இருக்கிறது. இவ்வழித்தடம், இரட்டை ஏரி சந்திப்பு வழியாக சுமார் 47 கி.மீ. பாதையைக் கொண்டிருக்கும். சுமார் 5.8 கி.மீ. தூரம் சுரங்கப்பாதையாகவும், சுமார் 41.2 கி.மீ. தூரம் உயர்மட்டப் பாதையாகவும் அமையவிருக்கும் இந்தத் தடத்தில், மாதவரத்திலிருந்து இரட்டை ஏரி சந்திப்பு வரை உயர்மட்டப் பாதையாகும். இதற்கான தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.[3]

மாதவரம் தொடங்கி, இரட்டை ஏரி சந்திப்பு வழியாக கோயம்பேடு வரை மெட்ரோ இரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.[4] உயர்மட்டப் பாதைகள் அமைத்து 2025ஆம் ஆண்டுக்குள் முடிக்க, மெட்ரோ இரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சுரங்கப்பாதைகள் அமைத்து 2026ஆம் ஆண்டுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.[5] மாதவரம் மற்றும் இரட்டை ஏரி சந்திப்பிற்கு இடையே, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தூண்களின் மேல் மேம்பாலப் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.[6] இப்பணிகளின் இடையே, 150 டன் எடை கொண்ட ராட்சத ஆழ்துளையிடும் இயந்திரம் ஒன்று, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் நாள் இரவில், பாலத்தின் மீது சரிந்தது. 30 வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த அந்த நேரத்தில், அசம்பாவிதங்கள் ஏதுமின்றி, உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களின் முயற்சிகளால், இயந்திரம் மீண்டும் சமநிலைக்குக் கொண்டு வரப்பட்டது.[7]

மெட்ரோ சுரங்கப்பாதை

[தொகு]

இரட்டை ஏரி சந்திப்பு முதல் வில்லிவாக்கம் (கொளத்தூர் மெட்ரோ முதல் நாதமுனி மெட்ரோ) வரை, சுரங்கப்பாதை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.[8] இந்த சுரங்கப்பாதை தூரம் சுமார் ஐந்து கி.மீ. நீளமாகும். இதைத் தோண்டுவதற்கு நான்கு ராட்சத துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.[9]

சிறிய பேருந்துகள்

[தொகு]

இரட்டை ஏரி சந்திப்பு முதல் மாதவரம் வரை மற்றும் மறுமார்க்கமாக மாதவரம் முதல் இரட்டை ஏரி வரையிலான வழித்தடத்தில், பேருந்துகள் செல்லாத இடங்களில் சிறிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தினத்தந்தி (2017-12-26). "மேம்பாலப்பணி தாமதத்தால் கடும்போக்குவரத்து". www.dailythanthi.com. Retrieved 2022-12-06.
  2. "ரூ.55 கோடியில் ரெட்டேரி மேம்பாலம் பணிகளை விரைந்து முடிக்க ஏற்பாடு - Dinamalar Tamil News". Dinamalar. 2015-06-23. Retrieved 2022-12-06.
  3. "மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ வழித்தடத்தில் தூண் அமைக்கும் பணி தீவிரம்" (in ta). https://www.hindutamil.in/news/tamilnadu/863514-intensity-of-construction-of-pillar-on-metro-line.html. 
  4. Maalaimalar (2022-09-02). "ரெட்டேரி சந்திப்பில் மெட்ரோ ரெயில் பணி- ராட்சத கிரேன் பாலத்தில் சரிந்தது" (in ta). https://www.maalaimalar.com/news/district/giant-crane-collapses-on-metro-train-bridge-at-retteri-junction-workers-escaped-507428. 
  5. "இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மொத்தம் 40 இடங்களில் பணிகள் தீவிரம்" (in ta). https://www.hindutamil.in/news/tamilnadu/840435-phase-ii-metro-rail-project.html. 
  6. "மெட்ரோ துாண்களில் மேம்பால பணி மாதவரத்தில் துவக்கம் - Dinamalar Tamil News" (in ta). 2022-10-18. https://m.dinamalar.com/detail.php?id=3149053. 
  7. "மெட்ரோ ரயில் பணியின்போது ராட்சத கிரேன் சரிந்ததால் பரபரப்பு". www.dinakaran.com. Archived from the original on 2022-12-09. Retrieved 2022-12-06.
  8. "மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணிகளுக்கு 6 மாதத்தில் ஒப்பந்தம் வழங்க திட்டம்" (in ta). https://www.hindutamil.in/news/tamilnadu/865701-tunnel-works.html. 
  9. "சென்னையில் 2வது கட்ட மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணிகள்: முதல்வர் தொடங்கி வைத்தார்." (in ta). https://www.hindutamil.in/news/tamilnadu/882271-2nd-phase-metro-rail-tunnel-digging-in-chennai.html. 
  10. "சென்னை புறநகர், உட்பகுதிகளில் சிறிய பேருந்துகள் இயக்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு". Hindu Tamil Thisai. Retrieved 2022-12-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_ஏரி_சந்திப்பு&oldid=3723227" இலிருந்து மீள்விக்கப்பட்டது