அறச்சலூர் இசைக்கல்வெட்டு
அறச்சலூர் இசைக்கல்வெட்டு, ஈரோடு மாவட்டம் அரச்சலூர் என்னும் ஊரில் உள்ள நாகமலைக் குன்றில் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இசைக்குறிப்புக் கல்வெட்டைக் குறிப்பிடுகின்றது[1]. இக்கல்வெட்டில் த-தை-தை என்பன போன்ற இசையமைதிகளுக்கான குறிப்புகள் (ஸ்வரங்கள்) உள்ளதாக இம்மலையின் முன்புறமுள்ள பலகை கூறுகிறது. சமணர்களின் படுக்கையாகவும் இங்குள்ள குகை இருந்துள்ளது. பாறையில் செதுக்கப்பட்ட உணவுத் தட்டும் குவளையும் இங்குள்ளது. எழுத்தும் புணருத்தான் மணிய வண்ணக்கன் சாத்தன் என்று எழுதப்பட்ட கல்வெட்டும் ஓரிணை மாந்தரின் ஆடற்காட்சியுள்ள பாறைச் சித்திரமும் எழுதப்பட்டுள்ளது[2].[3] [4] வண்ணக்கன் என்பவன் பொன்னையும் மணியையும் மாற்று (தரம்) பார்ப்பவன். "தமிழின் மிகத் தொன்மையான இசைக்கல்வெட்டு இதுவே" என்று மலையின் முகப்பில் தமிழக அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையால் வைக்கப்பட்டுள்ள பலகை கூறுகிறது.
அமைவிடம்
[தொகு]இது ஈரோட்டிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கரூர், திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு மையப்பகுதியில் இவ்வூர் உள்ளது. இவ்வூர் கொங்கு மண்டலத்திற்குட்பட்டது. மலையின் பக்கவாட்டிலிருந்தோ மேலேயிருந்தோ பார்க்கும்போது கிழமேலாக சுமார் பத்து கிலோ மீட்டர் நீளத்திற்கு பாம்பு போல் தோன்றுவதால் இம்மலை நாகமலை எனவும் அழைக்கப்படுகிறது
காலம்
[தொகு]இக்கல்வெட்டும் சித்திரமும் ஒரே நபரால் எழுதப்பட்டவையா, அருகிலுள்ள தட்டு குவளை போன்ற பாறைச் செதுக்கங்கள் சமணர்களால் உருவாக்கப்பட்டவையா என்பன போன்ற விவரங்கள் அறியப்படமுடியவில்லை. ஆனால் எழுத்தும் புணருத்தான் மணிய வண்ணக்கன் சாத்தன் என்றுள்ள வட்டெழுத்துக்குறிப்பின் வடிவத்தைக் கொண்டு இது கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என ஆய்வாளர்கள் சான்றுரைத்ததாக அறியலாம்.
சமணர் படுக்கை
[தொகு]இப்பகுதியிலிருந்து சுமார் இருபது மைல் தொலைவுள்ள பெருந்துறை விஜயமங்கலத்தில் சமண மதத் தீர்த்தங்கரர் வழிபாட்டுத்தலம் இருந்தமைக்கான சான்றுள்ளதால் இவ்வறச்சலூர் நாகமலைப் பாறைக் குகைகளிலும் சமணர்களே படுக்கையமைத்துத் தங்கியிருந்திருப்பர் என ஊகிக்கமுடிகிறது.
1
த | தை | தா | தை | தா |
தை | தா | தே | தா | தை |
தா | தே | தை | தே | தா |
தை | தா | தே | தா | தை |
த | தை | தா | தை | த |
2
கை | த | தை | த | கை |
த | கை | த | கை | த |
தை | த | கை | த | தை |
த | கை | த | கை | த |
கை | த | கை | த | கை |
அமைதி பற்றி
[தொகு]5 எழுத்துகள் 5 வரிசைகளில் உள்ளன. சமணர் படுக்கைகளுக்கு மேலே வலப்புறத்தில் உள்ளன. இவை இடமிருந்து வலம், வலமிருந்து இடம், மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என்று எப்படிப் படித்தாலும் ஓரிசையாக வருகின்றன. அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் பாலை என்னும் படவடிவ இசைக்குறிப்புகள் உண்டு என்றும், அது வட்டப் பாலை, சதுரப் பாலை என இரு வகைப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் இக் கல்வெட்டில் உள்ளவை சதுரப் பாலை இசை ஆகும். இந்தக் கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துக்களில் தாமிழி என்னும் பிராமி எழுத்துக்களும், வட்டெழுத்தின் தொடக்க நிலை எழுத்துக்களும் உள்ளன. இந்த எழுத்துக்களுக்கு அருகில் மனித உருவக் கீறல்களும், சூலம், அருகன் முக்குடை போன்ற வடிவங்களும் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பேராசிரியர் குழு (1999). இளங்கலை இலக்கியம். சென்னைப் பல்கலைக்கழகம்.
- ↑ http://www.tamilvu.org/courses/degree/c031/c0314/html/c0314331.htm 3.1.1 இசை
- ↑
எழுத்தும் புணருத்தான் மணிய
வண்ணக்கன் தேவன் சாத்தன்
என்பது கல்வெட்டு - ↑ மணிய என்பதை மலைய என்றும் மசியன் என்றும் படிக்கின்றனர்.
- ↑ கட்டுரையாளர் பெ. வாசுகி பாகுபலி, சென்னை, மாத இதழ் "அருகன் தத்துவம்", Volume 8, Issue 7 தலைப்பு "தமிழகத் தொல்சின்னங்கள் சொல்லும் சமணம்", பக்கம் 18-20