ஆங்கில மருத்துவத்தின் தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மனிதனது அச்ச உணர்வின் காரணமாக தோன்றிய கருத்துக்களே முதலில் மதமாகவும், பின்னர் மருத்துவமாகவும் உருவெடுத்தது. இவ்வாறாக, வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கால கட்டம் வரை மதமும், மருத்துவமும் பின்னிப்பிணைந்திருந்தது மறுக்க இயலாத உண்மையாகும். ஆனால், இது ஒரு காலகட்டம் வரை மட்டும்தான். அறிவியல் வளரவளர மதத்திற்கும், மருத்துவத்திற்கும் இடையே இருந்த தொடர்பு மெதுவாக அறுபட ஆரம்பித்தது. எனவே, இன்று வரை அறிவியல் அடிப்படையில் இயங்கி வருவது நவீன மருத்துவம் அலோபதி மருத்துவம் என்ற பெயரில் எல்லாம் வழங்கப்படும் ஆங்கில மருத்துவ முறையே ஆகும்.
ஆரம்ப காலக் குறிப்புகள்
[தொகு]மருத்துவம் (Medicine) என்ற ஆங்கில சொல் இலத்தீன் மொழியில் உள்ள ஆர்ஸ் மெடிசினா (Ars Medicina) என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும் இதன் பொருள் 'குணப்படுத்தும் கலை' என்பதாகும். மருத்துவத்தைப் பற்றிய தொடக்க காலக் குறிப்புகள், பின்வரும் ஐந்து வகை ஆதாரங்களில் இருந்து நமக்கு கிடைக்கின்றன:
- இந்தியாவின் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் , அதர்வண வேத குறிப்புகள்.
- எகிப்தின் பாப்பிரஸ் - இதில் உள்ள மருத்துவக் குறிப்புகள்.
- பழமை வாய்ந்த சீன மருத்துவக் கலை.
- செவ்விந்திய-மாயா மருத்துவக் குறிப்புகள்.
- கிரேக்க மருத்துவக் குறிப்புகள்.
கிரேக்க மருத்துவம்
[தொகு]கிரேக்க மருத்துவ அறிஞரான ஹிப்போ கிரடீஸ் அவர்களுடைய மருத்துவக் குறிப்புகளே இவற்றுள் சிறந்ததாகவும் ஒரளவிற்கு அறிவியல் தன்மை வாய்ந்ததாகவும் காணக்கிடைக்கிறது. எனவே இவரே "மருத்துவத்தின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். இவர் மருத்துவத்தை ஓரளவிற்கு மதத்திலிருந்து பிரித்து அதை ஒரு தனிக்கலையாக வளர்த்தார். அதற்கு ஒரு தனியான நடைமுறை அறிவுடன் கூடிய நடைமுறையை ஏற்படுத்தியவர் இவரே. நோயாளிகளை பரிசோதிப்பதன் மூலமாகவும் அவர்களுடைய நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பதன் மூலமாகவும் நோய்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம் என்பதை முதன் முதலில் கூறியவர். நோய்க்கான காரணத்தை அவனுடைய உடலில் இருந்து அல்லது அவனுடைய சூழ்நிலையில் இருந்து அறிந்து கொள்ள இயலும் என்பதை முதன் முதலில் தெளிவுப்படுத்தியவரும் இவரே.
