உள்ளடக்கத்துக்குச் செல்

அரியட் வின்சுலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹரியட் வின்சுலோ
Harriet Winslow
பிறப்பு(1796-04-09)9 ஏப்ரல் 1796
நோரிச், கனெடிகட், ஐக்கிய அமெரிக்கா
இறப்புசனவரி 14, 1833(1833-01-14) (அகவை 36)
உடுவில், யாழ்ப்பாண மாவட்டம், பிரித்தானிய இலங்கை
தேசியம்அமெரிக்கர்
அறியப்படுவதுமறைப்பணியாளர், ஆசியாவின் முதல் பெண்கள் உறைவிடப் பள்ளியை நிறுவியவர்
சமயம்கிறித்தவர்
வாழ்க்கைத்
துணை
வண. மிரோன் வின்சுலோ (தி. 9 சனவரி 1819)
பிள்ளைகள்அரியட் லாத்ரொப் வின்சுலோ (19 ஏப்ரல் 1829, உடுவில் - 1 செப்டம்பர் 1861, பிலடெல்பியா)

அரியட் உவாட்சுவர்த் வின்சுலோ (Harriet Wadsworth Winslow; 9 ஏப்ரல் 1796 – 14 சனவரி 1833) என்பவர் வெளிநாட்டுப் பணிகளுக்கான அமெரிக்க ஆணையர் குழுவில் இணைந்த ஒரு முக்கிய மறைப்பணியாளர் ஆவார்.

ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் நோரிச் என்ற இடத்தில் 1796 இல் இவர் பிறந்தார். இவர் தனது 23-ஆவது அகவையில் 1819 சனவரி 9 இல் சக மறைப்பணியாளரான வண. மிரோன் வின்சுலோவை மணந்தார். இவர்கள் இருவரும் அமெரிக்க இலங்கை மறைப்பணியின் ஒரு பகுதியாக இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்.[1][2] இவர்கள் 1819 சூன் 8 இல் இலங்கை வந்து சேர்ந்தனர்.

இவர்கள் 1820 பெப்ரவரி 17 இல் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்து, தமிழர்கள் மத்தியில் பணியாற்றிய உடுவில் மடப்பள்ளியில் நிலைகொண்டனர்.[1] அரியட் பெண்களின் கல்வியில் குறிப்பாகக் கவனம் செலுத்தினார்.[1] இவர் யாழ்ப்பாணம், உடுவிலில் உடுவில் மகளிர் கல்லூரியை ஆசியாவின் முதல் பெண்கள் உறைவிடப் பள்ளியாக 1824 சனவரியில் நிறுவினார்.[2] இக்கல்லூரியின் முதலாவது அதிபராகவும் பணியாற்றினார். இது மறைப்பணிக்கான மடப்பள்ளி என்றும் பெண்கள் மத்திய பள்ளி என்றும் அழைக்கப்பட்டது.[2] அரியட் எண் கணிதம், புவியியல் ஆகிய பாடங்களில் கவனம் செலுத்தினார்.[1] தையல் மற்றும் வீட்டுக் கலைகளில் அறிவுறுத்தல்களை மேற்பார்வையிட்டார். பள்ளியின் ஆன்மிக வாழ்வில் ஆழ்ந்த அக்கறை கொண்ட இவர், தனது சொந்தக் குழந்தைகளைப் போலவே, ஒவ்வொரு நாளும் ஒரு சிறுமியை தனது பிரார்த்தனையில் நினைவுகூர்ந்தார். முதல் 50 ஆண்டுகளில் பட்டம் பெற்ற ஒவ்வொரு பெண்ணும் கிறித்தவர்களாக மாறினர்.[1] வின்சுலோ அவரது கணவரின் செயலாளராகவும் பணியாற்றினார்.[1] 1833 சனவரி 14 திங்கட்கிழமை காலையில் இறந்தார்.[1] இவரது இறப்புச் செய்தி அமெரிக்காவை எட்ட முன்னரே, அரியட்டின் ஒரு சகோதரி, எலிசபெத் கோயிட் அட்சிங்சு 1833 சூலை மாதம் அமெரிக்க இலங்கை மறைப்பணியில் சேர்ந்து கப்பலில் இலங்கை வந்து சேர்ந்தார்.[1] இவரது ஏனைய சகோதரிகளான சார்லோட் எச். செரி, அரியட் ஜோனா பெரி ஆகிய இரு சகோதரிகளுக்கு அருகில் அரியட் அடக்கம் செய்யப்பட்டார்.[1]

மிரோன் வின்சுலோ தனது மனைவியின் நினைவுக் குறிப்பை எழுதி, அவர் இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1835 ஆம் ஆண்டில் அதை வெளியிட்டார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியட்_வின்சுலோ&oldid=3488914" இலிருந்து மீள்விக்கப்பட்டது