உள்ளடக்கத்துக்குச் செல்

இயற்பெயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயல் என்பது இயல்பு. தமிழகத்தில் இயல்பாக வழங்கப்படும் சொல் இயற்சொல். இயல்பாக ஒன்றினுக்கோ, ஒருவருக்கோ இட்டு வழங்கப்பபடும் பெயர் இயற்பெயர். வேம்பு என்பது மரங்களில் ஒரு வகைக்கு இட்டு வழங்கப்படும் பெயர். இது மொழிக்கு மொழி வேறுபடும். சூட்டிய பெயர் மொழிக்கு மொழி வேறுபடாது. எந்த மொழியாயினும் அதே பெயரில் வழங்கப்படும்.

தமிழ்நெறி

[தொகு]

முதற் பெயர் (first name), அல்லது சூட்டிய பெயர் என்னும் வழக்கு அப்பெயர் ஒருவருக்குச் சூட்டப்பட்டது அல்லது இடப்பட்டது என்பதைக் குறிக்கிறது. பொதுவாக இது அவரது பிறப்பின்போது அவரது பெற்றோரால் சூட்டப்படும். சூட்டப்படாமல் பரம்பரையாக வருகின்ற குடும்பப் பெயர், சாதிப் பெயர் போன்றவறில் இருந்து இது வேறுபடுகிறது.[1] ’சாத்தன்’ என்பது ஒரு தந்தை தன் மகன் ஒருவனுக்குச் சூட்டிய பெயர். ’சாத்தன்’ என்பது ஒருவன் தன் வளர்ப்புக் காளைக்குச் சூட்டிய பெயர். அவ்வாறே பெற்றோர் ’சாத்தி’ என்று ஒருத்திக்கும், ’சாத்தி’ என்று வளர்ப்புப் பசு ஒன்றற்கும் பெயர் சூட்டுவர். ‘கொற்றன்’, ’கொற்றி’ என்றல்லாம் இவ்வாறு பெயர் சூட்டும் பழக்கம் தமிழர்களிடம் நிலவிவந்தது.

இத்தகைய சாத்தன் ஒருவன் அல்லது ஒன்றன் தந்தையைச் ‘சாத்தந்தை’ என்றும், ’கொற்றன்’ தந்தையைக் ’கொற்றந்தை’ என்றும் முறைப்பெயராக்கி வழங்கப்பட்டதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

குடும்பப் பெயர்

[தொகு]

சோழன் நலங்கிள்ளி, பாண்டியன் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன் போன்றவை குடும்பப்பெயரைப் பெற்றோர் இட்ட தன் பெயருடன் இணைத்துக்கொண்ட பெயர்கள். மற்றும் பிற்காலத்தில் ஒரு சாதி, மரபு முதலானவற்றை ஒரு குடும்பமாக ஆக்கிக்கொண்ட வழக்கம் தோன்றியது. சிலர் ’பிள்ளை’, ‘கவுண்டர்’ போன்ற பெயர்களைப் பெற்றோர் சூட்டிய பெயருக்கும் பின்னால் இணைத்துக்கொண்டனர். இந்திரா காந்தி, சோனியா காந்தி போன்றவை குடும்பப் பெயர்கள்.

சிறப்புப் பெயர்கள்

[தொகு]

சோழிய ஏனாதி திருக்கண்ணன் என்னும் பெயரில் ஏனாதி என்பது சிறப்புப்பெயர். ‘பெரியார் ஈ.வெ.ரா, ஈ.வெ.ரா. பெரியார் ஆகியவற்றில் பெரியார் என்பது சிறப்புப்பெயர்

சூட்டிய பெயர்

[தொகு]

சூட்டிய பெயர் என்பதற்கு ஈடாகக் கிறித்தவப் பெயர் என்ற சொல்லைக் கிறித்தவர்கள் புழங்குவது உண்டு. கிறித்தவப் பெயர் என்பது, பிறந்த குழந்தைகளின் ஞானஸ்நானத்தின் போது அல்லது ஒருவர் கிறித்தவ மதத்துக்கு மாறும் போது சூட்டப்படும் பெயரைக் குறிக்கும்.[2] இதனைக் கிறித்தவப் பெயர் (Christian name) என்பர். இது அவரின் முழுப் பெயரின் ஒரு பகுதியாக அமையும். இப்பெயரே ஒருவரை அவரது குடும்பம், இனக் குழு போன்றவற்றில் உள்ள பிறரிடம் இருந்து வேறுபடுத்துகிறது. ஏனெனில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் ஒரே பெயரே குடும்பப் பெயராக அமையும்.