மேலும் மருத்துவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் நோயாளிகளுக்கு எவ்விதம் சிகிச்சை அளித்தல் வேண்டும் என்பதைக் குறித்தெல்லாம் தெளிவாகவும் ஒரு திட்டவட்டமான வரையறுப்புடனும் எழுதிய முதல் மருத்துவரும் இவரே. இவருடைய புகழ் வாய்ந்த ”ஹிப்போகிரடீஸ் உறுதிமொழி" மருத்துவ உலகின் தொன்மையான, செம்மையான, ஆவணங்களுள் ஒன்று. ஒவ்வொரு மருத்துவரும் தம்முடைய மருத்துவ படிப்பை முடித்தவுடன் இந்த உறுதிமொழியின் பெயரிலேயே தன்னுடைய தொழிலைத் தொடங்க வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதியாகவே இன்றும் இருந்து வருகிறது. இவருக்குப் பிறகு கேலன் என்ற கிரேக்க அறிஞர் மருத்துவத் துறைக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளார். மனிதனுடைய உள் உடம்பின் அமைப்பை அறிவதற்கு இறந்து போனவர்களின் உடலை அறுத்து அதில் இருந்து கற்றுக் கொள்ளும் முறையை முதன் முதலில் ஏற்படுத்தியவர் இவரே. இதை அவர் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையேயும் தொடர்ந்து செய்துள்ளார். இன்றைக்கு உள்ள மனித உடலமைப்பு பற்றிய புரிதலுக்கு வித்திட்டு வைத்தவர் கேலன் அவர்களே.
இஸ்லாமிய மருத்துவம்
[தொகு]இதன் பின்னர் மருத்துவத்தின் வளர்ச்சியானது அரேபிய நாடுகளுக்கு மாறிவிட்டது. இஸ்லாம் மதம் தோன்றியவுடன் அரேபிய நாடுகளில் ஒரு வகையான மறுமலர்ச்சி தோன்றியது. இஸ்லாமிய பேரறிஞர்கள் மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்புகளையும் சாதனைகளையும் நிகழ்த்தினர். இதற்கு அடிப்படையான காரணம் அரேபியர்கள் சிறந்த கடல் வணிகர்களாகவும் பல நாடுகளுக்கு சென்று வரும் சுற்றுலாப்பயணிகளாகவும் விளங்கியதுதான். அவர்கள் மேலை நாடுகளுக்கு பயணம் செய்த போது அங்கிருந்த பொருள்களுடன் மட்டும் வணிகம் செய்யவில்லை .அங்கிருந்து ஹிப்போகிரடீஸ் மற்றும் கேலன் அவர்களின் மருத்துவ நூல்களையும் அரேபிய தேசத்திற்கு கொண்டு வந்தனர் அவை அரேபிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டபோது ஒரு சிந்தனை புரட்சியை ஏற்படுத்தியது. அதுபோன்றே அவர்கள் கீழை நாடுகளுடன் வணிகத் தொடர்புக்காக சென்றபோது சித்த, ஆயுர்வேத, சீன மருத்துவ முறை குறித்த நூல்களையும் கொணர்ந்து அரேபியாவை வளப்படுத்தினர். இவ்வாறு பொருள் வணிகம் என்பது கருத்து சேகரிப்புக்கும் உதவியது இது அரேபியாவின் மருத்துவத்துறையில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியது. அவிசென்னா, அபுல்காசி, அவென்சா, நாபிஸ், அவோரஸ் போன்ற அரேபிய மருத்துவ அறிஞர்கள் தோன்றி புதிய கருத்துகளை முன் மொழிந்தனர். ரேஸஸ் என்ற மருத்துவ அறிஞர் குழந்தைகள் மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகின்றார். இவர் கிரேக்க மருத்துவத்தின் அடிப்படையாக விளங்கிய "திரவ கோட்பாட்டினை" மறுத்து நோய்களைக் கண்டறிவதை மேலும் துல்லியமாக மாற்றி அமைத்தார்.
