அம்ரீஷ் பூரி
அம்ரீஷ் பூரி | |
---|---|
The Hero: Love Story of a Spy - இந்தி திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின்போது அம்ரீஷ் பூரி | |
பிறப்பு | லாகூர், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா , தற்போது பாகித்தானில் உள்ளது[1] | 22 சூன் 1932
இறப்பு | 12 சனவரி 2005 மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 72)
இறப்பிற்கான காரணம் | பக்கவாதம் |
பணி | நடிப்பு |
செயற்பாட்டுக் காலம் | 1970–2005 |
வாழ்க்கைத் துணை | ஊர்மிளா திவெகர் (1957–2005) (பூரியின் இறப்பு வரை) |
பிள்ளைகள் | இராஜீவ் பூரி (மகன்) நம்ரதா (மகள்) |
அம்ரீஷ்லால் பூரி (Amrishlal Puri) (22 சூன் 1932 – 12 சனவரி 2005[2]) ஓர் இந்திய நடிகர் ஆவார். இவர் இந்திய நாடகம் மற்றும் திரைப்படத் துறையில் மிக முக்கியமானவர் ஆவார். இவர் சத்யதேவ் துபேய் மற்றும் கிரிஷ் கர்னாட் ஆகிய சம காலத்திய நாடக எழுத்தாளர்களுடன் பணிபுரிந்துள்ளார். இவர் பாலிவுட்டின் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து இந்திய அளவில் அத்தகைய கதாபாத்திரங்களின் அடையாளமாக விளங்கினார். சேகர் கபூரின் இந்தி திரைப்படமான மிஸ்டர் இந்தியா (1987) என்ற திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரமான மொகாம்போ என்ற பெயரால் நினைவுகூரப்படுகிறார். மேற்கத்திய இரசிகர்களைப் பொறுத்தவரை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஹாலிவுட் திரைப்படமான இண்டியானா ஜோன்ஸ் அண்ட் டெம்பிள் ஆஃப் டூம் திரைப்படத்தில் நடித்த "மோலா ராம்" என்ற பாத்திரத்தின் பெயராலும் நினைவு கூறப்படுகிறார். பூரி மூன்று முறை சிறந்த துணை கதாபாத்திரத்திற்கான பிலிம்ஃபேர் விருதுகளைப் பெற்றுள்ளார்.
தொடக்க கால வாழ்க்கை
[தொகு]அம்ரீஷ் பூரி, பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப்பில் உள்ள ஜலந்தரில் ஒரு பஞ்சாபி பேசும் குடும்பத்தில் "லாலா நிகல் சந்த் பூரி" மற்றும் "வேத் கௌர்" ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு "சமன் பூரி" மற்றும் "மதன் பூரி" என்ற இரண்டு மூத்த சகோதரர்களும் (இவர்களும் நடிகர்களாவர்) மூத்த சகோதரி "சந்திரகாந்தா" மற்றும் ஒரு இளைய சகோதரர் "ஹரீஷ் பூரி" என நான்கு உடன்பிறந்தோர் உள்ளனர். இவர் நடிகரும், பாடகருமான "கே.எல்.சாய்கல்" என்பவரின் மூத்த மைத்துனர் ஆவார்.[3]
தொழில் வாழ்க்கை
[தொகு]அம்ரீஷ் பூரி 1967 ஆம் ஆண்டிற்கும் 2005 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் 400 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். மேலும், இவர் பாலிவுட்டின் மிகச்சிறந்த வில்லன் நடிகர்களுள் ஒருவராவார்.
அம்ரீஷ் பூரி அவருடைய மூத்த சகோதரர்கள் மதன் பூரி மற்றும் சமன் பூரி ஆகியோர் தனக்கு முன்னதாக திரைப்படத்துறையில் நுழைந்த வில்லன் கதாபாத்திரங்கள், அவர்களுள் தன்னை நிரூபித்தவர் ஆவார். திரைத்துறையில் நுழையும் பொருட்டு முதலில் மும்பைக்கு வந்தார், இவர் முதலில் நடிகராவதற்காக நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி பெறவில்லை. பதிலாக அவர் இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் கீழான தொழிலாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் வேலை கிடைக்கப்பெற்றார். அதே நேரத்தில் பிரித்வி தியேட்டர் என்ற நாடகக்குழுவில் இணைந்து "சத்யதேவ் துபேய்" என்பவரால் எழுதப்பட்ட நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இறுதியாக, இவர் நன்கறியப்பட்ட மேடை நாடக நடிகராக ஆனதுடன் 1979 ஆம் ஆண்டில்,சங்கீத நாடக அகாதமி விருதினையும் வென்றார்.[4] இத்தகைய மேடை நாடக அனுபவமும், அங்கீகாரமும் அவரை முதலில் தொலைக்காட்சியிலும், இறுதியாக, திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பைக் கொடுத்தன எனலாம். இவரது மற்ற சகோதரர்களுடன் ஒப்பிடும் போது மிகவும் காலதாமதமாக, அதாவது 40 வயதில் தான் இவர் திரைத்துறையில் நுழைந்துள்ளார். பூரி பாலிவுட், கன்னடம், மராத்தி, ஹாலிவுட்,பஞ்சாபி, மலையாளம்,தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல பிற இந்திய மொழி திரைப்படங்களில் வெற்றிகரமாக பணி புரிந்திருந்தாலும், இவர் பாலிவுட் திரைப்படங்களில் நடித்தமைக்காக நன்கறியப்பட்டவர் ஆவார்.
1970 ஆம் ஆண்டுகள் வரை பூரி பெரும்பான்மையாக துணைக் கதாபாத்திரங்களில், அதிலும் வழக்கமான வில்லனின் அடியாட்களில் ஒருவராக நடித்து வந்தார். 1980 இல் வெளிவந்த "ஹம் பாஞ்ச்" என்ற வெற்றிப்படத்தில் முதன்மை வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு, அவர் முக்கியமான வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.
1982 ஆம் ஆண்டில் "சுபாஷ் காயின்" இயக்கத்தில் வெற்றித்திரைப்படமான "விதாடா" என்ற படத்தில் "ஜாகவார் சௌத்ரி" என்ற கதாபாத்திரத்திலும், அதே ஆண்டில் திலிப் குமார் மற்றும் அமிதாப் பச்சன் ஆகிய இரண்டு பெரும் நடிகர்கள் நடித்த "சக்தி" என்ற திரைப்படத்தில் "ஜேகே" என்ற முதன்மையான வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mogambo Amrish Puri lives on: A tribute". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 11 January 2010. பார்க்கப்பட்ட நாள் 11 May 2016.
- ↑ "Amrish Puri is Dead". January 12, 2005. Archived from the original on 9 July 2013.
- ↑ K. L. Saigal: The Definitive Biography. Penguin UK. பார்க்கப்பட்ட நாள் 17 October 2016.
- ↑ Amrish Puri at gatewayofindia