தொல்காப்பியம்

[தொகு]

தொல்காப்பியம் இயற்பெயர் பற்றிக் குறிப்பிடுகிறது. [3] பெண்மை இயற்பெயர், ஆண்மை இயற்பெயர், பன்மை இயற்பெயர், ஒருமை இயற்பெயர் என்று நான்கு வகையாகப் பகுத்தும் காட்டுகிறது. [4] இதற்கு எடுத்துக்காட்டாக உரையாசிரியர் கல்லாடனார் தரும் மேற்கோள்கள் இவை. [5]

எடுத்துக்காட்டு பொருள் விரி
சாத்தன் வந்தது எருதுக்கு இடப்பட்ட பெயர்
சாத்தன் வந்தான் ஒருவனுக்கு இடப்பட்ட பெயர்
சாத்தி வந்தது பசுவுக்கு இடப்பட்ட பெயர்
சாத்தி வந்தாள் ஒருத்திக்கு இடப்பட்ட பெயர்

இந்த வழியில் கொற்றன், கொற்றி போன்ற சொற்களையும் ஒட்டிக்கொள்ளலாம்.

இந்த மரபு வழியை இன்றும் தமிழ்மொழி பின்பற்றிவருகிறது. பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு இடும் பெயரை இயற்பெயர் என்கிறோம். வளர்ப்போர் விலங்குகளுக்கு இடும் பெயரும் இயற்பெயரே.

இயற்பெயர் பற்றித் தொல்காப்பியம் கூறும் செய்திகள்

[தொகு]

இயற்பெயர் என்னும் சொல் தொல்காப்பியத்தில் பல இடங்களில் பின்றுவருகிறது. நாய், நண்டைக் குறிக்கும் களவன் போன்ற சொற்களையும் அது இயற்பெயர் என்று குறிப்பிடுகிறது. இயற்சொல் என்பது வேறு.

  • இயற்பெயரை அடுத்துத் தந்தை முறையைக் குறிக்கும் சொல் வந்தால், ஆதன்+தந்தை=ஆந்தை என்பது போலப் புணர்ந்தமையும். [6]
  • தான், பேன், கோன் என்னும் சொற்கள் மூன்றும் அவ்வாறு அமைவதில்லை. [7]
  • இயற்பெயரும் சுட்டுப்பெயரும் சேர்ந்து வர நேர்ந்தால் சாத்தன் வந்தான்; அவன் நல்லன் என்பது போல் சுட்டுப்பெயர் வழிவரும் மொழியாக அமையும். [8]
  • சிறப்புப் பெயரும் இயற்பெயரும் வந்தால், சோழன் நலங்கிள்ளி என்பது போல இயற்பெயர் ஙழிவரு மொழியாக அமையும். [9]
  • அஃறிணை இயற்பெயர் ஒருமையா பன்மையா என்பதை வினை முடிபால் உணர்ந்துகொள்ள வேண்டும். [10]
  • இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற்பெயர், முறைப்பெயர் என்னும் பாகுபாடுகள் பெயரில் உண்டு. [11]
  • பெண்ணைக் குறிப்பனவும், ஆணைக் குறிப்பனவும், ஒன்றைக் குறிப்பனவும், பலவற்றைக் குறிப்பனவும் என்று இடற்பெயரில் நான்கு வகை உண்டு. [12]
  • களவன், அலவன் போன்ற இயற்பெயர்கள் உயர்திடையைச் சுட்டுவதில்லை. [13]
  • சில இயற்பெயர் அரசனார், மகனார் என்பது போல் ஆர் என்னும் இடைச்சொல்லை இறுதியில் ஒட்டாகப் பெற்று வரும். [14]
  • கள் என்னும் உருபு ஏற்று நாய்கள் என்பது போல் வரும் இயற்பெயர்களும் உண்டு. [15]

