உள்ளடக்கத்துக்குச் செல்

இயோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயோனில் உள்ள பண்டைய பாரசீக கோட்டை (இடது) மற்றும் ஸ்ட்ரூமா ஆற்றின் முகத்துவாரம் (வலது), என்னியா ஹோடோய் (ஆம்பிபோலிஸ்) இலிருந்து தோற்றம்.

இயோன் (Eion, கிரேக்கம்: Ἠϊών Ἠϊών , Ēiṓn ), பண்டைய கிரிசோபோலிஸ், என்பது திரேசியன் மாசிடோனியாவில் குறிப்பாக எடோனிஸ் பகுதியில் உள்ள ஒரு பண்டைய கிரேக்க எரீத்திய [1] குடியேற்றம் ஆகும். இது திரேசின் உட்புறத்தில் இருந்து ஏஜியன் கடலில் கலக்கும் ஸ்ட்ரூமா ஆற்றின் முகத்துவாரத்தில் அமர்ந்தது. இது பெலோபொன்னேசியப் போரின் போது ஏதெனியர்களுக்கு கணிசமான உத்திப்பூர்வ முக்கியத்துவம் வாய்ந்த இடமாக துசிடிடீசியின் பெலோபொன்னேசியப் போரின் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிமு 497 இல் ஐயோனியன் கிளர்ச்சியின் போது ஏதெனியர்கள் முதன்முறையாக இயோனைக் கைப்பற்ற முயன்றனர். அது தோல்வியுற்றது, கிளர்ச்சியை ஒடுக்கிய பாரசீகர்கள் இயோன் உட்பட திரேஸ் மீது தங்கள் கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்தினர். மேலும் அநேகமாக கிமு 492 இல் பாரசீகர்கள் நிரந்தரமாக இங்கே தங்குவதற்கு ஒரு கோட்டை கட்டப்பட்டது. [2] பாரசீக பேரரசர் முதலாம் செர்கசின் பெரிய படைகளுக்கு தேவைப்படும் உணவுப் பொருட்களை சேமித்து வைக்கப்பட்ட திரேசில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக இயோன் செயல்பட்டது. [3] எரோடோடசு மற்றும் டியோடோரஸ் பாரசீக இராணுவதளம் பற்றி பேசுகிறார்கள், அதில் இயோனில் இருந்த மூத்த தளபதிகள் இனரீதியாக பாரசீகராக இருந்தார் என்கின்றனர். [4] கிமு 480/479 குளிர்காலத்தில் அப்பகுதியிலிருந்து பெரும்பாலான பாரசீக துருப்புக்களை செர்கசின திரும்பப் பெற்றிருந்தார். [5] இதை பின்னர் கிமு 475 இல் இளைய மில்டியாடீசின் மகனும் ஏதெனியன் [6] தளபதியுமான சிமோனின் தலைமையிலான டெலியன் கூட்டணியால் கைப்பற்றப்பட்டது. அவர் நகரத்தை முற்றுகை இட்டபோது. பாரசீக தளபதியான போஜஸ் பணிய மறுத்தார். தன்னிடம் இருந்த பொன் பொருளை ஆற்றில் கொட்டி அழித்தார். உணவு தீர்ந்ததால் அவரது குடும்பத்தைக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார். சிமோன் ஸ்ட்ரைமோன் ஆற்றின் போக்கை மாற்றினார், அதனால் அது நகரச் சுவர்களின் மீது பாய்ந்தது, இதனால் செங்கலால் கட்டப்பட்ட கோட்டைச் சுவர் கரைந்து வீழ்ந்தது. குடிகள் அடிமைப்படுத்தப்பட்டனர். இயோனைக் கைப்பற்றியது என்பது புதிதாக உருவாக்கப்பட்ட டெலியன் கூட்டணியால் மேற்கொள்ளப்பட்ட ஒரு போர்த் தொடரின் தொடக்கமாகும். இதன் நோக்கம் ஹெலஸ்பாண்டிற்கு ஏதெனியன் அணுகலை எளிதாக்கும் வகையில் பாரசீக கடற்படைகள் மற்றும் கடற்கொள்ளையர்களை ஏஜியன் கடல் பகுதியில் இருந்து அகற்றுவதாகும்.

