ஆர். ஆறுமுகம்
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | ஆர். ஆறுமுகம் | ||
பிறந்த நாள் | 31 சனவரி 1953 | ||
பிறந்த இடம் | கிள்ளான் துறைமுகம், சிலாங்கூர், மலேசியா | ||
இறந்த நாள் | திசம்பர் 18, 1988 | (அகவை 35)||
ஆடும் நிலை(கள்) | காற்பந்து காவலர் | ||
இளநிலை வாழ்வழி | |||
ஸ்டார்பைட் எஸ்.சி | |||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
1971-1988 | சிலாங்கூர் கால்பந்து கழகம் | 394 | (2) |
பன்னாட்டு வாழ்வழி | |||
1973 -1986 | மலேசிய தேசிய காற்பந்து குழு | 196 | (0) |
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், சனவரி 20, 2012 அன்று சேகரிக்கப்பட்டது. |
ஆர். ஆறுமுகம் அல்லது ஆறுமுகம் ரெங்கசாமி (பிறப்பு: 31 சனவரி 1953 - இறப்பு: 18 திசம்பர் 1988); (மலாய்: R. Arumugam; ஆங்கிலம்: R. Arumugam) என்பவர் மலேசியாவில் பிரபலமான கற்பந்து வீரர். சிலந்தி வீரர் (Spiderman) என்று புகழப் பட்டவர்.[1]
நீண்ட கரங்களைக் கொண்ட இவர், காற்பந்து உலகில் சிறந்த காற்பந்து காவலராகப் புகழப்பட்டார். ஆசிய, ஒலிம்பிக் விளையாட்டுகளில் காற்பந்து துறையில், மலேசியாவை முன்னிலைப் படுத்தியவர்.[2]
இவருடைய சேவைகளைப் பாராட்டி மலேசிய மான்னர் இவருக்கு டத்தோ விருதை வழங்கி கௌரவித்து உள்ளார். அனைத்துலக, தேசிய அளவில் மிகவும் புகழ்பெற்றவராக இருந்தாலும் அனைவரிடத்திலும் பணிவாக நடந்து கொள்வார். இயற்கையிலேயே இவர் மிக எளிமையான குணம் கொண்டவர்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]ஆர். ஆறுமுகம் இளம் வயதிலேயே காற்பந்து விளையாட்டில் அதிக நாட்டம் கொண்டவராக விளங்கினார். 1971ஆம் ஆண்டில், தம்முடைய 18ஆவது வயதில் முதன்முதலாக சிலாங்கூர் காற்பந்து கழகத்தைப் பிரதிநிதித்து பர்ன்லி கோப்பை போட்டியில் (Burnley Cup Youth Tournament) [3] கலந்து கொண்டார்.
அதுதான் அவருடைய முதல் பங்கெடுப்பு. அதன் பின்னர் அடுத்தடுத்து பல தேசிய போட்டிகளில் பங்கு பெற்று புகழின் உச்சத்தை அடைந்தார்.
1972-ஆம் ஆண்டில் இருந்து 1988-ஆம் ஆண்டு வரையில் சிலாங்கூர் காற்பந்து கழகத்தின் விளயாட்டு வீரராக மலேசிய கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடினார். 1973-ஆம் ஆண்டு மலேசிய தேசிய காற்பந்து குழுவில் சேர்க்கப்பட்டார். தென்கொரியா, சியோலில் நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்து விளையாட்டில் மலேசியாவைப் பிரதிநித்தார்.
மெர்டேக்கா காற்பந்து போட்டி
[தொகு]மலேசியாவில் மெர்டேக்கா காற்பந்து போட்டி மிகவும் பிரபலமானது. ஆண்டுதோறும் நடைபெறும் அப்போட்டியில் ஆசியாவில் உள்ள பல நாடுகள் கலந்து கொள்ளும். உலகத் தரம் வாய்ந்த அந்தப் போட்டியில் 1973, 1974, 1976, 1979 ஆம் ஆண்டுகளில் மலேசியா வெற்றி வாகை சூடியது. தென்கிழக்குஆசியா விளையாட்டுகளில் (Sea Games) 1973, 1975, 1977, 1979, 1981, 1983. 1985 ஆம் ஆண்டுகளில் மலேசியாவைப் பிரதிநித்து விளையாடினார்.