சூட்டிய பெயரும் பிற பெயர்களும்

[தொகு]

மேனாட்டுப் பண்பாடுகளில் முழுப் பெயரில் சூட்டிய பெயரே முதலில் வரும். எடுத்துக்காட்டாக ஆபிரகாம் லிங்கன் என்னும் பெயரில் ஆபிரகாம் சூட்டிய பெயர். பல பண்பாடுகளில் இம்முறை பின்பற்றப்படுவது இல்லை. ஐரோப்பாவில் அங்கேரியிலும், ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், கிழக்காசியாவின் பெரும்பாலான பகுதிகள் போன்றவற்றிலும் குடும்பப் பெயரை முதலில் வைத்து எழுதும் வழக்கம் உள்ளது. வேறு சில பண்பாடுகளில் சூட்டிய பெயர் மட்டுமே ஒருவரின் பெயராக வழங்குவதும் உண்டு.

தமிழர் மத்தியிலும், பொது மக்கள் சூட்டிய பெயருடன் குடும்பப் பெயரையோ, சாதிப் பெயரையோ சேர்த்து எழுதும் வழக்கம் இருந்ததற்கான சான்றுகள் பழைய இலக்கியங்களில் இல்லை. இடைக் காலத்தில் சாதிப் பெயரைச் சூட்டிய பெயருக்குப் பின்னால் சேர்த்து எழுதும் வழக்கம் இருந்தது, ஆனால், சூட்டிய பெயர், குடும்பப் பெயர் போன்ற வடிவத்தில் பெயரை எழுதும் வழக்கம் இருக்கவில்லை. பிற்காலத்தில் மேனாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இவ்வழக்கம் கிறித்தவத் தமிழர்களிடையே மாற்றம் இன்றி வழக்கில் உள்ளது. இந்துத் தமிழர் வழக்கப்படி ஆண்களுக்குச் சூட்டிய பெயர் முதலில் வருவது இல்லை. ஆனால் பெண்கள் சூட்டிய பெயரையே முதலில் வைத்து எழுதுகின்றனர்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "A name given to a person at birth or at baptism, as distinguished from a surname" – American Heritage Dictionary பரணிடப்பட்டது 2008-12-11 at the வந்தவழி இயந்திரம்
  2. Thurston, Herbert (1911), Christian Names, New York: Robert Appleton Company, பார்க்கப்பட்ட நாள் May 30, 2012
  3. தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, சொல்லதிகாரம் நூற்பா 171
  4. நூற்பா 173
  5. தொல்காப்பியம், சொல்லதிகாரம், கல்லாடனார் விருத்தியுரையும், பழைய உரையும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பு 1964 நூற்பா 184 உரை
  6. இயற்பெயர் முன்னர் தந்தை முறை வரின் - எழுத்து . புள்ளி.மயங்கியல் :52/1
  7. ஆ முறை இயற்பெயர் திரிபு இடன் இலவே - எழுத்து. புள்ளி மயங்கியல்:56/2
  8. இயற்பெயர் கிளவியும் சுட்டுப்பெயர் கிளவியும் இயற்பெயர் வழிய என்மனார் புலவர்- சொல். கிளவி:38/1
  9. இயற்பெயர் கிளவி முற்பட கிளவார் - சொல். கிளவி:41/2
  10. தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர் ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே - சொல். பெயர்:17/1
  11. தொல்காப்பியம் - சொல். பெயர்:21/2
  12. பெண்மை இயற்பெயர் ஆண்மை இயற்பெயர் பன்மை இயற்பெயர் ஒருமை இயற்பெயர் என்று - 22/3
  13. இயற்பெயர் கிளவி உயர்திணை சுட்டா - சொல். பெயர்:42/2
  14. இயற்பெயர் முன்னர் ஆரை கிளவி - சொல். இடை:22/1
  15. கள்ளொடு சிவணும் அ இயற்பெயரே கொள் வழி உடைய பல அறி சொற்கே - 15/2
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்பெயர்&oldid=4068655" இலிருந்து மீள்விக்கப்பட்டது