உள்ளடக்கத்துக்குச் செல்

ஆவி வழிபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆவி வழிபாடு என்பது மிகத் தொன்மையான வழிபாடுகளில் ஒன்றாகும். நோய்கள், தடைகள் போன்றவற்றுக்கு இறந்தவர்களின் ஆவியும் காரணமென ஆதிகுடிகள் நம்பினார்கள். அதனால் இறந்தோரின் ஆவியை திருப்திபடுத்த வழிபாடு முறையை வகுத்தனர். வைதீக இந்து சமயத்தில் நீத்தார் வழிபாடு போல நாட்டார் வழிபாடுகளில் ஆவி வழிபாடு எண்ணற்ற சடங்குகளோடு உள்ளது.

இறந்தோர் நினைவுகள் குடும்பத்திலுள்ளோர், சமூகத்திலுள்ளோரை பயம் கொள்ள செய்கின்றன. [1] அதனால் மக்கள் ஆவிகளை வழிபட தொடங்கினார்கள்.

வழிபாடு

[தொகு]

ஆவி வழிபாட்டினைக் காணிக்காரர்கள் சாவு என்றழைக்கின்றனர். யானை, புலி. பாம்பு போன்றவற்றால் கொல்லப்பட்டவர்களின் ஆவிகளை முறையே ஆனைச்சாவு, புலிச்சாவு, பாம்புச் சாவு என்று அழைக்கின்றனர். முதுமையால் இறந்தவர்களின் ஆவி முதுச்சாவு என்று அழைக்கப்படுகின்றது.

நடுகற்கள்

[தொகு]

தொட்டியம் நாயக்கர் போன்ற மக்கள் குழுவினர் இறந்தோர்களுக்காக நடுகல் வைத்து வழிபடுகின்ற வழக்கம் கொண்டிருக்கிறார்கள். இவ்வினத்தில் ஆண்-பெண் இருபாலருக்கும் நடுகல் வழிபாடு உண்டு. குழந்தைகளுக்குக் கிடையாது. அதாவது குழந்தைகளுக்குப் பால் பற்கள் விழாமல் இருந்தால் நடுகல் இல்லை. பல்விழுந்த பருவத்து குழந்தைகளுக்கு நடுகல் வழிபாடு உண்டு.

அதேபோல ஊர் பஞ்சாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு இறந்து போனவர்களுக்கு நடுகல் வழிபாடு கிடையாது. தற்கொலை செய்து கொண்டவர்களுக்கும் நடுகல் வழிபாடு இல்லை.

இறந்தோர் வழிபாடு

[தொகு]

தமிழகமெங்கும் தங்கள் குடும்பத்தில் இறந்தோர்களை வழிபடும் வழக்கம் உள்ளது. இதுவும் ஆவி வழிபாடு முறை என்றாலும் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர் இறந்ததால் வழிபடுவது ஒரு கடமையாக கருதி செய்கின்றனர்.

பட்டவன் வழிபாடு

[தொகு]

இறந்த ஆணை பட்டவன் என்னும், இறந்த பெண்ணை பட்டச்சி என்றும் அழைக்கின்றனர்.

பட்டவன் என்ற சொல்லை பட்டான் என்றும் வழங்குகின்றனர். புலியால் இறந்தவனை புலிகுத்தி பட்டான் என்றும், பன்றியால் இறந்தவனை பன்றிக் குத்தி பட்டான் என்றும் அழைக்கின்றனர். இந்த வகை நடுகற்களில் புலியை கொல்வதைப் போலவும், பன்றியைக் கொல்வதைப் போலவும் மனித உருவை செதுக்கியுள்ளனர்.

  • புலிக் குத்தி பட்டான்
  • பன்றிக் குத்தி பட்டான்
  • முயல் குத்தி பட்டான்
  • யானைக்குத்தி பட்டான்
  • பாம்புகடித்துப் பட்டான்

முத்தன் முத்தி வழிபாடு

[தொகு]

பழங்குடிகளிடம் வயதாகி இறந்த ஆணை முத்தன் என்றும், வயதாகி இறந்த பெண்ணை முத்தி என்றும் வழிபடும் வழக்கமுள்ளது. ஒருவர் இறந்ததும் மூன்றாண்டுகள் கழிந்த பின் அவரது ஆவியைச் சாற்றுப் பாடல் பாடி தோற்றுவித்துக் கோயில் கட்டி வழிபாடு நடத்துகின்றனர். அதன் பின் ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு ஒருமுறை இவ்வழிபாட்டினை நிகழ்த்துகின்றனர்

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தெய்வமே சாட்சி 12: காட்டுப்பேச்சிகளின் பாடல்". இந்து தமிழ் திசை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவி_வழிபாடு&oldid=3711855" இலிருந்து மீள்விக்கப்பட்டது