இயோனின் இருப்பிடத்துடன் ஆம்பிபோலிஸின் வரைபடம் மற்றும் சுற்றுப்புறம்.

அருகிலுள்ள ஏதெனியன் குடியேற்றமான ஆம்பிபோலிஸ் கிமு 437 இல் ஸ்ட்ரைமோன் ஆற்றோரத்தில் மூன்று மைல் தொலைவில் நிறுவப்பட்டது. ஹக்னான் தலைமையில் குடியேறியவர்கள், இயோனைத் தங்கள் ஆரம்ப காலத் தளமாகப் பயன்படுத்தினர்; மற்றும் இயோன் ஆம்பிபோலிசின் துறைமுகமாக செயல்பட்டது.

பின்னர் நடந்த போரில் கிமு 424/423 குளிர்காலத்தில், ஸ்பார்டான் தளபதி பிரசிடாஸ் தனது திரேசிய கூட்டாளிகளுடன் ஆம்பிபோலிசைக் கைப்பற்றினார். அவர் இயோனை நோக்கி நகர்ந்தபோது, துசிடிடீஸ் தலைமையிலான ஏதெனியன் பாதுகாவலர்களை அவரால் வெல்ல முடியவில்லை. துசிடிடீஸ் இயோனை தக்கவைத்திருந்தாலும், முக்கிய நகரமான ஆம்பிபோலிசைப் பாதுகாக்கத் தவறியதற்காக ஏதெனியர்களால் நாடுகடத்தப்பட்டார்.

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இயோன் ரெண்டினா என அறியப்பட்டது, [7] எனவே ஸ்ட்ரைமோனியன் வளைகுடாவிற்கு ரெண்டினா வளைகுடா என்று முன்பு அழைக்கப்பட்டது.

வில்லியம் மார்ட்டின் லீக், சிறிய கற்கள் மற்றும் பாறைகள் கொண்டு கட்டப்பட்ட தடிமனான சுவர்களின் இடிபாடுகளைக் கண்டுபிடித்ததாகக் கூறியதால். 19 ஆம் நூற்றாண்டில் இந்த இடத்தின் சிறப்பு மீட்கப்பட்டது. இங்கு ஹெலனிக் பாணியில் பல சதுர நிலத் தொகுதிகள் ஸ்ட்ரைமோன் ஆற்றின் இடது கரையில் காணப்படுகின்றன. . இருப்பினும், அந்த இடிபாடுகள் பைசந்தியன் காலத்தைச் சேர்ந்தவை, மேலும் அவை கீழ்ப் பேரரசின் ஒரு நகரமான கோமிட்டிஸ்ஸே (Κομιτίσση) என்று கூறப்படுகிறது. [8]

குறிப்புகள்

[தொகு]
  1. Keith G. Walker, Archaic Eretria: A political and social history from the earliest times to 490 BC (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-28552-6), p. 154.
  2. Julia Valeva, Emil Nankov, Denver Graninger. "A Companion to Ancient Thrace" John Wiley & Sons, 15 jun. 2015. p 323
  3. Julia Valeva, Emil Nankov, Denver Graninger. "A Companion to Ancient Thrace" John Wiley & Sons, 15 jun. 2015. p 324
  4. Elspeth R. M. Dusinberre. "Empire, Authority, and Autonomy in Achaemenid Anatolia" Cambridge University Press, 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1107018269 p 90
  5. "Amphipolis (Ennea Hodoi) - Livius". www.livius.org.
  6. Mogens Herman Hansen, An Inventory of Archaic and Classical Poleis: An Investigation Conducted by the Copenhagen Polis Centre for the Danish National Research Foundation, 2005, p. 827.
  7. Peter Edmund Laurent, The Nine Books of the History of Herodotus, Vol. 2 (Henry Slatter, 1837), p. 415.
  8.   "Eion". Dictionary of Greek and Roman Geography. (1854–1857). London: John Murray. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயோன்&oldid=3430717" இலிருந்து மீள்விக்கப்பட்டது