ஆலந்தூர் மிசா ம. ஆபிரகாம்
எம். ஆபிரகாம் (M. Abraham) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தார். தி.மு.க கட்சி சார்பாக 1984 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு[1] வெற்றி பெற்றார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]ஆபிரகாம் 1935 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி பிறந்தார். மரியநந்தம் மற்றும் உத்திரியமேரி ஆகியோர் இவரது பெற்றோராவர். பெற்றோர் ஆன்மீகவாதிகளாக இருந்தனர் என்றாலும் ஆபிரகாம் நாத்திகராக உருவானார். தனது பள்ளிப் படிப்பைச் சென்னை சைதாபேட்டையில் உள்ள மாந்தோப்பு பள்ளியில் தொடங்கினார். பள்ளியில் படிக்கும் பருவத்திலிருந்தே தந்தை பெரியார் மீதுள்ள ஈர்ப்பின் காரணமாக அவரது கூட்டங்களில் கலந்துகொள்வார்.
தனது ஆரம்பக் கல்வியை சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளியில் முடித்தார். பின்னர் ஆலந்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். திராவிட சித்தாந்தங்கள் மற்றும் சிந்தனைகள் மீது ஈர்க்கப்பட்டார். தான் கற்றுக்கொண்டதை உள்ளூர் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்து, ‘முத்தமிழ்ச் சிறுவர் படிப்பகம்’ என்ற பெயரில் ஓர் இலவச இரவுப் பள்ளியைத் தொடங்கினார். இதற்காக அறிஞர் அண்ணாவிடம் பாராட்டுகளைப் பெற்றார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட நேர்ந்ததால் தனது வேலையை விட்டு விலகினார். கட்சியின் நகரச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964 ஆம் ஆண்டு ஆலந்தூர் ஒரு நகராட்சியாக மாறியது. 1968 ஆம் ஆண்டில், நகராட்சி மட்டங்களில் கட்சிக் கிளைகள் நிறுவப்பட்டன. மேலும் ஆபிரகாம் ஆலந்தூர் கட்சியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இறக்கும் வரை பணியாற்றினார்.
நினைவுச் சின்னங்கள்
[தொகு]கிண்டி - சைதாபேட்டையில் இடையே உள்ள ஆலந்தூர் சாலையில் உள்ள மேம் பாலத்திற்கு மிசா ஆபிரகாம் பாலம் என இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.[2] சென்னை நங்கநல்லூரில் ஆபிரகாமின் மார்பளவு சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது சென்னை காந்தி மண்டபத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் ஆலந்தூர் ஆபிரகாமின் நிழற்படமும் இடம்பெற்றுள்ளது.
இறப்பு
[தொகு]இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இவர் இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-18.
- ↑ "சென்னை மாநகரில் திமுக கட்டிய பாலங்கள்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு மா.சுப்பிரமணியன் பட்டியலுடன் பதிலடி". ஒன் இந்தியா. https://tamil.oneindia.com/news/tamilnadu/more-bridges-built-during-the-dmk-regime-chennai-ma-subramanian-281612.html. பார்த்த நாள்: 25 June 2024.