ஐரோப்பிய மருத்துவம்
[தொகு]ஐரோப்பாவின் மறுமலர்ச்சி காலம் (14, 15 நூற்றாண்டு) மதம், மருத்துவம் உள்ளிட்ட பலதுறைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது ஐரோப்பாவில் புதிய புதிய சிந்தனையாளர்களும், அறிவியல் ஆய்வாளர்களும், மருத்துவ அறிஞர்களும் தோன்றினர். மருத்துவத்தைப் பற்றிய கருத்துகளில் ஒரு பெரிய மாற்றம் எற்பட்டது அந்த கட்டத்தில் கொடுமையான நோய்களான பிளேக் போன்றவை ஐரோப்பா கண்டத்தை ஆட்டிப்படைத்து. 'கருப்பு மரணம்' என்று அழைக்கப்படும் பிளேக் நோயினால் இரண்டு நூற்றாண்டுகள் ஐரோப்பிய நாடுகள் சொல்லொணா துயர் அனுபவித்து வந்தன. ஆனால் அரேபிய நாடுகள் இந்த நோய்களில் இருந்து விடுபட்டே காணப்பட்டது இந்த உண்மை மேலை நாட்டு அறிஞர்களிடத்தில் புது வகை எண்ணங்களைத் தோற்றுவித்தன. தாங்கள் இதுவரை கொண்டிருந்த கருத்துகளைக் குறித்து மறு ஆய்வு செய்யத் தொடங்கினர். இதனால் ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலம் தொடங்கியது.
கிரேக்க ரோமானிய கருத்துகளின் அடிப்படையில் அதுவரை ஆட்சிபுரிந்து வந்து மருத்துவக் கருத்துகள் புறம் தள்ளப்பட்டன. இபேன் - அல் - நபிஷ், வேஸேலியஷ் போன்ற அரேபிய, இஸ்லாமிய, மருத்துவ அறிஞர்களின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இது பழமைவாதத்தில் இருந்த மருத்துவியல் அறிவியலை நோக்கி எடுத்து வைத்த இரண்டாவது அடியாகும். மருத்துவத் துறையில் பல சோதனைகள் செய்யப்பட்டன. கிரேக்க அறிஞர்களின் ' திரவக் கோட்பாடு' மறுக்கப்பட்டது. வில்லியம் ஹார்வி என்பவர் இரத்தம் ஒரே இடத்தில் தங்கி இருக்கிறது என்ற கருத்தினை மறுத்து அது உடல் முழுதும் சுற்றி வருகிறது என்ற கருத்தினை முன் வைத்தார்.. முன் வைத்தது மட்டுமல்லாமல் அதை அறிவியல் பூர்வமாக நிருபிக்கவும் செய்தார் விலங்குகளின்மீது அறுவைச் சிகிச்சை செய்வதன் மூலமாக இரத்தம் உடலின் பல பாகங்களிலும் சுற்றிக்கொண்டு இருக்கிறது என்பதை நிருபித்தார்.
1880இல் ராபர்ட் கோக் குறிப்பிட்ட சில வகை நோய்கள் பாக்டீரியா என்ற நுண்ணுயிர்களால் ஏற்படுகின்றன என்பதை அறிவியல் முறையில் நிருபித்தார். அவை ”காக்ஸ் கோட்பாடுகள்” என்று அழைக்கப்பட்டு இன்றும் மருத்துவத் துறையில் போற்றப்பட்டு வருகின்றன. 18ம் நூற்றாண்டிற்குப் பின் மருத்துவ வளர்ச்சியானது மேலை நாடுகளை குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை மையமிட்டே நடந்து வருகிறது. ஜெர்மன், பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் மருத்துவத் துறையைச் செழுமைப்படுத்தும் விதமாக பல மருத்துவ கண்டுபிடிப்புகளையும் கோட்பாடுகளையும் நிறுவினர். (எ. கா) ஜோசப் லிஸ்டர் என்பவர் நமது கைகளில் உள்ள நுண்ணுயிர் கிருமிகள் வழியாக நோயாளிகளுக்கு தொற்று ஏற்படக் கூடும் என்று முதன் முதலில் கூறினார். எனவே மருத்துவர்கள் நோயாளிகளை பரிசோதனை செய்த பிறகு தூய நீரினால் அல்லது சவர்க்காரத்தினால் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் மற்ற நோயாளிகளை பரிசோதிக்க வேண்டும் என்ற முறையை ஏற்படுத்தினார். இது குறிப்பாக பிரசவம் பார்க்கும் மருத்துவ அறிஞர்களுக்கு பொருந்தும் என்பது அவருடைய வாதம்.