அனத்தோலியப் படவரியுருக்கள்
அனத்தோலியப் படவரியுருக்கள் (Anatolian hieroglyphs) என்பன நடு அனத்தோலியாவில் தோன்றி வளர்ந்த உள்நாட்டுக்குரிய உருபனெழுத்து முறை ஆகும். இம்முறையில் ஏறத்தாழ 500 குறியீடுகள் காணப்படுகின்றன. இவை ஒருகாலத்தில் இட்டைட்டு படவரியுருக்கள் (Hittite hieroglyphs) என அழைக்கப்பட்டுவந்தன. எனினும் இது இட்டைட்டு மொழிக்கன்றி லூவிய மொழிக்காகவே உருவானவை. இதனால் ஆங்கில நூல்களில் இவை லூவியப் படவரியுருக்கள் எனவும் குறிக்கப்பட்டன. எழுத்து அமைப்பியல் அடிப்படையில் இது எகிப்தியப் படவரியுருக்களை ஒத்தது. ஆனால், அனத்தோலியப் படவரியுருக்கள், எகிப்தினதைப் போல் புனிதத்தன்மை கொண்டவையாகக் கருதப்படவில்லை. அத்துடன் இட்டைட்டு ஆப்பெழுத்துக்களுடனும் இதற்குத் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.[1][2][3]
வரலாறு
[தொகு]அனத்தோலியப் படவரியுருக்கள் கிமு மூன்றாவது ஆயிரவாண்டு, இரண்டாவது ஆயிரவாண்டுக் காலப் பகுதிகளில் அனத்தோலியாவிலும், தற்கால சிரியப் பகுதிகளிலும் பரவியிருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இவற்றின் மிக முந்திய எடுத்துக்காட்டுகள், தனிப்பட்டவர்களின் முத்திரைகளிலேயே காணப்படுகின்றன. இவற்றில் உள்ள குறிகள் பெயர்கள், பதவிகள், மங்கலக் குறியீடுகள் போன்றவையே எனக் கருதப்படுகின்றது. அத்துடன், இவை ஒரு மொழிக்கு உரியனவா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. பெரும்பாலான உண்மை எழுத்துக்கள் கல்வெட்டுக்களாகவே காணப்படுகின்றன. சில ஈயத் தகடுகளில் எழுதப்பட்டவைகளும் உண்டு.
லூவிய மொழிக்கு உரியதாக உறுதிப்படுத்தப்பட்ட முதல் கல்வெட்டு கிமு 14 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதி சார்ந்த பிந்திய வெண்கலக் காலத்தைச் சேர்ந்தது. பின்னர் இரண்டு நூற்றாண்டுகள் மிகவும் அரிதாகவே இது பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால், கிமு 10 தொடக்கம் 8 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியான தொடக்க இரும்புக் காலத்தில் இப்படவரியுருக்கள் மீண்டும் காணப்படுகின்றன. கிமு 7 ஆம் நூற்றாண்டளவில் லூவியப் படவரியுருக்கள் மறைந்துவிட்டன.
வெளியிணைப்புகள்
[தொகு]- http://www.ancientscripts.com/luwian.html
- லூவியப் படவரியுருக்கள் பரணிடப்பட்டது 2006-07-12 at the வந்தவழி இயந்திரம் இந்திய-ஐரோப்பியத் தரவுத் தளத்தில் இருந்து.
- Sign list, with logographic and syllabic readings
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Final Accepted Script Proposal
- ↑ Payne, A. (2004). Hieroglyphic Luwian. Wiesbaden: Harrassowitz. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-447-05026-8.
- ↑ Melchert, H. Craig (2004). "Luvian". The Cambridge Encyclopedia of the World's Ancient Languages. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-56256-2.