1974 ஆம் ஆண்டு தெஹ்ரானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுகளில் மலேசியா வெண்கலப் பதக்கம் பெறுவதில் ஆர். ஆறுமுகம் தீவிரமான முனைப்பு காட்டினார். 1980 ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் மலேசியா தேர்வு பெறுவதற்கு இவர் காரணகர்த்தாவாக விளங்கினார். ஆனால், அமெரிக்காவை ஆதரித்து பல நாடுகள் அந்த ஒலிம்பிக் போட்டியை புறக்கணிப்பு செய்தன. அவற்றில் மலேசியாவும் ஒரு நாடு ஆகும்.
ஓய்வு
[தொகு]1986 ஆம் ஆண்டு காற்பந்து விளையாட்டுகளில் இருந்து சிலந்தி வீரன் ஆறுமுகம் ஓய்வு பெற்றார். ஓய்வு பெறும்போது அவர் 196 அனைத்துலக விளையாட்டுகளில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார். ஆர். ஆறுமுகம் காற்பந்து விளையாட்டையும் தாண்டி நின்றார். தம் இருப்பிட பகுதியில் வாழ்ந்த இளைஞர்களை ஒன்று திரட்டி Starbrite SC எனும் காற்பந்து குழுவை உருவாக்கினார். பல இளைஞர்களைத் தொழில் ரீதியான விளையாட்டாளர்களாக மாற்றிய பெருமை இவரையே சாரும்.
இறப்பு
[தொகு]இவர் தம்முடைய 35ஆவது வயதில், 1988 டிசம்பர் 18 ஆம் தேதி மலேசியா, பெட்டாலிங் ஜெயாவில் ஒரு கார் விபத்தில் அகால மரணம் அடைந்தார். அவருடைய மரணம் மலேசிய விளையாட்டுப் பிரியர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. அவருடைய இறுதிச் சடங்கில் இனம், மொழி, சமய பாகுபாடு இல்லாமல் பல்லாயிரக்கணக்கான மலேசியர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செய்தனர். அவருடைய இறப்பு மலேசிய இந்தியர்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து மலேசியர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். அவருடைய அந்த அபார விளையாட்டுத் திறமையை மலேசியாவில் எவரும் இதுவரையில் எட்டிப் பிடிக்கவில்லை.
குடும்பம்
[தொகு]இவருக்கு மரியா செல்வி எனும் மனைவி இருக்கின்றார். சுபா, ரூபா என இரு மகள்கள் உள்ளனர். இவர் பணிபுரிந்த 'பப்ளிக்' வங்கியும், சிலாங்கூர் காற்பந்து சங்கமும் இணைந்து, 1989-இல் இவருடைய பெயரில் ஓர் அற நிதியத்தை உருவாக்கியது.
பொது
[தொகு]மலேசியாவில் இந்திய இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு காற்பந்து பயிற்சிகளையும் விளையாட்டு நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தார். அதனால் அவரைக் ”காற்பந்தின் சகாப்தம்” என்று இதுவரையிலும் மலேசிய மக்கள் புகழாரம் செய்து வருகின்றனர். பெருவாரியான மலேசிய மக்களின் அன்பைப் பெற்றவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The chosen one - R. Arumugam - Malaysia's greatest ever goalkeeper, it can be the one and only R. Arumugam". On the sport. Be part of it (in ஆங்கிலம்). 18 December 2019. பார்க்கப்பட்ட நாள் 16 March 2022.
- ↑ "Arumugam Rengasamy: the goalkeeping genius you've never heard of who tragically died aged 35". These Football Times. 17 January 2019. பார்க்கப்பட்ட நாள் 16 March 2022.
- ↑ Burnley Football Club are a professional Football League club based in Burnley, Lancashire.
வெளி இணைப்புகள்
[தொகு]- Biodata at Selangorfc.com பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்(மலாய்)
- Biodata at F.A.S Online பரணிடப்பட்டது 2005-01-06 at the வந்தவழி இயந்திரம்