அடுக்கங்கல் தமிழ்-பிராமிக் கல்வெட்டு
அடுக்கங்கல் நெகனூர்பட்டி | |
---|---|
அமைவிடம் | செஞ்சி, இந்தியா |
ஆள்கூற்றுகள் | 12°17′14″N 79°26′42″E / 12.28734°N 79.444885°E |
அடுக்கங்கல் தமிழ்-பிராமிக் கல்வெட்டு தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், நெகனூர்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அடுக்கங்கல் குன்றின் அடிப்பகுதியில் உள்ள ஒரு பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது.[1]. நெகனூர்பட்டி செஞ்சிக்கு வடகிழக்கே 6 கிலோமீட்டர் (3.7 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
அடுக்கங்கல் குன்று
[தொகு]பெரிய பாறைக்கற்கள் ஒன்றன் மேல் ஒன்றாகக் குவிந்து கிடப்பது போல் தோற்றமளிப்பதால் அடுக்கங்கல் என்ற வந்தது. [1]அடுக்கங்கல் குன்றின் அடியில் வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்களைக் கொண்ட இரு சமண குகைகள் உள்ளன.[2] இக்குகைக்கு வெளியே வலப்பக்கத்தில், பாறை சுவற்றில் சட்டமிடப்பட்ட கி.பி. 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் தமிழ்-பிராமிக் கல்வெட்டு காணப்படுகிறது.
சமணர் குகைகள்
[தொகு]அடுக்கங்கல் குன்றின் அடிப்பகுதியில் இருபுறமும் இரண்டு குகைகள் அமைந்துள்ளன. இரண்டு குகைகளிலும் சமணத் துறவிகள் பயன்படுத்திய கல் படுக்கைகளுக்கான தடயங்கள் உள்ளன.ஒரு குகைக்கு அருகில் ஒரு சிறிய குளம் காணப்படுகிறது.
பாறை ஓவியங்கள்
[தொகு]குளத்தை ஒட்டி அமைந்துள்ள பாறையில் கி.மு. 1000 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் வெண்ணிற பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. ஓவியத்தில் ஆண்கள் மட்டுமே காணப்படுகின்றனர். விலங்குகள் எதுவும் காணப்படவில்லை. இந்த ஓவியங்களை வரைய சுண்ணாம்பைப் பயன்படுத்தியிருக்கலாம். சில ஓவியங்கள் மங்கியுள்ளன.[3]
தமிழ்-பிராமி கல்வெட்டு
[தொகு]கி.பி. 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் அடுக்கங்கல் தமிழ்-பிராமி கல்வெட்டை முதன்முதலில் தொல்லியல் ஆய்வாளர் எஸ்.ராஜவேலு 1992 ஆம் ஆண்டு கண்டறிந்தார். தமிழ்-பிராமி எழுத்து முறையிலிருந்து வட்டெழுத்தாக வளரும் நிலையில் இக்கல்வெட்டு உள்ளது. இதற்கு சான்றாக இக்கல்வெட்டின் மெய்யெழுத்துக்கள் அனைத்தும் புள்ளியுடன் காணப்படுகிறது. இக்கல்வெட்டின் தனித்தன்மையும் இதுவேயாகும்.[4][5]
கல்வெட்டு பாடம்:
பெரும் பொகழ் சேக்கந்தி தாயியரு சேக்கந்தன்னி செ யி வித்த பள்ளி [4][1]
பொருள்:
பெரும்புகை என்னும் ஊரைச் சேர்ந்த சேக்கந்தி என்னும் சமணப் பெண் துறவியின் தாயார் சேக்கந்தி செய்து அளித்த பள்ளி.[4]
கி.பி. 4 முதல் இவவிடம் சமணத்துறவிகளின் வாழ்விடமாக இருந்துள்ளது. தாய் மகள் ஆகிய இருவர் பெயரும் சேக்கந்தி என்பதாகும். ‘கந்தி’ என்பது சமணப் பெண் துறவிகளைக் குறிக்கும் சொல்லாகும்.[6] பெரும்புகை எனற கிராமம் விழுப்புரம் மாவட்டம், வல்லம் வட்டத்தில் அமைந்துள்ளது.[7]
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 அடுக்கம்பாறை தமிழிணையம் - தமிழர் தகவலாற்றுப்படை
- ↑ தமிழ் பிராமி கல்வெட்டு பகுதியில் பாறைகள் வெடிவைத்து தகர்ப்பு தினமலர் ஆக 07, 2020
- ↑ Ramesh, D.(2005) "Nadunaattu Samanakovilkal" Second edition, Tamilventhan Pathippagam, Ulundurpettai
- ↑ 4.0 4.1 4.2 Sridhar, T. S. (2006) "Tamil-Brahmi Kalvettukal", First edition, State Department of Archaeology, Chennai
- ↑ சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள் பவானி, மா. கல்வெட்டியல் துறை. தமிழிணையம்
- ↑ தமிழகக் குகைக் கல்வெட்டுகளில் சமணம் ஐராவதம் மகாதேவன். வரலாறு.காம் இதழ் எண். 33 ஐராவதம் சிறப்புப் பகுதி
- ↑ Perumpugai Onefivenine