உள்ளடக்கத்துக்குச் செல்

அரியநாச்சி அம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரியநாச்சி அம்மன் என்பது ஒரு தமிழ் நாட்டார் தெய்வம் ஆகும். இத்தெய்வத்திற்கான கோயில் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டம், நல்லுக்குறிச்சி கிராமத்தில் உள்ளது.

பெயர் வந்த விதம்

[தொகு]

இந்த கிராமிய தெய்வத்திற்கு அரியநாச்சி அம்மன் என்ற பெயர் வந்த காரணம் இவர் ஒரு அரிசனர் என்பதால் அரிசனச்சி என்பதற்கு பதிலாக அரியநாச்சி என்று பெயர் வைக்கப்பட்டு வணங்கப்பட்டும் வருகிறார் என்று செவிவழியாக கூறப்படுகிறது.[சான்று தேவை]

அரியநாச்சி குறித்த செவிவழிக் கதை

[தொகு]

நீண்ட காலத்துக்கு முன்பு இந்த ஊரில் உள்ள தாழ்த்தப்பட்ட ஒரு பெண்ணை இதே ஊரைச் சேர்ந்த சாதி இந்து இளைஞன் ஒருவன் விரும்பினான். மணந்தாள் அவளையே மணப்பது என்ற முடிவோடு அவன் இருந்தான். ஆனால் அனது குடும்பத்தார் ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை எப்படி திருமணம் செய்விப்பது? அவ்வாறு செய்வித்தால் ஊர் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்று மறுத்துவந்தனர். இதையடுத்து அந்த இளைஞன் தான் காதலிக்கும் அந்தப் பெண்ணை சந்தித்து தன் காதலைக் கூறி அவளின் சம்மமதத்தைக் கேட்டுள்ளான். அதற்கு அந்தப் பெண் நீங்கள் வேறு சாதி நான் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவள். நம் திருமணத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவே இதற்கு ஒத்துக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டாள்.

ஆனால் இவற்றை ஏற்றுக் கொள்ளாத அந்த இளைஞன். அவள் நினைவாகவே இருந்துள்ளான். அவளையே தனக்கு மணம் முடிக்கவேண்டும் இல்லை என்றால் தான் இறந்துவிடுவேன் என்று தன் குடும்பத்தாரிடம் அடம்பிடித்தபடி இருந்துள்ளான். இதை காண சகியாத இளைஞனின் குடும்பத்தார் வேறு வழியின்றி ஒரு திட்டத்துடன் சென்று அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று பெண் கேட்டுள்ளனர. பெண் வீட்டார் மறுத்த நிலையில் அவர்களை பேசி சம்மதிக்கவைத்து. திருமணத்தை முடித்துவைத்தனர்.

திருமணமான மூன்றே மாதத்தில் தோட்டத்துக்குச் சென்ற புது மணப்பெண் இறந்து கிடந்தாள். என்ன ஏது என்று தெரியாமல் அவளை அடக்கம் செய்தனர். அவள் இறந்த மூன்றாம் நாள் தன் கணவனின் கணவில் தோன்றிய அவள் என்னை உங்கள் தந்தைதான் ஆள் வைத்து கொன்றுவிட்டார், என்னை சாமியாக நினைத்து வணங்குங்கள் என்று என்றாள். இதையடுத்து ஆத்திரம் கொண்ட அந்த இளைஞன் தன் தந்தையைக் கொன்றுவிட்டு, தன் மனைவியின் வீட்டுக்குப்போய் தன் மனைவியை கொன்ற தன் தந்தையை தானே கொன்றுவிட்டதாகவும், அவள் இல்லாமல் வாழ தன்னால வாழ இயலாது என்பதால் நஞ்சருந்திவிட்டாதவும், இன்னும் சற்று நேரத்தில் தான் இறந்துவிடுவேன் என்றும், தான் இறந்தபிறகு தன் உடலை நீங்களே அடக்கம் செய்யவேண்டும். தன் மனைவிக்கு கோயில் கட்டி கும்பிடவேண்டும் என்று கூறிவிட்டு இறந்தான். அவன் கூறியபடியே அவன் உடலை அவர்கள் அடக்கம் செய்து, அவன் மனைவியை தெய்வமான நினைத்து வழிபாடத் துவங்கினர்.

சில காலம் சென்ற பிறகு அநத இளைஞனின் வீட்டாரும் அந்தப் பெண்னை தன் வீட்டு மருமகள்தானே என்று அவர்களும் வழிபடத் துவங்கினர். அந்தப் பெண் இறந்த இடத்தில் அவளுக்கு சிலைவைத்து கோயில் கட்டினர்.

வழிபாடு

[தொகு]

இந்தக் கோயிலில் பூசாரியாக தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரே இருக்கிறார். கோயில் திருவிழாவானது வைகாசி மாதம் நடக்கிறது. அப்போது கிடாய் வெட்டி பொங்கல் வைத்து முளைப்பாரி எடுத்து, மாவிளக்கு படைத்து நடத்தப்படுகிறது. திருவிழாவானது ஊரில் உள்ள மூன்று சாதி மக்களிடம் இருந்தும் வசூலிக்கப்படும் பணத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் ஏற்பாட்டில் நடக்கிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியநாச்சி_அம்மன்&oldid=3189797" இலிருந்து மீள்விக்கப்பட்டது